கவிதை
நடராஜர் “சிலையாக”
சமஸ்கிருதமே
கடவுளுக்குப் புரிந்த பாஷை!
நேற்று வந்த மார்வாரி
தமிழ்ப் பேசப் பழகிவிட்டான்;
இதுதானா கடவுள் சக்தி?
இனியெதற்கு பயபக்தி?!
அரசு ஆணை
கோவிலுக்குள் செல்லாதாம்;
அரசாங்க வேலைகளை
ஆக்கிரமித்த கூட்டம்
அதிகாரம் பேசுகிறது!
அரசுப் பணம் மட்டும்
உண்டியலுக்குள் செல்லுமோ?!
அன்று நந்தனார்;
இன்று
ஆறுமுகச் சாமி!
அழிக்கப் பாயும் குடுமிகளே!
புரிந்து கொள்ளுங்கள்;
இந்த நாள் அந்த நாளல்ல!
திருநீறு
பூசிவிட்டு, பூசிவிட்டு
பணம் பறித்த கூட்டம்
இன்று
பாதையடைக்கிறது!
இன்னுமென்ன தயக்கம்?
தீ மிதிப்பதை நிறுத்து;
தீட்சிதரை மிதி!
இன்றுவரை
காட்சி தராத கடவுளை
முதுகு காட்டி மறைந்திடும்
கோமாளிகள் கூட்டம்!
என்றும்போல
நடராஜர் சிலையாக!
நாளை
அய்யப்பன் கோவிலுக்குள்
பெண்கள் நுழையும்
நாளும் வரலாம்;
அடித்துச் சொல்கிறேன்...
குந்தியிருக்கும் அய்யப்பன்
எழுந்தோட மாட்டார்!
- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
புதுப்பாக்கள்
புளியந்தங்கச்சி
இராத்திரில பேய் கத்துதுன்னு
வெட்டிப்புட்டாங்க
வித்தகாசுல ஆடுவெட்டி
ஆத்தாவுக்கு கூத்துவெச்சாங்க
பள்ளிக்கூடம் போகும்போது
புளியம்பிஞ்சா பொறுக்கி
பலப்பத்துக்கெல்லாம் வித்திருக்கோம்!
பழமா ஆச்சின்னா உச்சி வர
ஏறி உலுக்கி
ஆயாத்தா பாட்டிகிட்ட
வெல்லிக்கிழங்கு திங்கிருக்கோம்!
மழைகாலத்துல இதுக்கு கீழேதான்
கெணறு தோண்டி தோட்டாலாம் வெடிச்சி
பப்பாளி பழுப்புல
தண்ணி வடிச்சிருக்கோம்
அப்பல்லாம் பேயி
எங்கல ஒண்ணுமே செஞ்சதில்ல...
இந்தா முண்டாசு கட்டினவங்கதான்
ஏதேதோ பேசி வெட்டிப்பூட்டாங்க
இப்பல்லாம் பள்ளிக்கொடம் போவும் போது
அழுவழுவா வருது!
அதனால நாங்கல்லாம்
ஒரு முடிவுக்கு வந்து
ஆயாத்தா குப்பையில
ரெண்டு பல்லோட மொலச்சிருந்த
புளியங்கண்ணா மெதுவா புடுங்கிவந்து
அதே பள்ளந்துல நட்டுபுட்டோம்.
தங்கச்சிபாப்பா பெரிசா
யாருக்கும் தெரியாம நான் வளத்திருக்கோம்
இனிமே
எங்க தங்கச்சி பாப்பாமேல
யார்னா கைய வெச்சா
அம்மாவுடவே மாட்டோம்
பேயாம் பேயி
புளுகு பேசியே
வெட்டி திண்ணுபுடுராங்க!
- த.வே. விக்கிரமாதித்தன், செய்யாறு
காற்றிலேயே....
காற்றில் இருந்து
விபூதி
குங்குமம்
எடுத்து தருபவர்
நேரடியாக
கண்களை மூடி
கடவுளிடமே பேசி
அருள்வாக்கு அள்ளி வீசுபவர்
கண்ணுக்கு தெரியாத
காத்து கருப்பையெல்லாம்
கட்டுபவர்
ஆட்டி வைப்பவர்
செய்வினைக் கெல்லாம்
எதிர் வினை செய்து
எடுத்துக் கொடுப்பவர்
இவ்வளவும்
காற்றிலேயே செய்யும்
எங்கள்
ஊர் மந்திரவாதி
பக்கத்து ஊரில்
படிக்கும்
தன் பையனிடம்
அடிக்கடி பேச மட்டும்
கழுத்தில்
கட்டி தொங்க
விட்டு இருக்கிறார்
காஸ்ட்லியான செல்போன்!
- கற்பனைப் பித்தன், பெரம்பலூர்
இந்தியா முன்னேறுகிறது
சேரி வீட்டில்
எழவு முடித்துப் போகிறது
அய்யர் வீட்டுக்கு
சாமியானா... சமத்துவம்!
வரம் வேண்டி
மலையேறினான்
படி நெடுகப் பாத்திரங்கள்
பசிக்குத் தட்டேந்தினான்
போடப்பட்டது
பிராத்தனைப் புத்தகம்
தாய்களால், தகப்பனால்
கொஞ்சப்பட்டதை
சொல்லி மகிழ்ந்தன
பெருசுகள் முதியோர் இல்லத்தில்.
இனி மழை பெய்தென்ன பயன் நிலம் தான்
அடமானத்தில் இருக்கிறதே
வன்முறை பெருகத்தான்
செய்யும்
சிறுவன் கையில்
துப்பாக்கி .... தீபாவளி
கோயில் நுழைவு
போராட்டமில்லை
அமைதியாய் திரும்புகிறது
தெரு நாய்
சாவுக்கு பயந்தவன்
வீரனில்லை
பார்
சேவல் சண்டை
நூறு பவுன்
ஒரு காருடன்
அனுப்பப்பட்டது பெண்ணும் மனச்சிறைக்கு
ஆயுள் கைதியாய்....
கடவுளுடன் சேர்த்து
பூசாரியும் போய்விட்டார்
பளிங்கு கட்டடத்திற்கு
குடி கட்டியவன் குடிசைக்கு
அருளாமலே....
தேநீர் கடை
இரட்டைக் குவளை
சாதி மறக்கும்
கல்லாப் பெட்டி
எல்லா அபிசேகமும்
சாமிக்கு பகலில்
இரவில் மொய்க்கும்
கடவுள் மேல்
கரப்பானும், எரும்பும்
பாலாறும் தேனாறும்
ஓடுகிறது
பார்ப்பனன் தொழிற்கூடம்
கோயிலில்
இந்தியா முன்னேறுகிறது
சாமியார்கள் எண்ணிக்கை
11 கோடி......
- அனுப்பபட்டி மா.பிரகாசு
|