தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
நாட்டு நடப்பு
அன்னை மணியம்மையார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
மனித உரிமை
ஹாலிவுட் கலை - 16
பகுத்தறிவு
இதுதான் பார்ப்பனீயம்
நினைவு நாள்
புதிய கண்டுபிடிப்பு
நேர்காணல்
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

சிறுகதை

மையோட்டம்

- பள்ளிபட்டி கா.காளிராசன்

இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்கிற யோசனையில் இங்குட்டும் அங்கிட்டும் நடை போட்டார். நல்ல சிவம் ரொம்பவும் நாணயமானவர், பஞ்சாயத்துப் பேசுவதில் திறமையானவர்.
இவர் வருகைக்காக ஊர் மக்கள் புளிய மரத்தடியில் கூடியிருந்தார்கள். அது ஒரு சின்னக் கிராமம். ஊரைச் சுற்றி ஒரே தோட்டம் தொரவுமாய் இருக்கும் டவுனுக்கு போகணும்னா அய்ந்தாறு மைலு நடந்தே தான் போகணும். அதுவும் ஒத்தயடிப் பாதை. மழை காலத்துல அந்த ஊரு தனித் தீவு போல இருக்கும்.
ஒரு முடிவோடு துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புளிய மரத்தடிக்கு ஒரு தீர்மானத்தோடு தான் வந்தார் நல்ல சிவம்.
என்ன ஆளாளுக்கு பேசாம இருந்தா எப்படி விஷயத்த சட்டுபுட்டுனு ஆரம்பிக்க வேண்டியது தானே. அதேன் நாட்டாமயே வந்துட்டாருள அமைதியாய் இருந்த கூட்டத்தை உசுப்பேத்தி விட்டார் ஒரு பெரியவர்.
கூட்டத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு சிறு கனைப்போடு தொடங்கினார்.
இவ்வளவு காலமா நடக்காத விஷயம் இப்ப நடந்துருக்கு? இதச் செஞ்சது யாரா இருக்கும்... எல்லோரையும் ஒரு முறை பார்த்தார்.
கூட்டம் ஒரே அமைதியாய் எல்லோரும் நாட்டாமை முகத்தையே பார்த்தார்கள்.
யாரா இருந்தா என்னங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே எதுக்கு மூடுமந்திரம் போடுறீங்க வெட்டு ஒன்னு துண்டு ஒன்னுனு பேசிட வேண்டியது தானே
அது எவன்ட பெரிய மனுசனாட்டம் பேசுறது பெரியவங்க எதுக்கு உக்காந்துக்கிட்டு இருக்கோம்.
கல்யாணம் ஆயிட்ட அவனும் பெரியவன் தானப்பா? அவென் பேசுறதுல என்ன தப்பு.
அப்ப. நீங்களே பேசி தீத்துக்கோங்க நா எதுக்கு என எழ முயன்றார் நல்ல சிவம்.
அட நீங்க ஒன்னு சின்ன பசங்க தெரியாத்தனமா. பேசுப்புட்டாங்க இதுக்-கெல்லாம் போய் என கூட்டத்தில் இருந்த பெரியவர் கூறி நாட்டாமையை உக்கார வைத்தார்.
பிரச்சனை பெரிசாகுறதுக்குள் பூசாரிய ஒரு வார்த்தை கேட்டுக்கிடலாம்னு தோணுது, என்ன சொல்றீங்க.
அதுவும் சரிதான் என்றனர்.
எல்லோரும் தாயா பிள்ளையா பழகிட்டோம் நானும் இந்த ஊருக்கு வந்து இருவது வருஷமாச்சு இதுவரைக்கும் இந்த மாதிரிச் சம்பவம் நடந்தது இல்ல அதனால... எனக்கு ஒரு யோசன தோணுது...
சொல்ல வந்தத சொல்லும் தைரியமா
கூட்டத்தினரை ஒரு முறை நோட்டமிட்டார் பின்பு எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் டவுன்ல இருக்காரு அவர்ட்ட இந்தப் பிரச்சனைப் பற்றி சொன்னோம்னா ஈஸியா முடிச்சுக் கொடுத்துடுவாரு.
