ஹாலிவுட் கலைவாணர்-17
உலக நாயகன் சார்லி சாப்ளின்
- சு. அறிவுக்கரசு

1889 ஏப்ரல் 16இல் பிறந்த சார்லி சாப்ளின் வசதியற்ற பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசாங்கம் நடத்தும் ஏழைகளுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டு வளர்ந்தவர். அந்த விடுதியில் உணவு, உறைவிடம், படிப்பு என்று தரப்பட்டது. மூன்றாவதான படிப்பு அவருக்குப் பிடிக்காமல் இருந்ததால் விடுதி வாழ்க்கையே சரிப்படாமல் முதல் இரண்டையும் இழந்து-விட்டு விடுதியை விட்டு வெளியேறிவிட்டவர். சம்பிரதாயமான படிப்பு இல்லையென்றாலும் அவரின் அறிவுக் கூர்மை பிரமிக்க வைப்பது. அவரின் அறிவுத் தாகத்திற்கும் அளவே கிடையாது.
அவருடைய அனுபவங்களும் அவற்றின் விளைவாக வளர்ந்த பட்டறிவும் ஆழ்ந்த சிந்தனைத் திறனும் படிப்பாளியாக இல்லாத அவரை அறிவாளியாக்கின. ஏழ்மைத் துயரில் பெரும்பாலான மக்கள் வாடிக் கொண்டிருக்-கையில் பண மெத்தையில் படுத்துப் புரளும் சிலர் ஒட்டு மொத்தச் சமுதாயத்-தைச் சுரண்டிக் கொண்டிருக்-கும் செயலால், வளர்த்துக் கொண்ட கோபாவேதம் அவரைச் சிறந்த மானுடப் பற்றானராக்கியது. அவரின் சீற்றத்தைச் சீரிய சம்பவங்-களாக சினிமாவில் படம் பிடித்துக் காண்பித்து சமூக அவலத்தைக் கண்டித்தவர் அவர்.
மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம்
புண்மீதில் கோல் பாய்ச்சும் புலையா
செல்வராம் - இதைத் தன்
கண்மீது கண்டந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி!
எனப் பாடினார் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன்!
என்ன வளமான உவமை! வறியோரைச் செல்வம் படைத்தோர் செய்யும் கொடுமை-யைக் கண்ணால் பார்த்துக் கொதித்து அந்தக் கோபம்தான் கொப்பளித்த நட்சித்திரங்களாக வானில் மாலை மங்கியபின் காட்சியளிக்கிறது என்றார் புரட்சிக் கவிஞர்! கருநீலப்பட்டில் சரிகைப் பூக்களாகக் காட்சி தருகின்றன நட்சத்-திரங்கள் என்று கவிதை நயத்துடன் எழுதிக் கொண்டிருந்த அழகு உபாசகக் கவிஞர்கள் மத்தியில் அதனையே ஏழைகளின் துன்பத்திற்கு எடுத்துக் காட்டாகக் கவிபாடிய கவிஞனைப் போலவே சீமான்களின் சிங்கார வாழ்வினை சினிமாவாக்கியவர்களின் மத்தியில், சார்லி சாப்ளின் விளங்கினார்.
அவருடைய மனித நேயம் அமெரிக்க சிஅய்ஏக்களுக்கும் எஃபிஅய்களுக்கும் கம்யூனிச-மாகத் தெரிந்தது. மானிடப் பற்று கம்யூனிசம் என்றால், இருந்துவிட்டுப் போகட்டுமே என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் காரியத்தைக் கவனித்தார் சார்லி சாப்ளின்! சமுதாயத்தின் அர்த்தமற்றப் பழக்கவழக்கங்களை எதிர்த்திடும் மனது கொண்டிருந்தார். பழக்கம், வழக்கம், நடை-முறை, சாத்திரம், சட்டம் என எதுவுமே மனித குலத்தின் சுதந்திரமான போக்கைக் கட்டிப் போடுவதை ஏற்றுக் கொள்ளாதவராகவே அவர் வாழ்ந்தார்.
ராபர்ட் ஃபிராஸ்ட் பாடியதைப்போல என் முன்னால் இருந்த இரண்டு வழிகளில் தேய்ந்த பாட்டையை விட்டுப் புதிய பாதையில் நடந்-தேன்; நடந்ததால் நான் கவிஞனானேன் என்று ராபர்ட் ஃபிராஸ்ட் பாடியதைப் போல சார்லி சாப்ளினும் நடந்தார். வரலாறு படைத்தார். வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல், கழுத்து போகினும் கைக்கொள்ள வேண்டா என்று கண்டிப்பாகக் கூறினார் புரட்சிக் கவிஞர். அதை சார்லி சாப்ளின் கடைப்-பிடித்தார் என்றே கூறலாம்.
