தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 8
சீர்குலைந்த பண்பாட்டுக் கூறுகள்
- கி.வீரமணி
 |
பண்பாட்டுப் படையெடுப்பு எவ்வகையில் எல்லாம் ஊடுருவியது என்பதை நாம் தொடர்ந்து பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆகியோர் தம் கருத்துரைகளைத் தொகுத்த முக்கிய தரவுகளாக அவற்றைத் தந்து வருகிறோம்.
இந்த பண்பாட்டு படையெடுப்பால் மிகப் பெரிய ஆபத்து தமிழினத்திற்கு வேறு இல்லை என்பதால் தான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் என்பதை உருவாக்-கினார்கள்.
சுயமரியாதை வாழ்வு என்பது, தமிழர்-களைத் தன்மானத்தோடு தலைநிமிரச் செய்யும் ஓர் அருமையான மான வாழ்வு; அறிவு வயப்பட்ட வாழ்வு!
சிறு பழக்க வழக்கங்களைக் கூட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு, தமிழர்களை மாற்றிவிட்டது!
இதுபற்றி பேராசிரியர் டாக்டர் க.ப.-அறவாணன், தமிழர் தம் இலக்கியம், பண்பாடு, அரசியல், கல்வி 2000 என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு நூலில்,
தமிழர்: பண்பாட்டுச் சீர்குலைவு என்ற தலைப்பில் எழுதியுள்ள கருத்துகள் மிகவும் சிந்திக்க வேண்டியவையாகும். எனவேதான் அதனை வெட்டாமல் அப்படியே தருகிறேன்.
மானுடர், புறத்தோற்றப் பார்வையில் ஒன்று போலத் தோன்றினாலும், தனித் தோற்றத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி உடல் வேறுபாடுகளையும், குண வேறுபாடுகளையும் பெற்றே விளங்குகின்றனர். இரட்டைக் குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. பொதுமை கருதியும், தன்னலம் சார்ந்த பொது வாழ்வு கருதியும், மானுடர் நிறம், மொழி, இனம், நாடு முதலானவற்றின் அடிப்படையில் கூடி வாழுகின்றனர். கூடி வாழுதலுக்கு ஓர் அடிப்படைக் காரணம் அச்சம். வளர்ந்த நிலையில் அவரிடையே வளர்ந்த பண்பு. இவ்வளர்ச்சியில் மொழி பெரும் பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி வருகிறது. ஆக, இப்பார்வையில் தனி மானுடத் தனித் தன்மை, தனிக் கூட்டத் தனித் தன்மையாக வளர்ச்சி பெறுகிறது. இத்தனித் தன்மையே ஒரு கூட்டத்தின் அல்லது சமுதாயத்தின் பண்பாடு ஆகும்.
இப்பண்பாடு, மூன்று வகைத் தேவைகளை அடியொற்றி அமையும்.
ஒன்று, அச்சமுதாயத்தினர் பயன்படுத்தும் பொருள்கள்,
இரண்டு, அச்சமுதாயத்தினுடைய செயற்பாடுகள்,
மூன்று அச்சமுதாயத்தினுடைய எண்ணப் போக்குகள்.
இம்மூன்றையும் (Havings, doings & thoughts) ஒட்டித்தான் ஒரு சமுதாயத்தின் (small) பண்பாடும், அதன் சிறப்பும், சிறப்பின்மையும், அளவுகளும் தீர்மானிக்கப்-படுகின்றன. இப்பண்பாடே ஒரு சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் தலையாய ஒன்றாகவும், சமுதாயத்தின் இடையே நெருக்கமான உறவை (Social Relations) உருவாக்குவதாகவும் அமை-கிறது. இவ்வாறு அமைவதால் அச்சமுதாயம் ஏனைய சமுதாயங்களில் இருந்து தனித்துச் சிறந்து விளங்கவும், உயரவும், அச்சுறுத்தும் சமுதாயத்திடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் உரிய வலுவைப் பெறும்.
