தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
நாட்டு நடப்பு
அன்னை மணியம்மையார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
மனித உரிமை
ஹாலிவுட் கலை - 16
பகுத்தறிவு
இதுதான் பார்ப்பனீயம்
நினைவு நாள்
புதிய கண்டுபிடிப்பு
நேர்காணல்
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

பகுத்தறிவு

அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்க முடியுமா?

- பேரா. ந.வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்.,

அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி -1
கீழ்த்தரமான கிறுக்கல்
ஜனவரி 2008 அந்நஜாத் என்னும் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
கட்டுரையின் தலைப்பு: பகுத்தறிவார்களே! பகுத்தறிவைப் பகுத்துப் பார்த்திருக்கிறீர்களா? என்பது
இந்தக் கட்டுரையாளர் அயூஃபாத்திமா
இவர், பகுத்தறிவாளர்களைக் கடுமையா-கவும், கொடுமையாகவும் தம் கட்டுரையில் திட்டித் தீர்த்திருக்கிறார்.
பகுத்தறிவு என்பது பற்றியும் தாறுமாறான முறையில் தரம் தாழ்ந்து எழுதி, கடவுள் மறுப்பாளர்களைத் தாக்கியும் ஏசியும் கிறுக்கியிருக்கிறார்.
அவரது வாதங்களை(?) முதலில் சுருக்கமாக எடுத்துவைத்து அவற்றிற்கான பகுத்தறிவு விளக்கத்தைத் தொடர்ந்து தர இருக்கிறோம்.
குழப்பத்தின் கூடாரம்
அய்ம்புலன்கள் கொண்டு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே, பகுத்தறிவு செயல்பட முடியும்.
இந்த அய்ம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்றை இந்தப் பகுத்தறிவால் விளக்க முடியாது; ஏற்க முடியாது.
அதனால்தான், கோவூர் போன்றவர்கள், கடவுளைக் காட்டுகள்! கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் - என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர்.
இது கட்டுரையாளர் எடுத்து வைக்கும் வாதங்களின் ஒரு பகுதி.
குழப்பத்தின் கூடாரமாக இவர் மாறி, தானும் குழம்பி, பிறரையும் குழப்புகிறார்.
அய்ம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று இவர் எதைக் கருதுகிறார்?
அய்ம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று சொன்னால் அது உள்பொருள் அல்ல; இல்பொருள்!
அப்படி புலன்களுக்கு எட்டாத - ஒன்றைப் பகுத்தறிவால் விளக்க முடியாதுதான்; ஏற்க முடியாதுதான்!
இது உண்மைதானே?
புலன்களுக்கு எட்டாத அந்தப் பொருள்
அதுசரி,
இவர், அய்ம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று எதனைக் கூறுகிறார்?
வெளிப்படையாக இப்பொழுது சொல்லி விடுகிறார் இவ்வாறு;
அதனால்தான் கடவுளைக் காட்டுங்கள்! கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்ற அறிவறற்ற வாதத்தை வைத்தனர் கோவூர் போன்றவர்கள்.
என்கிறார் கட்டுரையாளர்.
இது திரிபு வாதமல்லவா? தகிடுதத்தம் அல்லவா? பித்தலாட்டம் அல்லவா?
அய்ம்புலன்களுக்கும் அகப்படாதது பொய்:
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்,
பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர்,
சார்லஸ் பிராட்லா
இங்கர்சால்
முதலான உலகின் தலைசிறந்த பகுத்-தறிவாளர் பெருமக்கள் எல்லாம் கடவுளைக் கண்ணால் மட்டும் பார்க்கும்படியாகவா கேட்டனர்; வாதிட்டனர்?
கண், காது, செவி, மூக்கு, மெய் ஆகிய அய்ம்பொறிகளுள் ஒன்றினாலேயே, சில, பலவற்றாலேயோ, அய்ந்தினாலேயோ மெய்ப்-பித்துக் காட்டுங்கள் என்றல்லவா வலிவான பகுத்தறிவு வாதங்களை எடுத்து வைத்தனர்?
பஞ்சேந்திரியங் (அய்ம்பாறி)களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய்! இதுதான் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை (9.2.70 விடுதலை) என்றல்லவா தந்தை பெரியார் கூறினார்!
