புரசிக்கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29 / மறைந்த நாள் ஏப்ரல் 21
உண(ர்)வகம்
- புரட்சிக்கவிஞரின் மைந்தர் மன்னர் மன்னன்
 |
சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார் தந்தையார். அவரின் நூல்கள் சிலவற்றின் புதிய பதிப்பு அச்சிடும் வேலை சென்னையில் நடந்தேறி வந்தது. உறுதுணையாக நானும் உடன் சென்றேன்.
காலை மணி 5.15க்குச் சென்னை செல்லும் பேருந்தில் ஏறினோம். விரைவு வண்டி என்று சொல்லிக் கொண்டாலும் முற்காலக் குதிரை வண்டி அங்கங்கே நின்று களைப்பு நீங்கி மறுபடியும் புறப்படுமே அதை நினைவூட்டுவது போன்று எங்கள் பேருந்து நடைபயின்றது.
மரக்காணம், சூணாம்பேடு கடந்து மதுராந்தகம் வழியாக மாமண்டூர் அடைந்த பேருந்து அங்கே நின்றிருந்த ஏராளமான பேருந்துகளினூடே புகுந்து நின்றது. பயணிகள் நெரிசல். எப்போதும் எல்லாப் பேருந்துகளும் ஒரே சமயத்தில் நிறுத்தி அங்கிருந்த உணவகத்தில் பயணிகள் காலைச் சிற்றுண்டி அருந்தும் ஏற்பாடாம். இது பயணிகளின் நலன் கருதி ஏற்பாடாம்!
தந்தையார் பேருந்தை விட்டுக் கீழிறங்-கினார். சிகப்புச் சால்வை இரு தோல்களிலும் விரியத் தம் மேற்சட்டையின் இருபுறப் பைகளில் கையை நுழைத்துக் கொண்டபடியே அரிமாப் பார்வையில் எதிர்த்திசையை நோக்-கினார். நானோ, எதுவும் புரியாமல், இப்பக்கம் எல்லாப் பயணிகளும் குவிந்த உணவகத்தைக் காட்டினேன். கையசைத்து மறுப்புத் தெரிவித்-தவர் எதிர்த் திசையில் ஓலைக் கொட்-டகையில் இருந்த மிலிடேரி ஓட்டல் பெயர்ப் பலகையைச் சுட்டிக் காட்டினார். நடந்தோம். திறந்த வெளியில், அடுப்பில் வெந்தணலின்மீது வாணலி.
இரண்டு கரண்டிகளை அதன் மீது குத்திக் குத்தி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தான் ஒருவன். உள்ளே நுழைந்தோம். கல்லா அருகில் ஒருவன் இலைச்சுருட்டு ஊதிக் கொண்டிருந்-தான். சில மேசைகளின் மீது உண்டு முடித்த எச்சிலைகள். குடித்து முடித்த தேநீர்க் குவலைகள். தாறுமாறாய் வடைகள் அடுக்கிய ஒரு நீளப்பெட்டி. ஈக்களின் படையெடுப்பு!
பார்த்துக் கொண்டே வந்தவர் மேசை எதிரில் அமர்ந்து எதிரில் வந்தவனை அழைத்துச் சாப்பிட என்ன இருக்கு? என்றார். அழுக்கு லுங்கியை மடித்துக் கட்டியவன் இட்லி, ரவா உப்புமா, மீன் குழம்பு... சால்னா, புரோட்டா... என்று பட்டியல் போட்டான்.
சூடா ரெண்டு பேருக்கு இட்லி. மீன் குழம்பு! என்றார். சிறிது நேரத்தில் அலுமினி-யத் தட்டில் வந்து சேர்ந்தன. எதுவும் சொல்லாமலே விழுங்கித் தொலைத்துவிட்ட மாதிரி எழுந்து கை அலம்பச் சென்றால் அழுக்கடைந்த தகரக் குவளை! கழுவிக் கொண்டார். நேரே கல்லா அருகில் சென்றார். நான் எதுவும் சாப்பிட மனம் வராமல் ஒப்புக்கு... நகர்ந்து விட்டேன்.