இது பண்பாட்டு வரலாற்றின் சாரம். தன் தனித்துவம் மிக்க பண்பாட்டை இழக்கின்ற சமுதாயம், சார்புச் சமுதாயமாகவும், அடிமைச் சமுதாயமாகவும், போதிய அளவு வளர்ச்சி பெறாத அடிமைச் சமுதாயமாகவும் இருக்கும். தமிழ்ச் சமுதாயம் இந்த நிலையிலேயே உள்ளது. ஏனைய சீன, யூத, அய்ரோப்பிய, அமெரிக்க, சப்பானியச் சமுதாயங்கள் தமக்குரிய பண்பாட்டுக் கூறுகளை இழப்-பதில்லை. தன் பண்பாட்டுக் கூறுகள் அமுங்கி, அழிந்து போகும் வண்ணம் அயல் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்பதும் இல்லை. எனவே, ஒருவிதமான உயர்வு மனப்பான்மை (Superiority Complex) இந்தச் சமுதாயங்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு எதிர்-நிலையில் தமிழ்ச் சமுதாயம் இருப்பதால் தாழ்வு உணர்ச்சியில் (Inferiority Complex) தாழ்ந்து கிடக்கிறது.
எனவே, கையாளும் பொருள்கள், பழக்க வழக்கங்கள், செயற்பாடுகள், எண்ணப் போக்குகள் ஆகியவற்றில் தமிழ்ச் சமுதாயம் தனக்குரிய நல்லவற்றை உறுதியாகக் கடைப்-பிடித்து நிலைநிறுத்திக் கொள்ளுதல் வேண்டும். இல்லையெனில், வீழ்ச்சி தான் மிஞ்சும்.
 |
ஓர் எடுத்துக்காட்டு: இத்தாலியில் இருந்து கி.பி. 14ஆம் நூற்றாண்டில் பாண்டி நாட்டிற்கு வருகை தந்த மார்க்கோபோலோ தமிழருடைய பல்வேறு பண்பாடுகளைப் பாராட்டி எழுது-கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க இரண்டு, தண்ணீரை உதட்டில் வைத்துப் பருகாமல் தூக்கிப் பருகுவது, உணவை வாழை இலையில் இட்டு, உண்டு, உண்ட பின் இலையைத் தூக்கி எறிந்து விடுவது. இவை இரண்டும் இன்று மிக உச்சமாகப் பேசுகின்ற தூய ஒழுக்கங்கள். இவற்றை நாம் இழந்து விட்டோம். உணவில் பல பழக்கங்கள் இசுலாமியரிடமிருந்தும், பாரசீகரிடமிருந்தும், வட இந்தியரிடமிருந்தும், அய்ரோ - அமெரிக்கரிடமிருந்தும், ருசி பார்க்கக் கற்றுக் கொண்டோம். இப்பழக்-கங்கள் அனைத்தும் தமிழர்க்குத் தீங்கானவை. ஒரு சான்று, இடி ஆப்பம், இட்டளி, தோசை, பழைய சோறு என்று இருந்த காலை உணவுப் பழக்கத்தை மாற்றிப் பூரி, சப்பாத்திக்கு மாறினோம். இவற்றிற்குரிய மூலப் பொருளான கோதுமை தமிழ்நாட்டில் என்றும் விளையாத பொருளாகும். உள்நாட்டில் உள்ள சிறந்த உணவுப் பொருளை விட்டுவிட்டு வேறு பொருளை மாற்றிக் கொண்டதில் பொருளா-தார அடிமைத்தனம் புலப்படுகிறது அல்லவா. தமிழருடைய பண்டைய இனிப்பு, சர்க்கரையும் அன்று, சீனியும் அன்று, தேன் மட்டுமே. உடலுக்குத் தீங்கு தராத ஒன்று தேன். தமிழருடைய காரப் பொருள், மிகச் சிறந்த மருந்துப் பொருளான மிளகு மட்டுமே. மிளகாய் நம்முடையது அன்று. உணவுப் பழக்கங்களில் ஓரிரு சான்றுகள் இவை.