எல்லாஞ் சரிதான் அவரு என்ன வேல பாக்குறாரு கூட்டத்தில் இருந்தவன் நக்கலாகக் கேட்டான் ஒருவன்.
மையோட்டம் பாக்குறாரு கண்டிப்பா திருடு போனத கண்டுபிடிச்சு குடுத்துடுவாரு என்றார் பூசாரி.
ஆமய்யா கம்ப்யூட்டர் காலத்துல போய் மையோட்டம் பாருங்கய்ய! பேசாம போலீஸ்ல ஒரு கம்ளய்ன்ட் கொடுத்தா முட்டிக்கு முட்டி தட்டி திருடன கண்டுபிடிச்சுடப் போறான். இதுக்கு...
டேய் வாய்க்கு வந்தபடி பேசாதப்ப, இவ்வளவு காலமா போலீஸ்காரன் காலு இந்த மண்ணுல படல இனிமேல் படனுமா? என்ற வயதானவரின் போலீஸ் பயம் அவரது கண்களில் தெரிந்தது. சடக்கென எழுந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கூட்டத்தை விட்டு கிளம்பினார்.
யோவ் மச்சான் நீ பாட்டுல எழுஞ்துருச்சு போன விஷயத்தை எப்படி தீக்குறதாம், அவென் தான் சின்னப்பய பேசிப்புட்டானு கோவிச்சுட்டு போறீங்களே என கையைப் பிடிச்சு இழுத்து உக்கார வைத்தார்.
நாட்டாமை நல்லசிவத்திற்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அதென் பூசாரியே சொல்லிப்புட்டானே பேசாம அவரு சொல்லுறது போலயே செஞ்சுடுவோம் என ஒரு மனதாக கூட்டத்தில் உள்ள அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
முத்துச்சாமிக்கு கோபம் கோபமாய் வந்தது தனது இயலாமையால் மனம் வெறுத்து கூட்டத்தை விட்டு அகன்றான்.
பூசாரிக்கு போன உயிர் திரும்பி வந்த சந்தோசம் முகத்தில் தெரிந்தது.
நாட்டாமை நல்லசிவத்திற்கு மனசுக்குள் நெருடல் இருந்தாலும் ஊர் மக்களை மீறி அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை, எல்லாம் உங்கள் பொறுப்பு என ஒதுங்கிக் கொண்டார்.
மைப்போட்டு பாத்து எவென் எடுத்தாலும் கண்டுபிடிச்சுடலாம், அப்படித்தான் போன வருஷம் எங்க வூட்டு சரவப் பானையைக் காணோம் அப்பத்தான் பூசாரி அய்யா தன் மையோட்டக் காரன கூட்டியாந்தாரு எடுத்தவன எல்லாம் கரெக்டா சொல்லிப்-புட்டார். ஆனா பொருளத்தான் கைப்பத்த முடியல என மூக்காயி அங்கலாயித்தாள்.
ஆமாக்க மையோட்டம் பாத்து எல்லாம் கண்டுபிடிச்சுடாம்னு வைச்சுக்கிட்டா பிறகு எதுக்கு நாட்டுல போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டு அது இதுன்னு இருக்கு, பேசாம எல்லாத்-தையும் இழுத்து மூடிட்டு போயிடாலாம்ல அங்கங்க மூலைக்கொரு மையோட்ட காரன கவர்மென்ட்லயே வேலைக்கு வச்சுக் கிடலாம்ல என்றான் முத்துச்சாமி.
இவென் ஒரு கிறுக்குப் பய எப்பப்-பார்த்தாலும் ஏட்டிக்குப் போட்டியா பேசிக்கிட்டு இருப்பான் என்றாள்.
அவென் சொல்லுறதுலயும் ஞாயம் இருக்கே
நீயொரு பைத்தியக்காரி அவன்தான் வெவரங்கெட்டத் தனமா பேசிக்கிட்டு இருக்கான, இனி செத்த நேரம் இருந்தோம்... நம்ம எல்லாத்தையும் குழப்பிடுவான், என நகர்ந்தனர்.
