தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
புதிய தலைமுறை
அண்ணா அம்பேத்கர்
பிறமொழிகளில் பெரியார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
பகுத்தறிவு
மருத்துவம்
தமிழர்கள்
நூல் அறிமுகம்
ஹாலிவுட் கலை - 17
அணுஅணுவாய் - 7
பதிலடி
உலகப் பார்வை
பளீர்... பளீர்...

 

 

பளீர்... பளீர்...

தெருவில் குழந்தைகள்

உலகம் முழுதும் 30 கோடி குழந்தைகள் வன்முறை, பலாத்காரம் ஆகிய கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இவர்களில் 10 கோடி குழந்தைகள் ஆதரவற்றவர்களாக தெருக்களில் வசிக்கின்றனர். தெரு ஓரங்களில் வசிக்கும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளில் உள்ளனர். இவர்களில் 35 சதவிகிதத்தினர் பள்ளி செல்லாதவர்களாகவும், 35 சதவிகிதத்தினர் குழந்தைத் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள்.

- யூனிசெப் ஆய்வு அறிக்கை


பளீர்... பளீர்... வேலை செய்யும் இடத்தில் கடவுளுக்கு என்ன வேலை?

நம்மாட்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று பிழைக்கச் சென்றாலும் அங்கு ஒரு சிறு இடம் கிடைத்து விட்டால் போதும் உடனே அங்கே ஒரு கோயிலைக் கட்டி விடுவார்கள். தனக்கான வசதி பற்றியோ, அந்நாட்டிலிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டியவைகளையோ பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் கடவுளை மட்டும் கையோடு எடுத்துச் சென்று விடுவார்கள். இடைவிடாத உழைப்பே நம்மை உயர்த்தும் என்னும் உண்மையை பலமுறை உணர்ந்தும் இன்னும் அதன் பக்கம் தம் அறிவைத் திருப்பவில்லை. சில ஆண்டுகளாக தமிழ் நாட்டிற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக் கான தமிழர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. சொந்த மண்ணிலேயே நல்ல வருவாய் ஈட்டும் வாய்ப்பை அந்நிறுவனங்கள் வாயிலாக அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது.
அண்மையில் சென்னைக்கு அருகே உள்ள ஓர் ஊரில் இயங்கும் கொரிய நாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்கிற சிக்கல் எழுந்தது. அங்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகூட வழங்கப்படவில்லை என்ற நியாய மான குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கல் குறித்து சண்டே இந்தியன் (22.3.08) பத்திரிகையிடம் தொழிலாளர்கள் பல கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். உணவு இடைவேளை நேரம் போதவில்லை; விடுமுறை இல்லாத நிலை; போதிய போக்குவரத்து வசதிகள் செய்து தராதது போன்ற நியாயமான பல குற்றச்சாட்டுகளைச் சொன்ன தொழிலாளர்களில் ஒருவர், நாங்கள் பணிபுரியும் இடத்தில் ஒரு சாமிப் படத்தை வைத்து கும்பிடுவது வழக்கம். வேலைக்கு இடையூறு இல்லாமல் சாமி கும்பிடுவோம். ஆனால் புதிதாகப் பதவியேற்ற ஒரு தலைமை அதிகாரி, அப்படத்தைப் பார்த்து கடும் கோபமடைந்தார். இது கொரியா நாட்டு கம்பெனி, இங்கு சாமியெல்லாம் கும்பிடக் கூடாது என்று கூறி, சாமிப் படத்தை கும்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். பணியிடத்தில் சாமி கும்பிடுவது தவறா? என்று தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்த தொழிலாளி கூறியுள்ளார்.
வேலை செய்யும் இடத்தில் கடவுளுக்கு என்ன வேலை? அந்தக் கடவுள் எந்தத் தொழிற்சாலையையாவது கொண்டுவந்து தந்ததுண்டா? தொழில் என்பதும் தொழிற்சாலை என்பதும் மனித அறிவினால் உருவானதல்லவா! வேலை செய்யும் இடத்தில் பூஜை புனஸ்காரங் களில் ஈடுபட்டு தான் உழைத்த பணத்தை இழக்கும் தொழிலாளர்களில் எத்தனை பேர் மே தினம் பற்றி கவலைப்பட்டிருப்பார்கள்? மே தின வரலாறும், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற பொதுவுடைமை சித்தாந்தமும், மூலதனம் - உற்பத்தி - உபரி உற்பத்தி போன்றவை பற்றியும் எத்தனை தொழிலாளர் களுக்குத் தெரியும்? தெரிந்து கொள்ள முயன்ற துண்டா? கூலி உயர்வு பெற்றுத் தந்து விட்டால் போதும் மற்றதைப் பற்றிக் கவலை இல்லை என்று கருதும் தொழிலாளர்களால் பொதுவு டைமை உலகம் விடிந்து விடுமா?
முழுவீச்சில் வேலை நடைபெற்று உற்பத்தி பெருக வேண்டும் என்று கருதி வேலை நேரத்தில் கடவுளோ பிற போதைகளோ குறுக்கிடக்கூடாது என்று ஒரு நிறுவன அதிகாரி கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
அரசு அலுவலகங்களில், ஆலைகளில், பல தனியார் நிறுவனங்களில் கடவுளர் படங்களை வைத்து பூசை என்ற பெயரால் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துத்தானே வருகிறோம். இந்த நிலை நிச்சயம் ஏற்புடையதல்ல; கண்டிக் கத்தக்கது.
அரசு அலுவலக வளாகத்திலேயே கோயில் கட்டுதல் போன்ற அரசு ஆணைக்குப் புறம்பான வேலைகளும் இங்கு உண்டே. இன்று சாமி படம் வைத்து பூசை செய்ய அனுமதி கேட்கும் இவர்கள் நாளை சரஸ்வதி பூசை, ஆயுத பூசை என்று சொல்லி இயந்திரத்தைச் சுத்தம் செய்யும் சாக்கில் பொறி கடலை தின்று விட்டு பொழுதைப் போக்க ஆரம்பிப்பார்கள். இதெல்லாம் தெரிந்துதான் வெளிநாட்டுக்காரன் பூஜைக்கு மறுப்புத் தெரிவித் துள்ளான்.
உழைப்புக்கேற்ற ஊதியம், மருத்துவ வசதிகள், விடுமுறைத் தேவைகள், சட்டப்படியான உரிமைகள் போன்ற உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவே தொழிற்சங்கங்களும் தொழி லாளர்களும் இருக்க வேண்டுமே தவிர கடவுளைப் பற்றி கவலைப்படுவதாக இருக்கக் கூடாது.