பயன்படுத்தும் பொருள்களிலும், பழக்க வழக்கங்களிலும் அய்ரோ-அமெரிக்கரைச் சார்ந்து பலவற்றை நாம் கற்றுக் கொண்டோம். அவற்றுள் மேசையில் அமர்ந்து சாப்பிடுவது ஒன்றாகும். அய்ரோப்பியர்களுக்குக் கடும் குளிர் காலத்தில் கால்களை மடக்க முடியாது. பெரும்பாலும் மூட்டு வலியால் துன்பப்படுவர். எனவேதான், அவர்களுக்கு ஏற்ப அடுப்பு, உணவு மேசை, கழிப்பறை ஆகியவற்றை அமைத்துக் கொண்டனர். நமக்கு அவ்வாறு அன்று. இந்தப் பண்பாடுகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் மூட்டு வலியையும் சேர்த்து விலைக்கு வாங்கிக் கொண்டோம்.
எண்ணப் பண்பாட்டில் பலவற்றில் சிறந்த கொள்-கைகளை நம்முடைய முன்னோர் போற்றி வந்துள்ளனர். சிங்கப்பூர் முதல் தலைமை-யமைச்சர் லிங்குவாய் யூவைப் பற்றி மூன்று சீனர்கள் ஒரு பெறும் நூலை எழுதியுள்ளனர். அந்நூலில் லீக்வான் யூ, டோக்கியோ சென்று இருந்தபோது தன்னு-டைய அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுவதாவது:
டோக்கியோ இரவில் நிலைய அடிவாரத்தில் காலணிகளுக்கு ஒளி ஊட்டும் தொழிலாளி தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடம் தன் காலணிகளை லிங்குவாங் யூ கழற்றிக் கொடுத்து ஒளியூட்டச் சொன்னார். சற்று நேரத்தில் முகம் தெரியும்படியாகக் காலணிகளை ஒளியூட்டி இருந்ததைப் பார்த்து வியந்து போனார். ஆசான் அருகில் இருக்-கிறார்களோ, இல்லையோ ஏற்ற வேலையை மிகமிகச் செவ்வையாகச் செய்தல் வேண்டும் என்பதுதான் சப்பானியப் பண்பாடு. அந்தப் பண்பாட்டின் வெற்றிதான் அம்மக்களின் வெற்றி என்று குறிப்பிடுகிறார்.
 |
நம் முன்னோரிடமும் இது போன்ற பழக்கம் இருந்தது. ஒரு தச்சன் மிகச் சிறந்த தேரை மிக அக்கறை எடுத்துக் கொண்டு செய்ததாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அந்தச் செவ்வைப் பாட்டைப் பணம் நோக்கிய மனநிலையை வளர்த்து, தற்போது இழந்து விட்டோம். தமிழர் என்றாலே பொய்யர்கள், ஏமாற்றுகிறவர்கள் என்ற பெயர் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பரவி இருக்கிறது. தம் பண்பாட்டுச் சீரழிவால் தமிழர் பெற்ற பேரிழப்பாகும் இது.
ஒரு சமுதாயம் உச்ச நிலைக்கு உயர வேண்டுமானால், அது கட்டுக்கோப்புடை-யதாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து, ஒரு-வரை ஒருவர் தொட்டுப் பிடித்து, அனைத்து நல்லது கெட்டது என எல்லா-வற்றிலும் ஒன்றுடன் ஒன்று கரைந்து, குழைந்து போய் இருக்க வேண்டும். அவ்வாறுள்ள, சமூகக் கட்டொருமைப்பாடுள்ள சமுதாயம்-தான் உலகில் வளர்ச்சி பெறும் என்பதைச் சமூகவியல் தந்தை எமில் துர்க்கேம் தன்னு-டைய தற்கொலை எனும் நூலில் விரிவாக விளக்கி இருக்கிறார்.
கட்டொருமைப்பாட்டை ஒரு சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், தனக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் கண்டு, அவற்றுள் சரியானவற்றைப் பின்பற்றுவதில் பிடிவாதம் காட்ட வேண்டும். அதில் பின்னடைவு நிகழவே கூடாது.
|