இவர்களை எப்படித்தான் திருத்துவதோ என மனசுக்குள் நொந்து கொண்டு வீட்டுக்கு சென்றான்.
பூசாரி கூட இரண்டு பேர் செல்லுவது எனவும் வழிச் செலவுக்கு ஊர்ப் பணத்தில் இருந்து கொடுப்பது எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முத்துச்சாமிக்கு தூக்கம் வரவில்லை பூசாரி மேல் அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. இன்னும் இந்த ஊருக்காரங்க ஜோசியக்காரன் பின்னாடி-யும் குடுகுடுப்பைகாரங்க பின்னாடியில போறானுங்க காலம் எவ்வளவோ மாறிக்கிட்டு இருக்கு எப்படி இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பது என சிந்திக்கலானான்.
நாள்கள் நகர்ந்தன, கூட்டம் புளிய மரத்தடியில கூடியது மையோட்டக்காரர் கூட்டத்தை ஒரு முறை நோட்டமிட்டார். எல்லோரும் பயபக்தியோடு இருந்தனர். முத்துச்சாமி மட்டும் அவரை அலட்சியப்-படுத்தியது போல் இருந்தது.
மையோட்டக்காரர் பூசாரியிடம் கிசுகி-சுத்தார். பூசாரி நாட்டாமை நல்லசிவத்திடம் கிசுகிசுத்தார்.
இங்க பாருங்கப்பா எல்லோரும் அவங்க அவங்க வூட்டுக்கு போங்க மூணு பேரு மட்டும் போதுங்குறாரு, என்றார் நாட்டாமை.
நா இருக்கட்டுங்களா என முத்துச்சாமி கேட்டான்.
முதல்ல நீ இருக்கக் கூடாதுப்பா உம் மூஞ்சியில நம்பிக்கைத் தன்மை இல்லை அதனால குறி ஓடாதாம் அய்யாதான் சொன்னாரு என பூசாரி முந்திக் கொண்டு சொன்னார்.
இது என்னடா கொடுமை என்னப் பாத்து குறி ஓடாதுனா உண்மையிலேயே எனக்குத்-தான் சக்தி அதிகம்னு சொல்லிவிட்டு கிளம்பினான்.
ஒருவாறாக கூட்டம் கலைந்தது ஒவ்வொரு-வரும் தங்களுள்ளாகவே குசுகுசுன்னு பேசிக் கொண்டு கிளம்பினார்கள்.
ஒரு சிலர் என்னதான் நடக்குதுனு பாத்துடுவோம்ங்கிற நப்பாசையில் மூலைக்-கொருவராய் மறைந்திருந்து கவனித்தனர். ஒவ்வொருவருக்கும் மனசு திக் திக் என அடித்துக் கொண்டது.
ஏம்ப்பா சாமிக்குப் போட்ட நகையை சாமியாலேயே காப்பாத்த முடியல இதுக்கு ஒரு மையோட்டம் ஊருல எத்தன பேரு பொங்கலுக்கு சாமியாடுறாக அவக மேல சாமிய வரவச்சு கேட்க வேண்டியதுதானே உண்மையான சாமியா இருந்தா டக்குனு சொல்லிப்புடும்ல.
என்னப்பா பூசாரி அண்ணன் மகன் முத்துச்சாமி வீட்டப் பாத்து போறான் அவென் பின்னாடி நாட்டாம எல்லாம் போறாங்க.
நா நினைச்சது சரியாத்தான் போச்சு முத்துச்சாமி தான் நகைய களவாண்டு இருக்கான். அவெனுக்குத் தான் சாமி நம்பிக்கையில்லையில என்றான்.
அய்யா நா கடசிய கோயில பூட்டும்போது இவென்தான் கோயிலுக்கு முன்னாடி உக்காந்து இருந்தான் வேறு யாரும் இல்ல, அப்பவே இவென் மேல சந்தேகம் தான். இருந்தாலும் திடீர்னு சொல்லக்கூடாதுனு பேசாம இருந்திட்டேன் என பூசாரி நாட்டாமையிடம் கூறினான்.
