தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
புதிய தலைமுறை
அண்ணா அம்பேத்கர்
பிறமொழிகளில் பெரியார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
பகுத்தறிவு
மருத்துவம்
தமிழர்கள்
நூல் அறிமுகம்
ஹாலிவுட் கலை - 17
அணுஅணுவாய் - 7
பதிலடி
உலகப் பார்வை
பளீர்... பளீர்...

 

 

சிறுகதை

எதிர்ப்பதம்

- பட்டுக்கோட்டை ராஜா

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பெரியவர்களால் பதில் சொல்லச் சாத்தியப்-படுவதில்லை. அவர்தம் சந்தேகங்களை விளக்குவதும் துர்பலமாகிவிட்டது.
எனது மகள் கனிமொழியும் இந்த ரகம்தான். எப்போதும் துறுதுறுவென்று ஏதாவது செய்து கொண்டேயிருப்பாள். படிப்பிலும் படு சுட்டி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.
சின்ன வயதிலேயே அவளின் சந்தேகங்-களுக்கு என்னால் விடை சொல்ல முடிந்த-தில்லை. விளக்கை ஊதுனா அணைஞ்சிடுது, அடுப்பை ஊதுனா மட்டும் எரியுதே, ஏம்ப்பா? என்று ஒரு முறை கேட்டாள்.
ஆச்சர்யமாகிவிட்டதெனக்கு, என்ன சொல்-வ-தென்றும் தெரியவில்லை.
விஞ்ஞான ரீதியான பதில் ஏதாவது இருக்கும். எனக்குத் தெரியாததால் பேச்சைத் திசை மாற்றிச் சமாளித்தேன்.
இருட்டு சிறந்ததா, வெளிச்சம் சிறந்ததா இன்னொருமுறை கேட்டாள். வெளிச்சம்-தான்! என்று தயங்காது சொன்னேன். தப்பு... தப்பு என்று சிரித்தவள். வெளிச்சத்துல இருக்கிறவர்களுக்கு இருட்டுல இருக்கிறதைப் பார்க்க முடியாது... ஆனா இருட்டுல இருக்கிறவங்களால வெளிச்சத்துல இருக்கிற-தைப் பார்க்க முடியும்... அப்படின்னா இருட்டு-தானே சிறந்தது! என்று விளக்கினாள்.
நான் வாயடைத்துப்போனேன். இப்படி நான் கனிமொழியிடம் தோற்ற சந்தர்ப்பங்களே அதிகம். அவள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி-யதும் என்பாடு இன்னும் திண்டாட்டமாகி-விட்டது.
எப்போது என்ன சந்தேகம் கேட்பாளோ? என்ற தயக்கத்தோடுதான் நான் வீட்டிற்குள் நுழைவேன்.
நேற்றிரவு நான் வீடு திரும்பத் தாமத-மாகியதால் கனிமொழி முன்னமே உறங்கி-விட்டிருந்தாள். இன்று காலை நான் அலு-வலகம் கிளம்பும் நேரம் அவளிடம் வகையாகச் சிக்கிக்கொண்டேன். சைக்கிள் ஸ்டான்ட் விடுவித்த சத்தம் கேட்டு வந்துவிட்டாள்.
அப்பா, தமிழ்ப்பாடத்துல ஒரு சந்தேகம் என்று எதிரே வந்து நின்றாள்.
ஆபிஸ் கிளம்பிட்டேனேம்மா... என்று சலித்துக் கொண்ட நான் சரி சொல்லு!
குணம்ங்கிற வார்த்தைக்கு எதிர்ப்பதம் என்ன?
குணத்துக்கு எதிர்ப்பதமா...? வழக்கம் போலவே பதில் தெரியவில்லை எனக்கு எந்தப் பாடத்துல வருது இந்தக் கேள்வி?
அதான் சொன்னேனேப்பா... தமிழ்ப் பாடத்துல!
உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த என் அப்பா என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார்.
நான் அதைச் சொல்லலம்மா... தமிழில் எந்தப் பாடத்துல?
கனிமொழி உள்ளே ஓடி தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வந்தாள். இதுல மயில்னு ஒரு பாடம் இருக்குப்பா... அதுலதான் எதிர்ச்சொல் தருகன்னு இதைக் கேட்டிருக்காங்க! அந்தப் பக்கத்தைப் புரட்டி எடுத்து என்னிடம் தந்தாள்.
குணம் என்கிற வார்த்தை பாடத்தில் எந்த இடத்தில் வருகிறது என்று தேடியதில், மயில் எண்ணெய் பல நோய்களைக் குணப்படுத்து-வதில் மருந்தாய்ப் பயன்படுகிறது! என்று போட்டிருந்தது.
குணப்படுத்துவதில் என்ற வார்த்தையில் இருக்கிற குணத்தை எடுத்துக்கொண்டு எதிர்ப்-பதம் கேட்டுவிட்டாள். பாடம் தயாரிப்பது ஒரு குழு. கேள்விகள் தயாரிப்பது ஒரு குழு. இடையில் மாட்டிக் கொண்டது இந்தப் புழு. கேள்வி கேட்டவருக்கே பதில் தெரியுமா? என்பது சந்தேகம்தான்.
உங்க டீச்சரைக் கேட்டியாம்மா!
