தலையங்கம்
கிரீமிலேயர் கூடாது ஏன்?
மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யும் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தமும், அதனையொட்டி கொண்டு வரப்பட்ட (Act 5 of 2007) தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று 10.4.2008 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு (பெஞ்ச்) தந்த தீர்ப்பு கூறிவிட்டது.
இத்தீர்ப்பில் சமூகநீதி இட ஒதுக்கீடு சம்பந்தமான அடிப்படை யான ஆட்சேபணைகளை உச்சநீதிமன்றம் ஏற்காதது சமூகநீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
எடுத்துக்காட்டாக, அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்திற்கு (Basic Structure of the Constitution) இட ஒதுக்கீடுத் திருத்தமும், சட்டமும் விரோத மானவை என்று இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் சார்பாக எடுத்து வைக்கப்பட்ட வாதமும், பிற்படுத்தப்பட்டவர்களை சரியான அளவு கோலான புள்ளி விவரங்களால் அடையாளம் காணவில்லை (Identification of Backward classes) என்கிற வாதமும் ஏற்கப்படவில்லை.
இது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பாகும். 5 நீதிபதிகளும் இவைகளைப் பொறுத்தவரை ஒத்தக் கருத் துடன் ஏற்றுக்கொண்டுள்ளது - வருங்காலத்தில் சமூகநீதி சம்பந்தமான பல்வேறு வழக்குகளுக்கும் கூட வழிகாட்டும் தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
1951 இல் கொண்டுவரப்பட்ட முதலாவது அரசியல் சட்டத் திருத்தப்படியே இந்த கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவருக்கு கிடைத்திருக்கவேண்டும்.
57 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட சமூகநீதி இத்தீர்ப்பின்மூலம் ஓரளவு கிட்டியுள்ளது. 1992 இல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றான 16(4) படி மத்திய அரசின் வேலை வாய்ப்புக்களில் 27 சதவிகித இட ஒதுக் கீட்டினை, அந்நாள் பிரதமர் திரு. வி.பி. சிங் போட்ட ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட (இந்திரா சகானி வழக்கு) வழக்கில் 9 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பையொட்டியே பெரிதும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், இதில் "கிரீமிலேயர்" (Creamy layer) என்ற வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பது, ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் பறித்துக் கொள்ளுவது போன்றதொரு அநீதியை ஏற்படுத்தியுள்ளது!
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருமானம் அதிகமுள்ள மேல் தட்டினைப் பிரித்து, அவர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதாமல் செய்யும் இந்த தீர்ப்பு, அடிப்படையில் அரசியல் சட்ட விரோதமான ஒன்றாகும் (Unconstitutional).
1. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தமே, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக வந்தது என்பது அன்றைய பிரத மர் நேரு அவர்களால் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட் டுள்ளது!
1951 இல் நிறைவேறிய அந்த முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தின்மூலம் 15(4) என்ற புதுப்பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில், “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்ட அமைச்சர், டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு முதலியோர் அங்கம் வகித்தனர்.
(பழைய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைந்த அவை அது. முதலாவது பொதுத் தேர்தல் 1952 இல் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்).
Founding Fathers of Constitution அரசியல் சட்டத்தை உருவாக்கிய கர்த்தாக்களையே கொண்டது அந்த அவை என்பது உச்சநீதி மன்றம் போன்றவைகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
அன்று சிலர், பொருளாதாரரீதியாக நுஉடிடிஅஉயடடல என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங் களைத் தந்தனர். அதை சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை.
அவையில் பிரதமர் நேரு பேசுகையில்,
“My difficulty is this that when we chose those particular words there for the advancement of any socially and educationally backward classes’ we chose them because they occur in Article 340 and we wanted to bring them bodily from there. Otherwise I would have had not the slightest objection to add “economically” But if I added ‘economically’ I would at the same time not make it a kind of cumulative thing but would say that a person who is lacking in any of these things should be helped.
‘Socially’ is a much wider word including many things.
....(Parliamentary Debates 1951- Third session Part II Volume XII columns 9814, 9820, 9822).