அய்யா பெரியாரின் அறைகூவல்!
அய்யா பெரியார் பின்வருமாறு அறைகூவல் விடுகிறார்.
இன்றைக்கும் நான் கடவுள் நம்பிக்கைக்-காரர்களைக் கேட்கிறேன்! ரூபாய் பதினாயிரம் பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.
சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று யாராவது ஒருவர் சொல்லட்டும்!
சொல்ல முன்வந்து தன் நடத்தையைக் கொண்டு மெய்ப்பிக்கட்டும்!
யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்து வைக்கிறேன் என்று கூறுகிறேன்!!
யார் வருகிறீர்கள்? யார் வருகிறார்கள்?
சவால்விடுகிறேன்!
என, அறை கூவல் விடுத்தாரே?
தன் நடத்தை - செய்கை - அய்ம்பொறி இயக்கத்தைக் கொண்டு மெய்ப்பித்துக் காட்டட்டும் என்றுதானே அவர் பறை சாற்றினார்?
கண்ணால் காட்டு! என்று மட்டுமா சொன்னார்?
ஏன் இந்தக் கட்டுரையாளர் திரிபுவாதம் செய்ய வேண்டும்?
அறிஞர் கோவூரின் அதிரடி
டாக்டர் கோவூர் அவர்கள், கடவுளைக் கண்ணால் மட்டுமே காட்டுக! என்றா சொன்னார்?
அவர், மிகவும் கீழே இறங்கிவந்து, கடவுளை மெய்ப்பித்துக்காட்ட உன்னால் முடியாதா?
போகட்டும், கடவுள் சக்தியையாவது மெய்ப்பித்துக்காட்டு! ஏற்கிறேன்; என 23 அறைகூவல்கள் விடுத்தாரே? மெய்ப்பிப்-பவருக்கு நூறாயிரம் ரூபாய்ப் பரிசு தருகிறேன். என் சவாலை ஏற்று வருக! பரிசு பெறுக!
என்றல்லவா, உலகெங்கணும் உள்ள கடவுள் நம்பிக்கையாளரிடம் அறிவிப்பு செய்தாரே?
மெய்ப்பித்துக்காட்டும் துணிவு கட்டுரை-யாளர் போன்ற சண்டப் பிரசண்டம் செய்யும் சூரப்புலிகளுக்கு ஏன் வரவில்லை?
நேருக்கு நேர்:
கடவுளைக் கண்ணால் கண்டு தான் ஏற்பேன் - என்று அடம்பிடிப்பவர்கள் பகுத்-தறிவை முறைப்படி விளங்காத மூடர்கள் ஆக மட்டுமே இருக்கமுடியும்!
இது, இந்தக் கட்டுரையாளரின் பண்பு நலம் செறிந்த வார்த்தைகள்! கண்ணால் கண்டால் மட்டுமே ஏற்பேன் என்று பகுத்தறிவாளர் எவரும் கூறவில்லையே?
அவ்வாறிருக்க,
அடம்பிடிப்பவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார் இவர்?
அடம்பிடிப்பது இவர் போன்றவர்களா? பகுத்தறிவாளர்களா?
பகுத்தறிவை முறைப்படி விளங்காத மூடர்களாமே, பகுத்தறிவாளர்கள்? இவர் மட்டும்தான் முறைப்படி விளங்கிக் கொண்டவரா?
பகுத்தறிவாளர்களின் முன்னே நேருக்கு நேர் வந்து முறைப்படி விளக்க இவர் முன்வருவாரா?
யார் மூடர்கள்?
மூடத்தனத்தை - முட்டாள்தனத்தை - மடமையை, மூடநம்பிக்கையை முறியடிக்க முனைபவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்!
இவர் போன்றோரின் மூடத்தனத்தைத் தகர்த்து, தவிடுபொடியாக்கி முழு அறிவாளர்-களாக ஆக்கப் பாடுபடுபவர்கள் தாம் பகுத்தறிவாளர்கள்!
அறிந்து கொள்ளட்டும் இவர்!!
