தலையங்கம்
வரலாற்றில் நிலைக்கும் தீர்ப்பு
சென்னை - உயர்நீதிமன்றத்தில் சமூகநீதியைக் காப்பாற்றும் வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த குறிப்பிடத்தகுந்த வரலாற்றில் என்றும் நிலைக்கக் கூடிய (Landmark Judgment) தீர்ப்பை, இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் ஜஸ்டீஸ் திரு. எலிப் தர்மா ராவ், ஜஸ்டீஸ் திரு. எஸ்.ஆர். சிங்காரவேலு ஆகியவர்கள் ஆவார் கள்.
நீண்ட காலமாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடைபெற்று வந்த இந்த சமூக அநீதிக்கு, இத்தீர்ப்பு ஒரு முற்றுப் புள்ளி வைத்து, ஒரு திருப்பு முனையை உருவாக்கியுள்ளது! அதற்காக சமூகநீதியில் நம்பிக்கையுடைய நீதி, நியாய உணர்வுடைய அத்துணை மக்கள், கோடானுகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவர் சார்பாகவும் நமது உளப்பூர்வமான வாழ்த் துகளை இவ்விரு நீதி அரசர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்ப்பின் முழு விவரம் இதோ:
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 4.12.2004 ஆம் தேதி 457 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இதற்கான முதல் கட்ட தேர்வு, பிரதான தேர்வு ஆகியவற்றுக்குப்பின் நேர்முகத் தேர்வு 7.4.2006 இல் நடைபெற்றது. இதில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் 8.5.2006, 3.4.2007 ஆகிய நாள்களில் வெளியிடப்பட்டது.
அதன்படி, பொதுப்பிரிவில் 242 பேரும், எஸ்.சி. பிரிவில் 66 பேரும், எஸ்.டி. பிரிவில் 32 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 117 பேரும் தேர்வு பெற்றனர்.
பிரதானத் தேர்வு தகுதிப் பட்டியலில் பொதுப்பிரிவில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 31 பேரும், ஆதிதிராவிடர் ஒருவரும் இடம் பெற்றிருந்தனர்.
இறுதியாக வெளியிடப்பட்ட தகுதிப்பட்டியலில் இவர்கள் 32 பேரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில், முறையே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் வகுப்பினர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
குடிமைப் பணிகள் தேர்வு விதி 16(2)-இல் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், தனது விருப்பப்படி உயர்ந்த பதவிகளுக்காக இட ஒதுக்கீடு முறையில் தேர்வு பெறலாம் என்று மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது.
இதனால், தகுதியின் அடிப்படையில், தேர்வு பெற்ற 32 பேரும், இட ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த விதியை ரத்து செய்யவேண்டும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 457 பணியிடங்களுக்காக வெளியிட்ட தகுதிப் பட்டியலை ரத்து செய்யவேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி எஸ்.ஆர். சிங்கார வேலு ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசார ணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, யு.பி.எஸ்.சி. தேர்வில் தகுதியின் அடிப்படையில் பொதுப் பிரிவில் தேர்வு பெற்றவர்களை, இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற்றதாகக் கருதக் கூடாது.
தற்போதைய வழக்கில், பொதுப் பிரிவில் தேர்வு பெற்ற 32 பேரை, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு பெற்றதாகக் கருதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு பெற வேண்டிய 32 பேர் தேர்வு பெற முடியவில்லை. இது இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானதாக உள்ளது.
எனவே, மத்திய அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவை, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வு விதியில் செய்த திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
இந்தத் திருத்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தகுதிப் பட்டியலும் ரத்து செய்யப்படுகிறது.
எனவே, மத்திய அரசு, யு.பி.எஸ்.சி. 2006 ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தகுதிப் பட்டியலை மீண்டும் தயாரிக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களை பொதுப் பிரிவினர்களாக மட்டுமே கருதவேண்டும். அவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு பெற்றதாகக் கருதக் கூடாது.
ஏற்கெனவே, இதில் அதிக காலதாமதம் ஆகியுள்ளதால், 12 வாரங்களுக்குள் இது தொடர்பான பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
திராவிடர் கழகம் உள்பட சமூகநீதிக்குப் போராடும் பல்வேறு அமைப்புகள் இதற்காக எத்தனையோ முறை வாதாடி, போராடி, களம் கண்டிருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.) பிரிவு களில் திறமையின் அடிப்படையில் வெற்றி பெற்றுவரும் போட்டி யாளர்களை, வேண்டுமென்றே அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு கோட்டாவான முறையே (15+7.50)=22.50, 27 சதவிகி தத்தில், சேர்த்துவிட்டு, பொதுப் போட்டியில் (Open Competition - திறமை அடிப்படையில் போட்டியிடும் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய தொகுதி) 50 சதவிகிதத்தினர் எல்லாம் முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டுமே அர்ப்பணிக்கும் சூழ்ச்சி, பல ஆண்டுகளாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் நடைபெற்று வந்துள்ளது.
O.C. என்ற Open Competition-இல் வெற்றி பெற்றுவரும் S.C., S.T., O.B.C. போட்டியாளர்களைத் தனியே 50 விழுக்காட்டுக்குள் கொண்டு வராமல், இட ஒதுக்கீட்டு கோட்டாவான 22.5 சதவிகிதம்; 27 சதவிகிதத்தில் கொண்டு வருவதுபற்றி முன்பே வழக்குப் போட்டு உச்சநீதிமன்றத்தில் அது சட்ட விரோதம் என்று தீர்ப்பே வந்துள்ளது.
எடுத்துக்காட்டாக,
மொத்தம் உள்ள 457 பணியாளர்கள். 50 விழுக்காடு. 229 இடங்கள் ஆகும்.
எஞ்சிய 228 இடங்களைப் பங்கிடும்போது, S.C., S.T., O.B.C. பிரிவில் திறமை அடிப்படையில் வகித்தவர்களை முந்தைய 229-இல் வைத்துவிட்டு, மற்ற S.C., S.T., O.B.C. போட்டியாளர்களைத்தான் தேர்வு செய்யவேண்டும்.
அதுதான் சரியான சட்டப்படியான அணுகுமுறை - இட ஒதுக் கீட்டில், S.C., S.T., O.B.C. என்பதில் ஒதுக்கப்படும் இடங்கள் குறைந்தபட்சமே தவிர, அது உச்சவரம்பு (Not Upper Limit Ceiling) அல்ல.
வேண்டுமென்றே திறமை அடிப்படையிலான போட்டியில், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வென்றாலும், அதனை இட ஒதுக்கீடு கோட்டாவிற்குள் திணிப்பது முறையற்றது, சட்ட விரோதம்.
இதை ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தியும் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று போட்டு, பழைய கணக்கையே யு.பி.எஸ்.சி., மத்திய பணி தேர்வாணையம் செய்து வந்த அக்கிரமம்!
கடந்த பல ஆண்டுகாலமாக இப்படி சட்ட விரோதமாக யு.பி.எஸ்.சி. செயல்பட்டதால் பாதிப்புக்கு ஆளான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன பரிகாரம்? இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
இந்த அக்கிரமத்திற்கு முடிவு கட்டி, இந்தத் திருத்தம், தேர்வுப் பட்டியலே செல்லாது என்று துணிச்சலுடன் கூறிய இரண்டு நீதி அரசர்கள் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளனர்!
இதை வரவேற்று எல்லா அமைப்புகளும் பாராட்டு தெரிவிக்க முன்வரவேண்டும்.
கி. வீரமணி
ஆசிரியர்
|