- பெரியாரிடி


இந்தியாவில் குடிசையில் வாழ்வோர் நிலை

குடிசைப் பகுதிகள், நடைபாதைகள் மற்றும் ஆரோக்கியமான வசதிகளற்ற நிலையில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 19 கோடி. (இது நகர்ப்புறங்களில் வசிப்போரில் 50 சதவிகிதம் - இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டேயுள்ளது. இன்னும் ஏழு ஆண்டு களில் இது 25 கோடியாகலாம்)
குடிசைப் பகுதிகளில் பிறக்கும் குழந்தை களில் 80 ஆயிரம் குழந்தைகள் முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன. 50 சதவிகிதக் குழந்தைகள் உடல் மெலிந்தும், 30 சதவிகிதக் குழந்தைகள் வயிற்றுப் போக்கு மற்றும் மலேரியா நோய்களால் பாதிக்கப் படுகின்றன.


பளீர்... பளீர்... - சுயமரியாதை

மனிதன் என்றால் அவனுக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போது பொங்கி எழுபவனே மானமுள்ள மனிதன். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் செய்த புரட்சி-யால் ஒவ்வொரு மனிதனும் தன்மானி-யானான். ஆன்மிகம் வளர்க்கும் அடியார்களும் சுயமரியாதை உணர்-வைப் பெற்றது பெரியாரின் சுயமரி-யாதை இயக்கத்தால் தான். கருவறை வரை சென்று கடவுளைத் தரிசிக்க உரிமை, தாய் மொழியில் வழிபாடு உரிமை கோரியதெல்லாம் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமான சுயமரியாதை இயக்கம்தான்.
அண்மையில் சிதம்பரம் கோயிலில் தேவாரம் திருவாசகம் பாட உரிமைக்-குரல் எழுப்பி வெற்றி பெற்ற ஓதுவார் ஆறுமுகசாமி அவர்களுக்கு உறுதுணை-யாய் இருந்தவர்கள் பகுத்தறிவாளர்கள் தான். தனக்கு மாதம் ரூ 3 ஆயிரம் நிதி வழங்கிய முதல்வர் கலைஞருக்கு நன்றி சொல்ல வந்த ஓதுவார் ஆறுமுகசாமியிடம் நக்கீரன் (26.3.08) செய்தியாளர், நீங்கள் வறுமையில் வாடி, பிச்சை எடுத்ததாக வந்த செய்தியால்தான் அரசின் நிதியுதவி கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கு ஓதுவார் ஆறுமுகசாமி. தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த சுயமரியாதை உணர்வை எத்தகையது என்பதைக் காட்டுகிறது.
ஓதுவார் ஆறுமுகசாமி சொன்ன பதில் இதுதான்: நான் ஆன்மிக-வாதியாக இருந்-தாலும் சுயமரியாதைக்-காரன், நானா பிச்சையெடுத்தேன். அரசு எனக்கு உதவி செய்வது வறுமையினால் அல்ல; தமிழ்ப் புலமையினால்.


