தலையங்கம்
சென்னை மாநகராட்சி வரலாற்றில் ஒரு அமைதிப் புரட்சி
இந்தியாவில் தலைசிறந்த மாநகராட்சியாக செயல்பட்டுவரும் சென்னை நகருக்கான 2008-09 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது!
வரியே இல்லாத ஒரு நிதிநிலை அறிக்கை 12.03.2008 அன்று அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளிகள் என்றால் ஏளனமாக விமர்சிக்கப்பட்ட காலம் போய், இன்றைய தினம் மற்ற கல்வி நிறுவனங்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல என்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சாதனை படைத்து வருகின்றன. கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 81 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளனர் மாணவ - மாணவிகள் என்பது சாதாரணமானதல்ல.
பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெறுவோருக்கு லேப்-டாப் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
பெரும்பாலும் ஏழை - எளிய மக்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள்தாம் மாநகராட்சிப் பள்ளிகள்.
அங்குத் தொடக்கப் பள்ளி முதல் பிளஸ் டூ வரை மாணவர்களுக்குக் கணினி பயிற்சி அளிக்க முடிவு எடுத்திருப்பதானது - பாராட்டத்தக்க சமூகநீதிச் சிந்தனையாகும். ஆங்கிலக் கல்விப் பயிற்சியும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுடுகாடுகள், இடுகாடுகளில் பணியாற்றும் தோழர்கள் வெட்டியான் என்று இனி அழைக்கப்படமாட்டார்கள். தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் என்பதும், இழிவைத் துடைத்தெறியும் மனிதன்பற்றிய உயர்வான மதிப்பீடாகும்.
மாநகராட்சிக்குச் சொந்தமான சுடுகாடு - இடுகாடுகளில் இனி கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது. இனி அனைத்தும் இலவசம்; மேலும் மின் சுடுகாடுகள் அதிகரிக்கப்படும்; உடலை அடக்கம் செய்யும்வரை - அதனைப் பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டிகள் ஏழைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும்; மயானத்துக்கு எடுத்துச் செல்லப் பயன்படும் வாகனங்களும் இலவசம் என்பதெல்லாம் - சென்னை மாநகராட்சி வரலாற்றில் ஒரு அமைதிப் புரட்சியாகும்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்களைத் தொடர்ந்து, மேலும் மூன்று மேம்பாலங்களைக் கட்ட ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. அதற்கு ஒரு தொலைநோக்குத் திட்டம் மிகவும் அவசியமும், அவசரமும் ஆகும். மேம்பாலங்களும், புறநகர்களும் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதில் தேவையில்லாத வகையில் அரசியல் மூக்கு நுழைக்கப்படுவது வருந்தத்தக்கதாகும்.
சில முக்கியமான இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்படும் என்பது - சென்னை மாநகர ஆட்சியின் மேன்மையை இந்தியா முழுமையும் பறைசாற்றும்.
கொசு ஒழிப்புப் பணிக்காக சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டு இருப்பது சரியான முடிவாகும். பெரிய வணிக வளாகங்களில் பொது கழிப்பறை வசதி திட்டம் அனைவராலும் பாராட்டப் படும். மாநகரம் முழுவதும் தேவையான கழிப்பறை கள் அவசியம். அவை சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டால், அதை வைத்தே மாநகராட்சியின் நிருவாகத் திறனைப் பெரிதும் பாராட்டும் பொதுக் கருத்து உருவாகிவிடும்.
சென்னை - மாநகராட்சியின் வரவு - செலவு அறிக்கையில் தொட்ட இடம் எல்லாம் புதுமையும், வளர்ச்சியும் ஊற்றெடுத்துப் பீறிட்டு எழுகிறது.
குப்பைக் கூளங்கள் இல்லாத, கொசுக் கடியில்லாத சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத ஒரு நகரமாக மேலும் இது உருவாகவேண்டும். பூங்காக்கள் மேம்படுத்தப் படவேண்டும்.
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளைத் தடுக்க இது மிகவும் அவசியமாகும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது கோயில் களுக்கு விதிவிலக்குகள் கொடுக்கக் கூடாது. சென்னையைப் பொறுத்தவரையில் நடைபாதைக் கோயில்கள் என்பது ஒரு பரந்த தொழில் சாம்ராஜ்ஜிய மாகவே நடைபெறுகிறது.
முக்கியமான சாலைகளில்கூட (எடுத்துக்காட்டு சென்னை சைதாப்பேட்டை, மாடப்பள்ளி எதிரிலும்) திருவான்மியூர் செல்லும் சாலையில் நடுநாயகமாக பெரும் ஆக்கிரமிப்பு) இந்த கோயில் ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்குப் பெரும் தொல்லையாக இருந்து வருகின்றன.
வேலூர் நாராயணன் அவர்கள் மேயராகயிருந்த காலகட்டத்தில் இதில் ஒரு புரட்சியே நடத்தி நல்ல பெயரை ஈட்டினார். அந்த வகையில் இன்றுவரை அவர் நினைவு கூரப்படுகிறார்.
இளமைத் துடிப்போடு, மிடுக்குடன் இன்றைய மேயர் திரு. மா. சுப்பிரமணியம் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
இந்த வீச்சில் சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடருமேயானால், இவர் காலத்தில் சென்னை புது வரலாறு படைக்கும் என்பதில் அய்யமில்லை.
வெள்ளுடை வேந்தர் நீதிக்கட்சியின் நிறுவனர் பிட்டி தியாகராயர் மேயராக இருந்து வரலாறு படைத்தது இந்த மாமன்றம். இவர் காலத்தில்தான் முதன்முதலாக மதிய உணவு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசனார் போன்ற நீதிக்கட்சி முன்னோடி தலைவர்களும் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்து முத்திரை பொறித்திருக்கின்றனர்.
நமது ஆற்றல்மிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மேயராக இருந்த அனுபவத்தை, தற்போதுள்ள மேயர் திரு. சுப்பிரமணியம் பகிர்ந்து, அவர் சாதனைகளைத் தொடர்கிறார்.
அய்ந்தாம் முறை கலைஞர் ஆட்சி மகுடத்தில் இதுவும் ஓர் ஒளிமுத்து!
அந்தச் சிறப்புமிக்க திராவிட இயக்க வரலாற்றின் வழிதோன்றல் என்ற பெருமையோடு மேலும் சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்.
கி. வீரமணி
ஆசிரியர் |