இதன் தமிழாக்கம் வருமாறு: எனக்கிருக்கிற சிரமம் எல்லாம் இதுதான்; சமூக ரீதியாக வும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் முன் னேற்றத்திற்காக என்கிற சொற்களைப் ஏன் போடவேண்டும் என்கிறோம் என்றால், அவை அரசமைப்புச் சட்டப்பிரிவு 340-இல் இடம் பெற்றிருக்கின்றன என்பதால் நாம் அவற்றை இதிலே இடம்பெறச் செய்யவேண்டும் என்கிறோம். இல்லா விட்டால், பொருளாதார ரீதியாக எனப் போடுவதில் எனக்கொன்றும் ஆட் சேபணை இல்லை. ஆனால், பொருளாதார ரீதியாக என்ப தனைச் சேர்த்தால், சொற்களை அடுக்கிக் கொண்டே போகி றோம் என்பதோடு, இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட் டோருக்கு உதவிட வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
சமூக ரீதியாக என்பது பரந்து பட்ட பல பொருள் தரக்கூடிய ஒரு சொல்லாகும். (நாடாளுமன்ற விவாதம் 1951- மூன்றாம் அமர்வு பாகம்-II, தொகுதி 12- பத்திகள் 9814, 9820, 9822).
2. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூக நீதிக்கான வாய்ப்பினை காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
நரசிம்மராவ் அரசு உயர்ஜாதியினரில் 10 சதவிகிதம் ஏழை களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டினை உச்சநீதி மன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது இந்த அடிப்படையில்தான்!
3. இதைவிட முக்கியமான ஒரு கருத்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்தியக் கல்வி நிலையங் களில் கதவே இதுவரை திறக்கப்படவில்லை; இப்போது தான் திறக்கப்படவிருக்கிறது. அதற்குள்ளே, ஏதோ 27 சதவிகிதத்தினை உயர் வருமான வசதி படைத் தோர் அபகரித்துவிட்டனர் என்ற கூச்சலுக்கு அடிப்படை உண்டா?
பந்திக்கு உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதைத் தரம் பிரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா? தேவையா? மோசடி அல்லவா?
அப்படி ஒரு கூப்பாடு எங்கிருந்து கிளம்பவேண்டும்? யாரால் கிளப்பப்படவேண்டும்? பிற்படுத்தப்பட்டவர்களால் அல்லவா? வழக்குப் போட்ட முன்னேறிய ஜாதிக்காரர் களுக்கு என்ன இதில் அக்கறை? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை போன்ற தல்லவா இது?
உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இதனை எழுப்புவதன் உள்நோக்கமே, இப்படி ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தால் அதனால் காலியாகும் இடங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதானே!
Carry Foreward என்ற முறை அமலில் இல்லை. அதாவது இந்த ஆண்டு தகுதி உள்ளவர்கள் வராததால், காலியாகும் இடங்களை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் முறை கிடையாது என்பதால், அது பொதுப் போட்டிக்குச் செல்லும். அதனைத் தாங்களே அபகரிக்கலாம் என்பதால்தானே!
4. வருமான அடிப்படை தற்காலத்தில் ஆண்டுக்கு 1 லட்சம், ஒன்றரை லட்சம் வரும். நடுத்தர வருமானக்காரர்களுக்கும் வருகிறதே!
வருமான வரித் துறையில் கூட ஒன்றரை லட்சம் வருமான வரிவிலக்கு அளவு உள்ளதே!
5. வருமானம் அளவுகோல் ஆண்டுக்கு ஆண்டு மாறுமே!
இதில் நிரந்தர வருவாய் (Fixed Income Groups) நிரந்தரமல்லாத வருமானப் பிரிவு (Non Fixed Income Groups) உண்டே!
எனவே, அந்த அளவுகோல் நியாயமா? இதனால்தான் பொருளாதார ‘economic’ என்ற அளவுகோல் தவிர்க்கப்பட்டது.
6. இதைவிட பெரிய கொடுமை பட்ட மேற்படிப்புகளுக்கு (P.G. Course) இட ஒதுக்கீடு கூடாது என்று சில நீதிபதிகள் அதில் குறிப் பிட்டிருப்பது மிகவும் தவறு - கல்வி என்பதில் இவர்கள் ஏன் இப்படிப் பிரிக்கவேண்டும்?
