நூல் அறிமுகம்

செலவைக் குறைங்க சார்
இராம்குமார் சிங்காரம்
பெரிகாம், 37, அசீஸ்முலக் 2ஆம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 பக்கம். 112 ரூ. 60
நூலிலிருந்து...
குறைவான வட்டியில் பெற்ற கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தாதீர்கள்
வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றை அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வாரி வாரி வழங்கி வருகின்றன. இந்தக் கடனை கொண்டிருக்கும் தொழில் முனைவோர், தமக்கு அவ்வப்போது கிடைக்கும் கூடுதல் பணத்தைக் கொண்டு, இந்தக் கடனை விரைவில் அடைத்துவிட முயற்சிப்பர். ஆனால் அப்படிச் செய்யத் தேவையில்லை. மாறாக, அதை சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்து, அவசரமாக பணம் தேவைப்படும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், அவ்வளவு குறைந்த வட்டிக்கு திரும்பவும் வேறெங்கும் கடன் கிடைக்காது.
கடன் வாங்கி வட்டி கட்டுவதைப் போன்ற கொடிய வியாதி வேறெதுவுமில்லை. எப்போது கடன் வாங்கினாலும் வட்டியை மட்டும் செலுத்தாமல் அசலையும் சேர்த்தே செலுத்துங்கள்.
நல்ல சிட்ஃபண்டில் சீட்டுக் கட்டினால் பணத் தேவையின் போது வட்டி இன்றி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். சீட்டு ஏலத்தில் கிடைக்கும் கழிவைக் கணக்கிட்டால் தோராயமாக 15 முதல் 20 விழுக்காடு வரையாக இருக்கும். இதில் அசலை மாதந்தோறும் திருப்பிச் செலுத்திவிடுவதால் சீட்டு முடிந்ததும் அந்தக் கடனும் முடிந்துவிடும். அவசரத் தேவைக்கு குறைந்த செலவில் பணம் புரட்ட இது ஒரு சிறந்த வழியாகும்.

சீரான பற்கள் சிறந்த முகத்தின் திறவுகோல்
டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன்
ஓவியா பதிப்பகம், 44/62, அம்மையப்பன் தெரு,
இராயப்பேட்டை, சென்னை - 600 014 பக். 224 ரூ.100
நூலிலிருந்து...
ஆரோக்கியமான, நல்ல பற்களுடன் இருக்கும் குழந்தைகள், நன்றாகக் கல்வி பயிலுகின்றனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சிதைவுற்ற, ஆரோக்கியமற்ற பற்களுடன் உள்ள குழந்தைகள் கல்வியில் மட்டுமின்றி, மனோரீதியாகவும் பின்தங்கி இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, பல் நோய்களினின்றும் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் குழந்தைகள், மரபு வழியான உடல் ஆரோக்கியத்துடன் வளருகின்றன.
முறையான உடல் வளர்ச்சிக்கும், மரபு வழி வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும், முழுமையான நரம்பு வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியம் முக்கியப் பங்காற்றுகிறது.
உணவு, ஊட்டச்சத்து, தொற்றுநோய்த்தடை, சுகாதாரம், ஆரோக்கியம் அனைத்துமே, வளரும் குழந்தைகளுக்கு, பற்களைப் பாதுகாப்பதன் மூலம் கிடைக்கிறது.
கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கு, அதன் ஆறாவது வாரத்திலேயே பற்கள் உருவாகின்றன. இந்தக் காலத்தில் குழந்தையின் பற்களில், மஜ்ஜை எனப்படும் உயிர் அணுக்கூறுகள் அமையப்பெற்று, கண்ணகச் சத்துடன் கூடிய உறுதியான பற்கள் அமைதல் வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், கருவில் உள்ள குழந்தையின் உருவ அமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு, பற்களும், தாடை அமைப்பும் மாறுபட்டு விடுகின்றன.
திசு வளர்ச்சிக் குறைபாடும், கால்சியம் குறைபாடும் ஏற்பட்டு, உதடுகளிலும், வாய் அண்ணங்களிலும் பிளவு ஏற்படுகிறது. இவ்வாறான குழந்தை பெற்ற தாய், மனோரீதியாக மிகவும் வேதனை அடைகிறாள்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் இந்தக் குறைபாடு குழந்தை பிறந்த பின்பும், பச்சிளம் பருவத்திலும் தொடர்கிறது. தாடையின் வடிவமைப்புக் குறைபாடும் பற்களின் அமைவுக் குறைபாடும், இத்தொடர்ச்சியின் விளைவே ஆகும். இம்மாதிரியான குறைபாடுள்ள குழந்தைகள், பின்தங்கிய நாடுகளில், சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றன.
கொடுமையான, இந்த மாறுபட்ட வடிவமைப்பால், குழந்தையின் வாய்ப்பகுதி கிருமிகளால் தாக்கப்பட்டு, அதனால் அழுகிய வாய் அழற்சியும், வாய்ப்புண்ணும் ஏற்படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இம்மாதிரியான நிலை காணப்படுவதில்லை.