முத்துச்சாமிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. ஆனால், ஊரே அவனுக்கெதிராய் ஒன்று சேர்ந்தது.
சின்னப்பையன் நகையிருக்கிற இடத்தை நா காட்டுதேனு சொல்லிக் கொண்டு முத்துசாமி வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டினுள் சுற்றும் முற்றும் பார்த்தான் ஓர் மூலையில் குத்துச்சட்டி கவிழ்ந்து கிடந்தது அதை திறந்து பார்த்தான், இதுக்குள் தான் இருந்தது எனக் கூறினான்.
ஆனால் நகை அங்கே இல்லை வீட்டுக்கு போறதுக்குள்ளே நகை இருக்கிற இடம் மாறிடும்னு கையோட்டக்காரர் சொன்னார்ல என பூசாரி நாட்டாமையிடம் கூறினார் அவரும் ஆமாம் எனத் தலை அசைத்தார்.
என்னப்பா சொல்லுற முத்துச்சாமி
எந்தக் களவானிப் பய தான் செஞ்ச தப்ப ஒத்துக்குவான் அவென்ட்ட போய் கேட்டுக்-கிட்டு பேசாம அவென் சொத்து பத்த ஊருக்கு எழுதி வாங்கிவிட வேண்டியதுதான் எனக் கூட்டத்தில் இருந்தவர்கள் கோரசா கூச்சலிட்டனர்.
முத்துச்சாமியின் பேச்சை யாருமே கேக்கத் தயாரில்லை எல்லோரும் முத்துச்சாமி மேலேயே பழி போட்டனர்.
நாட்டாமை நல்லசிவத்திற்கும் வேறு வழி தெரியவில்லை ஊர்க்காரர்கள் சொல்லிய-படியே முத்துச்சாமிக்கு தண்டனை வழங்கப்-பட்டது.
நாள்கள் நகர்ந்தன. ஊர் விஷயமாக டவுனுக்கு சென்றிருந்தார். எல்லா வேலை-யையும் முடித்துவிட்டு ஊர் திரும்புவதற்காக பஸ்டாண்டில் வந்து பஸ்சுக்காக காத்துக் கொண்டு உக்கார்ந்து இருந்தார் நேரம் போவதற்காக ஒவ்வொரு இடமாய் பார்த்தார். அவரவர் அவரது வேலையில் கவனமாய் இருந்தனர். பஸ் வருவதும் போவதுமாய் இருந்தது.
புதிய புதிய முகங்களை பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியவில்லை.
அப்பொழுது தான் ஆட்டோவில் இருந்து ஒரு இளஞ்ஜோடி இறங்கியது.
உற்றுப் பார்த்தார் அந்தப் பொண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே எனச் சற்று கூர்மையாக பார்த்தார். அட நம்ம கோவில் நகை எப்படி அந்தப் பெண்ணின் கழுத்தில் யோசனையில் இன்னும் கூர்மையாக்கினார் பார்வையை. உடல் முழுவதும் ஒரு பரபரப்பு அந்த ஜோடி அவரை நோக்கி வந்தது. சிரித்து சிரித்து பேசிக் கொண்டு வந்தாள்.
ஏதேச்சையாக அவரைப் பார்த்து விட்டாள்.
வணக்கம் அய்யா, இவரு எங்க ஊரு நாட்டாமைங்க என தன் கணவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.
நாட்டாமையின் பார்வை அவள் கழுத்தில் மின்னிய நகையின் மேலே நிலைகுத்தி நின்றது சந்தேகமே இல்லை நமது கோவில் நகைதான்.
அட வணக்கங்க இது உங்க ஊரு பூசாரி மகதான் இது ஏ மகன் இப்ப ஏ மருமக என மையோட்டக்காரன் சொல்லி நாட்டாமை நல்லசிவத்தை திகிலடைய வைத்தான்.
முத்துச்சாமி நாட்டாமை நல்லசிவத்தை செருப்பால் ஓங்கி செவிட்டில் அடித்தது போன்ற பிரமை...