கீறல் விழுந்த கிராம்போன் இசைத்தட்டு:
காலம்காலமாக, சொல்லப்பட்டு வரும் இன்னொரு வாதத்தையும் கட்டுரையாளர்கள் முன்வைக்கிறார்.
மனிதனின் அய்ம்புலன்களுக்குள் கட்டுப்-படும் ஒன்று கடவுளாக ஒருபோதும் இருக்க முடியாது!
அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவனாக - பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவனாக மட்டுமே, மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவனாக இருக்க முடியும்!
கீறல் விழுந்த கிராமபோன் பதிவு இசைத்-தட்டில் ஒலிப்பது போல, அய்ம்புலன்களுக்கு எட்டாதவன்; மனதிற்குக் கிட்டாதவன்; அறிவிற்கு அப்பாற்பட்டவன் என்றெல்லாம் காலம்காலமாக, கடவுள் நம்பிக்கையாளர்கள் கரைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனையேதான் அந்நஜாத் கட்டுரை-யாளர் அறிவாளி இப்பொழுது வழிமொழிந்து ஒத்திசை பாடுகிறார்.
இதற்கு, பகுத்தறிவாளர்களும் காலம் காலமாகப் பதில் சொல்லி வருகிறார்கள்.
அவர்களுள் பகுத்தறிவின் சிகரம் பெரியார் அவர்களின் விளக்கம் தரும் வினாக்களை இங்கே எடுத்துரைத்தாலே போதும்! என்று கருதுகிறோம்.
என் கேள்விக்கென்ன பதில்?
கடவுள் எப்படிப்பட்ட மனதிற்கும் எட்டாதது; எப்படிப்பட்ட அறிவுக்கும் அறியக்கூடாதது;
ஆதலால், உனக்குப் புரியவும் புரியாது! உன் மனதிற்கு எட்டவும் எட்டாது!
அதனை நீ அறியவும் முடியாது; புத்திக்கும் எட்டாதவன்; இந்திரியங் (அய்ம்பொறி)-களுக்கும் எட்டாதவன் என்று சொல்லப்-படுகிறது என்றால், இப்படிப் புரியாதவர்; எட்டாதவர்; அறியப்படாதவர் உனக்கு மாத்திரம் எப்படி புரிய, எட்ட, அறிய, தெரிய முடிந்தது?
இந்த வினாவிற்கு கட்டுரையாளர் என்ன விடை விளம்பப் போகிறார்?
எதிர்பார்க்கிறோம்!
மண்டையில் உறைக்க மறுக்கிறதே!
அய்ம்புலனுக்கும் - ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுக்கும் எட்டாதவன் கடவுள் என்கிறாரே இவர்? அப்படி எட்டாத ஓர் இறைவன் இருக்கின்றான் என்று - இவர் எந்தப்புலன் கொண்டு தெரிந்து கொண்டார்?
அல்லது உணர்ந்து கொண்டார்?
இல்லாத, 7ஆவது 8ஆவது அல்லது வேறு எத்தனையாவது அறிவைக் கொண்டு அறிந்து கொண்டார்?
பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத - எட்டாத ஒரு விஷயம், பொருள், நடப்பு எதுவாயினும் அது முழுமையான பொய் என்றுதானே பகுத்தறிவாளர்கள் அடித்துக் கூறுகின்றர்கள்?
அது ஏன் இவரனையாரின் மண்டையில் உறைக்க மறுக்கிறது?
விளக்கத்தை மட்டும்தான் நாம் கூறமுடியும்!
அதனைப் புரிந்து கொள்ளக்கூடிய விவேகத்தை - நுண்ணறிவை நாம் கொடுக்க முடியுமா?
முடியாதே!
படைப்பல்ல; பரிணாமம்
அடுத்து, பகுத்தறிவுக்கும் - அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு கருத்தினை இவர் எழுதுகிறார் இப்படி:
அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் மட்டுமே மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவன் ஆக இருக்க முடியும்.
மனிதனும் மற்றைய பொருளனைத்தும் ஓர் இறைவன் எனப்படும் கடவுளால் படைக்கப்-பட்டவை என்கிறார் கட்டுரையாளர்.