கேட்டம்ப்பா... அவங்க உங்க அப்பாதான் கவிதையெல்லாம் எழுதுவாரே, அவரையே கேட்டுகிட்டு வான்னு சொல்லிட்டாங்க... அப்புறம் அவங்க தப்பிக்கிறதுக்குத் தோதா ஸ்கூல் பெல்லும் அடிச்சிட்டுது! - வயதுக்கு மீறின வியாக்கியானம்.
அவங்க தப்பிச்சிட்டாங்க... நாந்தான் உன்கிட்ட மாட்டிக்கிட்டேன்! என்றபோதே எனக்குள் அந்த யோசனை வெளிச்சமிட்டது.
தமிழுக்கு நோட்ஸ் போட்டிருப்பாங்களே... அதை எடுத்திட்டு வாம்மா!
கொத்தனார் தமிழ் உரை புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள் கனிமொழி. புரட்டினேன் அதில் குறிப்பிட்ட அந்தப் பாடத்தில் எட்டுச் சொற்களுக்கு எதிர்ப்பதம் போட்டவர்கள் தமக்கு வசதியாய் குணம் என்கிற வார்த்தையை மட்டும் போடாது விட்டிருந்தார்கள். வகையாகச் சிக்கிக்-கிட்டியா? என்றது மனது.
இன்னொரு யோசனை தோன்றியது. வள்ளுவர் தொடாத விஷயங்களே இல்லையே, அதில் இந்தக் கேள்விக்குப் பதில் இருக்க வேண்டுமே?
நினைவலைகளைத் திரட்டிக் கொணர்ந்த-போது அந்தக்குறள் என் நினைவில் கோடு கிழித்தது. குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்
கிடைச்சுதுடா பாயின்ட்டு... வள்ளுவரா கொக்கா!
ஓகேம்மா... கண்டுபிடிச்சிட்டேன்... குணத்துக்கு எதிர்ப்பதம் குற்றம்... உங்க டீச்சர்-கிட்ட சொல்லு! உள்ளே உட்கார்ந்திருந்த அப்பாவை மதர்ப்போடு பார்த்துவிட்டு சைக்கிளைத் தெருவில் இறக்கிக் கிளம்பினேன். மனதுக்குள் என்னை நானே மெச்சிக் கொண்டேன். சட்டை காலர் காதோரம் படபடத்தது.
மாலையில் வீடு திரும்பின வேளை மறுபடியும் கனிமொழியிடம் சிக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
வாசலிலேயே வாசுகி எச்சரிக்கை மணியடித்-தாள் என்னங்க, உங்க பொண்ணு உங்களுக்-காகக் காத்திட்டிருக்கா... நீங்க சொல்லிக் கொடுத்தது தப்புன்னு அவங்க டீச்சர் சொல்லிட்டாங்களாம்!
போச்சுடா! என்றபடியே சைக்கிள் ஸ்டான்ட் போட்டேன்.
அந்தச் சத்தம் கேட்டு கனிமொழி அறைக்-குள்ளிருந்து வெளியே வந்துவிட்டாள். போங்கப்பா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியல... நீங்க சொன்னதைக் கேட்டுக்கிட்டுப்போயி குணத்துக்கு எதிர்ப்பதம் குற்றம்னு சொன்-னேன்... டீச்சர் அது தப்புன்னு சொல்லிட்-டாங்க!
அப்புறம் சரியான விடை என்னவாம்?
திண்ணையில் உட்கார்ந்திருந்த என் அப்பா தான் படித்துக் கொண்டிருந்த வார இதழை மூடிவிட்டு எங்களின் உரையாடலுக்கு செவி கொடுப்பது தெரிந்தது.
டீச்சர் விடை சொல்லலப்பா... ஆனா குற்றம்னா ஆங்கிலத்துல க்ரைம்னு வரும். குற்றம் செய்வதற்கு எதிர்ப்பதம் நன்மை செய்வது... அதனால குணம்கிற வார்த்தைக்கு குற்றம் எதிர்ப்பதமாகாதுன்னு சொல்லிட்-டாங்க... மற்ற பிள்ளைங்கள்லாம் சிரிச்சாங்க... எனக்கு கோபம் கோபமா வந்துச்சி தெரியுமா?
யாருடா அந்த டீச்சர்... அதுக்கும் தெரியலை... நம்ம சொல்றதையும் தப்புன்னு சொல்லுது. சரியான கபடதாரியா இருக்கும் போலிருக்கே! நான் கனிமொழியைத் தோளில் தூக்கிக் கொண்டேன்.
டீச்சரை அப்படிச் சொல்லாதீங்கப்பா... அறிவு புகட்டும் ஆசியர்களை மதிக்கணும்னு நீங்கதானே சொல்லிக் குடுத்தீங்க!
என் அப்பா இடை நுழைந்தார் தபாரும்மா கனிமொழி... குணத்துக்கு எதிர்ப்பதம் குற்றம் கிடையாது.. குறைபாடு... இப்போ மருத்துவ-மனையில் ஒருத்தனைக் குறைபாட்டோட கொண்டு சேர்க்கிறோம். அவன் குணமாகி வெளியே வருவான். அதனால குணத்துக்கு எதிர்ப்பதம் குறைபாடுதான்!
போங்க தாத்தா... நீங்களும் லூசு மாதிரி பேசுறீங்க... ஆஸ்பிட்டல்ல ஒருத்தனை நோயோடதான் கொண்டு சேர்ப்போம்... அவன் குணமாகி வருவான்... அப்படின்னா குணத்துக்கு எதிர்ப்பதம் நோய்னு சொல்லிடறதா? கனிமொழி கைகொட்டிச் சிரித்தாள்.
எனக்கு உள்ளுக்குள் கோபம். குழந்தை மீதல்ல; பாடத்திட்டத்தின் மீது.
என்ன பாடத்திட்டமிது? பாடத்திட்டமா அல்லது பெற்றோரைப் பிள்ளைகள் திட்ட வந்த பாடமா?
குழப்பமே மிஞ்சியது.