பளீர்... பளீர்... - அடிமை மனோபாவத்தை வளர்ப்பதா?

பணிவு என்பது வேறு; குனிவு என்பது வேறு. அடக்கமாக இரு என்று சொல்வதற்கும் அடங்கி இரு என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. இளம் தலைமுறைக்கு நல்ல பண்புகளை இன்றையப் பெரியவர்கள் சொல்லித்தருவதில்லை. அடிமைப் பண்பையும் சுயசிந்தனைக்கு எதிரான ஆன்மிக கருத்துகளையுமே திணிக்கிறார்கள். தலைநிமிர்ந்து வாழு என்னும் தமிழனின் பண்பாட்டுக்கு எதிராக காலில் விழு என்னும் பிற்போக்குத்தனத்தையுமே விதைக்கிறார்கள். அண்மையில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. இதனையொட்டி புதுச்சேரி, காரைக்கால் அம்மையார் உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர்களின் பாதங்களுக்கு பூசை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள். பெற்றோர்களை வரிசையாக உட்கார வைத்து அவர்களின் கால்களைக் கழுவி பூசை செய்யும் படங்களும், காட்சிகளும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்துள்ளன.
பிள்ளைகள் தாம் விரும்புவதைப் படிக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதும், தமக்கு விருப்பமான துறையைத் சேர்ந்தெடுக்க அனுமதிப்பதும் அதற்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்புகளையும் செய்வதே பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கான மரியாதையை மனதால் காட்டுவதற்கு குழந்தைகளைப் பழக்க வேண்டுமே தவிர, மண்டியிட வைத்தா பழக்குவது? ஆசிர்வாதமும் பாத பூசையும் மதிப்பெண் பெற்றுத் தந்துவிடுமா? தேர்வில் தோல்வியடைந்து விடும் இளம் பருவத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் அண்மையில் அதிகரித்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பது உள்ள உறுதியை ஊட்டுவதுமே இந்த அவலத்தைப் போக்கும் வழி. இதைவிட்டு விட்டு பெரியவர் காலில் விழு, சாமியார்களிடம் ஆசி வாங்கு எனச் சொல்லிக் கொடுப்பதால் தன்மான உணர்வு மங்கி, தடுமாறும் வாழ்க்கையே மிஞ்சி அடிமை மனோபாவமே அடுத்த தலைமுறைக்கு வாய்த்துவிடும் அவலம் தொடரும்.


பளீர்... பளீர்... எழுத வைத்த பசி

மலையாள எழுத்துலகின் தவிர்க்க முடியாதவர் வைக்கம் முகம்மது பஷீர். இந்த ஆண்டு பஷீரின் நூற் றாண்டு. ஒரு முறை பஷீரிடம் ஒரு பேராசிரியர், எது உங்களை எழுத வைத்தது? எனக் கேட்டார். இதற்கு சட்டென்று பஷீர் சொன்ன பதில் பசி தொடர்ந்து எழுத வைத்ததைப் பற்றி அவர் சொன்னது:
பசித்த பொழுதுகளில் தன்னால் வேறு எதையும் செய்ய இயலாது. அத்தோடு தனது பசியைப் பற்றி கவலையின்றி உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற ஆதங்கமும் பசியைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலின் மீதான ஆத்திரமும் எழுத வைத்தது என்ற படியே பசியைக் கடந்து செல்வது எளிதானதில்லை. எனது பெரும்பான்மைக் கதைகள் பசியோடு இருந்த நாள்களில் எழுதப்பட்டவை.