பட்டறிவின் தாக்கம் பெரிதாக இருந்தாலும் பிற்காலத்தில் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிக்கக் கற்றவரது வாழ்க்கையை மாற்றிப் போட்டவை இங்கர்சாலின் எழுத்து-களும் உரைகளும். அமெரிக்காவின் சிறந்த பகுத்தறிவாளரான இங்கர்சால் கடவுள், மதக் கண்டனக் கருத்துகளுக்குப் பெயர் பெற்றவர். 25 பேர்கள் கொண்ட கூட்டத்தில் மட்டுமே எல்லோரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், நூற்றுக்-கணக்கில் ஆயிரக்கணக்கில் தம் கூட்டங்-களுக்கு மக்களை ஈர்த்தவர் இங்கர்சால். கட்டணம் செலுத்தி அவருடைய பேச்சைக் கேட்டனர் மக்கள். அந்த வகையில் அமெரிக்கா-வின் அதிபரின் வருமானத்தைப் போல மூன்று மடங்கு வருமானம் ஈட்டியவர். அவ்வளவு அழகான, அறிவார்ந்த, வாதத் திறமையுடன் பகுத்தறிவுக் கருத்துகளை வெளியிட்டவர். அந்தக் கருத்துகள் சுய சிந்தனையாளரான சார்லி சாப்ளினை ஈர்த்தது வியப்பில்லைதான் எமர்சன் எழுதிய சுய நிர்ணயம் எனும் நூலைப் படித்துப் படித்துத் தமது சுய கொள்கைகளை சார்லி சாப்ளின் உருவாக்கிக் கொண்டார். உலகின் புதுக்கவிதைக்கு முன்னோடி எனப்-படுபவர் வால் விட்மன். பாதிரியின் ஜெபத்-தைவிட உழைப்பவரின் வியர்வை நாற்றம் மேலானது எனப் பாடிய உழைப்பவர்களின் கவினாகத் திகழ்ந்தவர் விட்மன். பெண்களின் உரிமைக்காவும் உயர்வுக்-காகவும் குறலெழுப்பிப் பாடல்-களைப் புனைந்தவர் விட்மன். அவர் என் நாட்டுக் கவிஞர் என அமெரிக்-கர்கள் ஒவ்வொருவரும் பெருமை பேசுவர். அந்தக் கவிஞரின் புல்லின் இதழ்கள் (Leaves of Grass) எனும் கவிதை வரிகள். சாப்ளினைப் புடம் போர்த்து வார்த்து எடுத்தன என்று கூடக் கூறலாம்.
இங்கிலீசு ஆசிரியர்கள் மார்க் ட்வைன், எட்கர் ஆலன் போ உள்ளிட்ட பலரின் நூல்களும் சாப்ளினைக் கவர்ந்தவை. அணுவியல் அறிஞர் அய்ன்ஸ் டீனைச் சந்தித்துப் பல பொருள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை அசை-போட்டுக் கொண்டிருப்பார் எந்திரங்கள் மனிதனின் வேலை வாய்ப்புகளைப் பறித்-தனவா? அப்படியென்றால் அவற்றை ஏன் மனிதன் கண்டுபிடிக்க வேண்டும்? என்-றெல்லாம் இருவரும் விவாதித்தது உண்டு. விவாதம் ஒரு புதிய சினிமாவுக்கான கருப் பொருளாகவே அமைந்துவிட்டது. சாப்ளினின் சினிமா ஒன்றைக்கூடப் பார்த்-திராத காந்தியாரை லண்டனில் சந்தித்-திருக்கிறார். எந்திரங்களையே பிடிக்காத காந்தி-யிடம் எந்திரங்கள் பற்றி அய்ன்ஸ்டீனிடம் பேசியது போலவே பேசியிருக்கிறார். நூற்பு எந்திரங்கள், நெய்யும் எந்திரங்கள் வேண்டாம் எனக் கூறி தக்ளியில் நூல் நூல் நூற்று ராட்டையில் சுற்றி தறியில் செய்து கட்டிக் கொள்ளும் கதர்த்திட்டம் கொண்டு வந்த காந்தியும் அரிய அறிவியல் கண்டுபிடிப்பான எந்திரத்தைக் கொண்டு சினிமாப்படம் தயார்த்தவருமான சாப்ளினும் சந்தித்து விவாதித்னர். இரு முனைகளான இருவருடனும் விவாதித்ததன் விளைவாகத்தான் மாடர்ன் டைம்ஸ் எனும் சினிமாவையே தயாரித்தார் சாப்ளின்.