7. படிப்பு - கல்வி என்பது அனைவரும் பெறவேண்டிய ஒன்று. இவ்வளவு வருமானம் வருவதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், மிகப்பெரிய அளவுக்கு நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடும்.
எனவே, இந்த வருமான அடிப்படை, கல்லூரி மேல் பட்ட படிப்புக்கு வாய்ப்பின்மை இவைகளை நீக்கிட, அனைத்து சமூக மக்களும் ஒன்று சேரவேண்டும்.
8. அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது; அப்படியிருக்கையில், இப்போதே உயர் வருமானப் பிரிவினரான பிற்படுத்தப்பட்டவர்களை நீக்கிடவேண்டும் என்று இத்தீர்ப்பில் கூறுவது எந்த அடிப்படையில்?
புள்ளி விவரங்களோ, ஆதாரங்களோ, சட்ட விதிகளோ, இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளனவா என்றால், இல்லை என்பதே விடையாகக் கிடைக்கிறது.
கர்நாடக அரசுக்கும், வசந்தகுமார் என்பவருக்கும் நடைபெற்ற வழக்கில், கருத்துத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒரு வரான ஜஸ்டீஸ் திரு. சின்னப்பரெட்டி அவர்கள், பிற்படுத்தப்பட்ட வர்களை அடையாளம் காணும் வேலையும், தகுதியும் நீதிமன்றங்க ளுக்குக் கிடையாது; காரணம், நீதிபதிகள் மக்களிடமிருந்து தொலைதூரத்தில் உள்ளவர்கள் அதிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது அடுக்கடுக்கான ஒருவர் கீழ் மற்றொருவர் என்ற முறைகளுக்கு அப்பால் உள்ளவர்கள் என்று மிகப் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“We are afraid Courts are not necessarily by the most competent to identify backward classes or to lay down guidelines for their identification except in broad and very general way, we are equipped for; that we have no legal barometers to measure social backwardness. We are truly removed from the people, particularly those of backward classes, by layer upon layer of gradation and degradation.
இதன் தமிழாக்கம் வருமாறு:
நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடையாளம் காணும் தகுதியைப் பெற்றவை அல்ல என்றும், அதற்கான வழிகாட்டும் நெறிகளை வகுப்பதற்கும் உகந்தது அல்ல என்றும் நாங்கள் நம்புகிறோம்; பரந்த பொதுவான வகையில் அதற்கான வாய்ப்பையோ, சட்டப்பூர்வமான அளவீட்டுக் கருவிகளையோ சமூகநீதி யான பிற்படுத்தப்பட்ட தன்மையை அளந்திட நாங்கள் பெற்றிருக்கவில்லை. நாங்கள் உண்மையிலேயே மக்களிடமிருந்து விலகியிருக்கிறோம்; குறிப்பாகச் சொன்னால், படிநிலைத் தன்மை யிலும் கீழ்நிலைத் தன்மையிலும் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து விலகியிருக்கின்றோம்.
இந்த அளவுக்கு சமூகநீதி கிடைக்க அரும்பாடுபட்ட பிரதமர், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், இவர்களுக்கு இடையறாது அழுத்தம் கொடுத்த நமது தமிழக முதல்வர் கலைஞர், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூகநீதி அமைப்பு களுக்கு நன்றி கூறுவதோடு, நமது முதல்வர் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டதுபோல, நமது சமூகநீதிப் பயணம் முடியவில்லை, தொடர்கின்றது.
உடனடியாக இந்தக் கல்வி ஆண்டில் 27 சதவிகித (அது கிரீமிலேயராக இருந்தாலும்கூட) அடிப்படையில் நிரப்பத் தொடங்கவேண்டும்; கதவுகள் உடனே திறக்கப்பட வேண்டும்.
அடைந்தது கை மண்ணளவு
அடைய உள்ளது உலக அளவு!
எனவே, அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!
கி. வீரமணி
ஆசிரியர்
|