பளீர்.. பளீர்.. ஆரியக்கூத்தின் அடுத்த வேடம்

இந்துத்வா என்னென்னமோ செய்து பார்க்கிறது. மீண்டும் தனது வர்ணாசிரம ஆட்சியை இந்தியாவில் நிறுவிட அத கங்கணம் கட்டி மேடைக்குத் தக்கவாறு வேடம் கட்டுகிறது. சங்பரிவார், இந்துத்வா, பா.ஜ.க. என்றாலே அது பார்ப்பனியம்தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதால் இப்போ தெல்லாம் மாநிலக் கட்சிகள் போல குரலை உயர்த்துகிறது. குஜராத்தில் மோடி வென்றதற்கு அடிப்படை மாநில நலத்தில் கவனம் செலுத்தியதால்தானே தவிர இந்துத்வாவால் அல்ல. கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் வர விருப்பதால் பா.ஜ.க.வின் எடியூரப்பா ஒகேனக்கல் எங்களுடையது என்கிறார். பா.ஜ.க.வின் மூலக் கொள்கை ஒரே நாடு இந்துஸ்தானம் (அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்...) ஒரே கலாச்சாரம் இந்துத்வா, ஒரே மொழி சமஸ்கிருதம் என்பதுதான். ஆனால், இந்த பழைய பல்லவிக்கு இசையமைக்க இந்தியர்கள் தயாராக இல்லை என்பதை அறிந்துகொண்ட இந்துத்வா, இப்போது மாநிலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதுபோல நடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் ஒரு செய்தி.
வட தமிழகம், தென் தமிழகம் என தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று இரண்டு ஜாதி அமைப்புகள் கூறிவருகின்றன. அந்த ஜாதியத் தலைவர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. பார்ப்பனர் ஒருவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் சமுதாயத்தினர் பா.ஜ.க.வை ஆதரித்தால், உங்களின் தமிழகம் பிரிப்பு கோரிக்கையை பா.ஜ.க. ஆதரிக்கும் என்று சொன்னாராம்.
அகண்ட பாரதம் பேசிய பாரத மாதா புத்திரர்கள் இப்போது அய்ந்தாறு மாவட்டத்தை மாநிலமாக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். தமிழ் மண்ணில் கால் பதித்து காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆரியம் ஆடும் கூத்து இது என்பதைத் தமிழர்கள் அறியவேண்டும்.

- அன்பன்


ஆஸ்திரேலியாவில் திராவிடர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள வெள் ளைக் காரர்கள் எல்லாம் வந்தேறிகள்தான். ஆஸ்திரேலியாவின் பூர்வக் குடிகள் இன்னமும் தங்கள் தனித்துவத்தைப் பாதுகாக்கப் போராடி வருகிறார்கள். இவர்களுக்கென்று தனியாக இலக்கியமே இருக்கிறது. பழங்குடி எழுத்தாளரான ஆல்ப் டெய்லர் என்பவர் அவர்களுடைய புஷ் என்னும் நிலப்பரப்பில் எனக்கு விருந்து வைத்தார். இந்தப் பழங்குடிகள் திராவிட இனத்தோடு தொடர்புடையவர்கள்; முகச்சாயல்கூட தென்னிந்தியர்கள் மாதிரியே இருக்கிறது. அவர்களின் மொழியில் ஏராளமான திராவிடச் சொற்கள் இருப்பது ஆச்சர்யமான விஷயம். பழங்குடி எழுத்தாளர் ஒருவரின் பெயர் முற்றூரு.
- அண்மையில் ஆஸ்திரேலியா சென்று வந்த கவிஞர் தமிழச்சி ஆனந்த விகடனில் (26.3.2008)


சிதைக்கப்பட்ட இராக்

அய்ந்து ஆண்டுகளாக இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பால் இராக் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டது. 11 இலட்சம் இராக் குடிமக்கள் கொல்லப் பட்டிருக் கிறார்கள். 22 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துவிட்டனர். 40 சதவிகித மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். 28 சதவிகித குழந்தைகள் போதிய உணவு இல்லாமலும் 11 சதவி கிதம் குழந்தைகள் எடை குறை வாகவும் உள்ளனர்.