மற்றொரு இந்தியரையும் சாப்ளின் சந்தித்திருக்கிறார். அவர் பண்டித நேரு சாப்ளினின் ரசிகரான ஜவகர்லால் நேரு இவருடன் பேச வேண்டுமென்பதற்காகவே, காரில் உடன் பயணம் செய்து பேசி மகிழ்ந்தார். அதுபோது நேருவின் மகள் இந்திரா காந்தி-யையும் சந்தித்துப் பேசினார். சொக்க வைக்கும் அழகி என்று அவரை சாப்ளின் குறிப்-பிட்டார். உண்மைதானே!
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் இங்கிலாந்து நாட்டு அரசக் குடும்பத்துக்-காரருமான மவுன்ட் பேட்டன் பிரவுவிடம் சாப்ளினுக்கு நெருங்கிய நட்பு இருந்தது, மவுண்ட்பேட்டன் இந்த நாட்டைப் பயன்-படுத்திக் கொண்டு நம்ம ஆள்களைப் போலவே சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டார். சாப்ளினும் அளித்தார். சில ஆயிரம் அடிகள் படம் எடுத்தார். லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் மவுண்ட் பேட்டனும் அவர் மனைவி எட்வினாவும் சாப்ளினுடன் பழகிய காலம் அது. குறிப்பாகச் சொன்னால், பிரபலமானவர்-களுடன் நெருங்கிப் பழகும் தன்மையுள்ள எட்வினாவுடன் பழகிய காலம் அது. அந்தக் காலத்தில் அவரின் கணவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அவரோ...? நீ சாம்ராஜ்யத்தை ஆளலாம், ஆனால் நடிக்க முடியாது என்று பக்குவமாகக் கூறி படம் எடுப்பதை நிறுத்தி-விட்டார், மவுன்ட்பேட்டன் இதிலும் ஏமாந்து போனார்.
மவுன்ட் பேட்டன் நடித்த படம்தான் வரவில்லை. அவரைப்போல வேறொருவர் நடித்தபடம் வந்தது. அவரைப் பற்றிய படம். இன் விச் வி சர் (In which we, Sir) எனும் படம். மவுன்ட் பேட்டனின் கப்பற்படை வாழ்க்-கையைச் சித்திரிக்கும் படம். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் ரிச்சர்டு அட்டன்பரோ என்ற இயற்பெயர் கொண்ட லார்டு அட்டன்பரோ! ஆம், காந்தி படத்-தினைத் தயாரித்து இயக்குயவர்தான்!
1977 டிசம்பர் 25இல் சாப்ளின் இறந்தார். கிறித்துவ மதத்தில் பிறந்தாரே தவிர அந்த மதம் கூறும் முறைகளைப் பின்பற்றாதவராக வாழ்ந்தவர் கிறித்து பிறந்த நாளில் மறைந்தார். மறைந்த பிறகும் பரபரப்புக்கு ஆளானார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் அரண்மனை போன்ற அவரது பெரிய வீட்டில் இறந்து போனார். இறந்த அவரது உடலை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டனர். பெருந்-தொகை கேட்டுப் பேரம் பேசுகிறார்கள் என்-றெல்லாம் பரபரப்பான வதந்தி உலகம் முழுக்க பரவியது. அதை மறுக்க வேண்டிய கட்டாயம் அவரின் குடும்பத்தார்க்கு ஏற்பட்டது. ஆனால், கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது அவரது உடல் அல்ல என்று இன்றைக்கும் சில பேர் முணுமுணுத்துக் கொண்டு இருக்-கிறார்கள். அந்த வகையில் இறந்து 30 ஆண்டுகளுக்கும் பிறகும் அவர் உலக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு சர்ச்சைகளின் நாயகனாகவே இருக்கிறார்.
அவருடைய வரலாறு நூலாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான அளவில் விற்பனை ஆகியுள்ளது. அவரது 70 சினிமாப் படங்கள் ஒரே டி.வி.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ளன. (விலை 30 அமெரிக்க டாலர்கள்) அவரைப் பற்றி இதுவரை 1114 நூல்கள் எழுதப்-பட்டுள்ளன. 18,400 கட்டுரைகள் எழுதப்-பட்டுள்ளன. இவரளவுக்குச் சிகரங்களைத் தொட்டவர் யாரும் திரையுலகில் இல்லை.
அவர் சிறந்த மனித நேயம் மிக்கவர். ஏழை பங்காளர். பகுத்தறிவாளர்!
-நிறைவு
|