அன்பின் சுவடுகள்
சீர்வரிசை சண்முகராசன்
இலெமுரியா நூல் வெளியீட்டகம், 1301, கோரஸ் டவர்ஸ் (நேகா)
13ஆம் தளம், வர்தக் நகர், தானே (மேற்கு) மும்பை - 400 606 பக். 192 ரூ. 90
நூலிலிருந்து...
தமிழ்நாட்டை பொறுத்தளவில் அரசியல் இல்லாத சமூக நீதிக்காக தொடங்கப்பட்டது திராவிட இயக்கம். இது சாதி இழிவு நீங்கிய சமத்துவ நீதி கிடைக்க பெரும்பாடுபட்டது. இந்தக் கட்சிக் கொள்கைக்காக பல தலைவர்கள் தோன்றி உழைத்தார்கள். என்றாலும் தந்தை பெரியாரின் பெயர் மட்டும் சுயமரியாதை சுகவாழ்வுக்காக வரலாற்றில் நிலைத்துவிட்டது.
சின்னச் சின்ன மூடப் பழக்கங்களுக்காக நேரத்தையும், காலத்தையும் செலவு செய்யாமல் மூலக் கொள்கை நமக்குத் தரும் இழிவுகளைப் போக்கவே பெரியார் போராட்டங்களை நடத்தினார். தொ.பரமசிவன் எழுதிய தெய்வம் என்போர்... என்ற நூலில் பெரியாரை புரிந்து கொள்ள முயலுகின்றவர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. குருதிப் பலியும் சாமியாட்டமும் கூட மூட நம்பிக்கைகள்தானே? என்பதே அந்தக் கேள்வி. இப்படித் திருப்பிக் கேட்கலாம்.
நம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் இடையே என்ன இருக்கிறது? ஏதோ ஒரு வகையில் நுண் அரசியலும் அதிகாரமும் இருக்கின்றன என்பதே நமது பதிலாகும். இந்தப் பதிலையும் கொண்டுதான் பெரியாரையும், மக்கள் திரளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பொது வாழ்க்கையில் ஒரு கொள்கையை புனிதமாக்கி ஏற்றுக் கொண்ட பின்னர், அடுத்த கொள்கையில் இருந்து விட்டு விலகி இன்னொரு கொள்கையை ஏற்றுக் கொள்வது மனிதர்களின் உரிமை. ஆனால், ஒரு கொள்கையை ஊர் அறிய, உலகம் அறிய ஏற்றுக் கொண்ட பின்னர் பொது மேடைகளில் இதழ்களில் விமர்சனம் செய்து பேசுவது, எழுதுவது கோழைத்தனமான போக்கு. வள்ளுவர், பெரியார் ஆகியோரின் வாழ்வியல் கொள்கையை ஏற்றுக் கொண்ட பலர் நடைமுறையில் அதனைச் செயல்படுத்த முடியாத பலவீனப் போக்கை வெளிப்படையாக சொல்ல முடியாவிட்டாலும் மனம் உறுத்தப்பட்டு வருந்துகிறார்கள் என்பதே உண்மை. ஆனால், விமர்சனம் என்று வந்துவிட்ட பின்னர், அவர்களை எப்படி நம்புவது? தெய்வத்தை, ஆன்மாவை நம்பாத ஒருவரின் வழியைப் பின்பற்றுகிறவர்கள் அக்கொள்கைக்கு முரணாக நடந்து கொண்டால் யாருடைய மரியாதைக்கு இழிவு? சும்மா இருந்து விடலாம். சங்கை எடுத்து ஊதி மக்களிடம் காட்டிவிட்ட பின்னர் பித்தலாட்டம் எதற்கு?
இந்திய கம்யூனிஸ்ட் என்றால் டாங்கே என்று போற்றப்பட்டவர் இந்திரா காந்தியின் அறிவுரையால் தடம் புரண்டு போன பின்னர் அவருக்கு ஏற்பட்ட கொள்கை மரியாதையை உலகம் அறியும். டாக்டர் அம்பேத்கரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஆர்.டி.பண்டாரே, எஸ்.கே.பாட்டீலின் ஆசைக்கு இணங்கி இந்தியாவின் கவர்னர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது குடியரசுக் கட்சிக்கு அவர் ஏற்படுத்திய கொள்கைக் களங்கம் அல்லவா? அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக இருந்த இன்றைய மத்திய இணை அமைச்சர் இ.வி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையார் 1952இல் திருச்சியில் நடந்த தி.மு.க., மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து, கொள்கைக் குழப்பங்கள் என்று தலைப்பில் கடுமையாக தாக்கிப் பேசினார்.
இதை எதிர்த்து அக்கட்சிக்கு கொள்கைக் குழப்பம் என்று ஜனசக்தி வார இதழில் 18 வாரங்கள் பதில் எழுதினார் தலைவர் ப.ஜீவானந்தம். அதே சம்பத் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய கட்சி தொடங்கியபோது மக்கள் அதை வரவேற்கவில்லை - ஏற்றுக் கொள்ளவில்லை. என்றைக்கும் நம்முடைய எண்ணம், எழுத்து நிலைக்க தெளிவான கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
|