உலகின் பொருள் அனைத்தும் அணுக்-களாலானவை; அணுவும் நுண்மையான ஆற்றலானாது.
ஆக, பொருள் - சக்தி இரண்டின் (Matter-Energy) உருமலர்ச்சியே அனைத்துப் பொருள்களும்.
இவை இயல்பாகத் தோன்றியவை; எவருடைய படைப்பும் அல்ல; பரிணாம முறையில் உருமலர்ச்சி பெற்றவை (No creation, but evolution) ஆற்றலின் அழிவின்மைக் கோட்பாட்டின் (Laws of conservation of Energy) அடிப்படையில் என்றும் இருப்பவை; என்றும் அழிவற்றவை (Eternal and Everlasting), தோற்றமும் முடிவும் அற்றவை (No beginning and so no ending)
இல்லாத ஒன்றைப் புதிதாகப் படைக்-கத்தான் ஒரு படைப்பாளி (creator) தேவை.
என்றும் இருப்பதனைப் படைக்க ஒருவன் தேவையில்லை.
ஒற்றை உயிரணுவின் உருமலர்ச்சி
இதுபோலவே, மனிதன் என்பவன் உயிரற்ற நுண்பொருளி-லிருந்து வளர்ச்சி பெற்ற ஒற்றை உயிரணு (Mono cell) சரலிருந்து உருவேர்ச்சி பெற்று காலப்போக்கில் குரங்கு, மனிதக் குரங்கு, மனிதன் எனப்படும் பாலூட்டிக் குடும்பத்தி-லிருந்து அதாவது பிரைமேட் (primate) குழுவிலிருந்து ஒரு கிளையாகக் கிளைத்து உருமலர்ச்சி (Evolution) பெற்ற இனமே மனித இனம்.
எனவே, மனிதனும் பரிணாம முறையில் உருலேர்ச்சி பெற்றவனே! படைக்கப்பட்டவன் அல்லன்.
எனவே, மனிதனும் மற்றைய அனைத்துப் பொருள்களும் இறைவன் என்பவனால் படைக்கப்பட்டவன் என்ற கட்டுரையாளரின் கருத்து, பகுத்தறிவிற்கும் அறிவியலுக்கும் மாறானது; வேறானது; முரணானது.
மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியையே பாடிக்கொண்டிருப்பதை இவரனையார் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
கேளுங்கள் கொடுக்கப்படும்!
அடுத்து,
கட்டுரையாளர் பின்வருமாறு எழுதுகிறார்:
தங்களைப் பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி எடுத்துப் பக்குவப்-படுத்தப்பட்டவர்கள் எனப் பெருமைப்படப் பேசிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களிடம் சில வினாக்களைத் தொடுக்கிறோம்.
தந்தை பெரியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டி-ருக்கும் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்று, தெளிவு பெற்று, முதிர்ச்சி எனப்படும் பக்குவப்படுத்தப்பெற்ற பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதில் பறை சாற்றிக் கொள்வதில் உலகிற்கு அடை-யாளம் காட்டிக் கொள்வதில் எம்போன்ற பகுத்தறிவாளர்களுக்குப் பெருமை தான்! பெருமிதம்தான்!
இதில் என்ன அய்யம்?
இதில் என்ன குற்றம்?
நெஞ்சு நிமிர்த்தி, அஞ்சாமையோடு, வெளிப்படையாக வீறு கொண்டு இன்று மட்டுமல்ல, என்றும் கூறுவோம்!
நீங்களும், உங்கள் போன்றாரும், நாங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவர்கள்; ஏன் பகுத்தறிவு அற்றவர்கள்! என்று கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்ளுங்களேன்!
யார் வேண்டாம் என்றது?
சில வினாக்களைத் தொடுக்கப் போகிறோம் என்கிறார். தொடுத்துப் பாருங்களேன்.
அஞ்சாது - அயராது முறையான, தெளிவான விடைகளையும், விளக்கங்களையும் கொடுப்பவர்கள் தான் பகுத்தறிவாளர்களாகிய நாங்கள்! பதிலளிக்கப் பயந்து விடமாட்டோம்!
வினாக்களைக் கேளுங்கள்! கொடுக்கப்படும் விடைகள்!!

- (தொடரும்)