கவிதை
இரத்தம் ஒழுகும் உலகம்
- நீலமணி
உலகெங்கும் காந்தி படம்
அச்சடிக்கப்பட்டாலும்
வல்லூறுகளுக்கென்னவோ
புறாக்களின் இறைச்சிதான்
பிடிக்கிறது.
ஆட்சி என்பது
கலையா? கொலையா?
தேசப்படங்கள் வரையப்படுவது
ரத்தத்தாலா?
அமைதி
எந்த மொழிக்கும்
பிடிக்காத வார்த்தையா?
புத்தர் சிரிக்கிறார்
கோரைப்பல் நீண்டு
ரத்தஞ் சொட்ட
நாடுகளை மதிக்கிறது
வல்லரசின் பாதுகை.
மகாயானமா? ஈனபானமா?
மயானம்
காகிதத்தில் பஞ்சசீலம்
கடைப்பிடிப்பது வஞ்ச சீலம்
மற்றவர் மரண ஓலம்!
காலாவதியான ஆயுதங்கள்
மலிவு விலையில்
காசாகும்.
ரோஜாக்கள்
ரத்தங் கசிகின்றன.
அர்த்த சாத்திரச் சாணக்கியனுக்கும்
தீர்வு தெரியவில்லை
ஒப்பாரி எழாத
நாள் இல்லை
அரசு இன்று கொல்லும்
என்பது நிசந்தான்
நாட்காட்டி கிழிப்பது
தினம்: இனம்
முதல் பானிப்பட்டு
இரண்டாம் பானிப்பட்டு
மூன்றாம் பானிப்பட்டு
எது கடைசிப் பானிப்பட்டு?
பல போர்களுக்குக்
காரணமே தெரிவதில்லை
ஆயுத உற்பத்தியாளர்
நலன்தவிர
கடவுளர் கையிலும்
ஆயுதங்கள்
வெட்டாத நாள்
வெட்டி நாள்
பிள்ளைக் கறியுணவுப் பழக்கம்
என்று முடியும்?
சுவிட்சர்லாந்தில்
இராணுவம் இல்லையாம்
அழிப்புச் சுவையறியாதவர்கள்
சாம்ராச்சியங்களின் சரிவுதான்
சரித்திரத்தின்
கடைசிப் பக்கம்
முந்தை அரசர் அனைவரும்
சவக்குழி முற்றுப்புள்ளிதான்
சிரஞ்சீவியாக நிற்பது
நல்லது ஏதும் செய்கைதான்
புதுப்பாக்கள்
அருள்
அதே இடத்திலிருந்து
அருள் பாவிக்கிறாள்
பேராச்சி அம்மன்
உண்டியலின் மீது
அர்ச்சனைத் தட்டை வைத்த
புண்ணியத்தில்
இந்த வருஷமும்
புதுவீடு கட்டிவிட்டார்
பூசாரி
- மா.கண்ணன், இராஜபாளையம்
பார்ப்பனக் கொள்ளை
உழவு செய்யாத பார்ப்பானுக்கு
ஊர் முழுதும் பட்டாவாம்
சதுர்வேதி மங்கலம்
பிச்சை எடுக்கும் பார்ப்பானுக்குப்
பிரமதேயம் தானமாம்
வாங்கிய பரம்பரை வாழ்கிறது
கொடுத்த பரம்பரை மாய்கிறது
- அ. வையாபுரி, நத்தம் வேமா
பெயரோடு....!
என் பெயரைக் கேட்டார்கள்
சொன்னேன்
தெரியவில்லை.
என் அப்பா பெயரைக் கேட்டார்கள்
சொன்னேன்
தெரியவில்லை
என் தாத்தா பெயரைக் கேட்டார்கள்
சொன்னேன்
கண்டுபிடித்து விட்டார்கள்
என் சாதியை!
- கற்பனைப் பித்தன், பெரம்பலூர்
பறை
நெஞ்சக் கடலில்
நித்தம் “சுனாமி”
“காதல்”
நாங்கள் சரியாகச் செய்தும்
“தப்பு” என்கிறார்கள்
“எங்கள் இசை” “பறை”
பெண் குழந்தை பிறந்தது
பெருமைப்பட்டாள் தாய்
பெண் கல்வியின் அடையாளம்
- மா. பாலமுருகன், ஆலம்பாடி
பதிலில்லை!...
எங்களைப்போல் இன்றைய
மக்களுக்கு
உங்களால் என்ன நன்மை?
தொலைத் தொடர்பு சாதன
கோபுரங்கள் கேட்டன
கோயில், மசூதி, சர்ச்...
கோபுரங்களைப் பார்த்து!
ஒலிபெருக்கிகளைக் கொண்டு
காதையே செவிடாக்கும்
ஒலியெழுப்பினவே தவிர
பதிலேதும் சொல்லவில்லை!!
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
கவலை
அம்மணங்களை
ருசிக்கும்
துச்சாதனக் கண்கள்
உடைகள் குறித்துக் சிலாகிக்கின்றன
ஆண்டாண்டு காலமாய்
அடிமையாக்கி வைத்த
ஆம்பளைத்தனங்கள்
பெண்ணின் ஒழுக்கத்திற்கு
பெருங்கவலை கொள்கிறது
- கலைபாரதி, சித்தமல்லி, திருவாரூர்
வாசனை
வீதியெல்லாம் பூ விற்றுவிட்டு
வந்த விதவை
கூடையை கவிழ்த்து விட்டு
தூங்குகிறாள்
தினந்தோறும்.
மெழுகு
இரவெல்லாம் கால் வலிக்க
நின்று உருகிய மெழுகு காலையில் தூங்கி வழிந்தது தரையில் படுத்து.
- கு. சந்தோஷ்குமார், சென்னை-28 |