கல்லாவில் அமர்ந்திருந்தவனிடம்: ஏம்பா, இப்படி ஒரு மோசமான நிலையில் கடை நடத்தறியே, அதோ பாரு எப்படிக் கூட்டம் குவியுது. காரணம் என்ன? ஒழுங்கா ஒரு தொழிலை நடத்தறான். நீ எந்த ஊரு? என்றார். மதுரை என்று விடை வந்தது. உங்க ஊர்லெல்லாம் எப்பேர்ப்பட்ட உணவு முறை, ஒழுங்கு, பரிவு காட்டுறாங்க... நீ ஏன் இப்படி? என்றார்.
கல்லாக்காரன் எழுந்து நின்று, நமக்கு அப்டி பெரிய வியாபாரம் இல்லிங்க. ஏதோ சில்லறை-யாத்தான். எதிர்க்கடை மாதிரி பஸ் இங்க நிக்காதுங்க!
- இந்த விளக்கம், தந்தையாருக்கு ஏற்புடையதாயில்லை.
தோ பாரு நான் வந்திருக்கேனில்ல! நீ தூய்மையா, நல்ல பண்டங்களை விற்க ஆரம்பிக்கணும். கூட்டம் நிறைய வரும். அவனெல்லாம் காலையில எழுந்து குளிக்-காட்டாலும், திருநீறு பூசி சுத்தமாட்டம் காட்டுவான்.
நீ உன் கடையையே நாத்தம் புடிக்க வச்சிருக்கியே. நம்மாளுங்க ஓட்டல் நடத்தறதுல கவனம் காட்டினா அவனுங்களை வெறட்டிடலாம்!
- இதைக் கேட்ட கடைக்காரன் கை எடுத்துக் கும்பிட்டான். சாப்பிட்டதற்கான தொகை என்ன என்றார். வேணாங்க அய்யா! என்றான்.
நான் ஒரு தொகையை மீது வைத்துவிட்டு ஏறத்தாழப் பசியுடன் வெளிவந்தேன்.
பேருந்து புறப்பட்டு விட்டது!
வண்டி ஓட்டுநர்களும், நடத்துனர்களும் உணவகம் அளித்த இலவசப் பொட்டலங்க-ளோடு வண்டி ஏறினர்.
நாங்கள் இருவர் மட்டுமே எதிர் உணவகத்தி-லிருந்து வெளிவந்து வண்டியில் ஏறினோம் என்பதை ஓட்டுநர் - நடத்துநர் உள்ளிட்ட எல்லோருமே வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.
சென்னையை அடைந்து விடுதியில் அறை எடுத்து முடித்த பின் - அங்கு வந்த சில நண்பர்-களிடம் தந்தையார் சொன்ன கருத்து: பார்ப்பான் கடையில் சாப்பிடாதே! ன்னு ஒரு கருத்தைக் கெழவரு சொல்லிட்டாரு. அதை நாம முழுசா கடைபிடிக்க வேணும். அதுல சில சங்கடங்கள் இருக்கு. நம்ம ஆளுங்க நடத்தற உணவகங்கள் ஒழுங்கா இல்லை. உணவுப் பண்டங்கள் சுவையாக இருக்கணும். பரிமாறு-கிறவன் அழகாக தூய்மையா - பணிவா இருக்கணும்.
-ஓ! காலையில் நடந்த நிகழ்ச்சி, தந்தையாரின் கொள்கை வழிப் போராட்டம் என்று உணர்ந்தேன்.
யாரெதிர்த்த போதும் பெரியார் அறிவித்த கொள்கையை முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய அழுத்தம் பிறதொருகால் கவிதை வடிவிலும் வெளிப்-பட்டது. (கெழவர் என்று தந்தையார் குறிப்பிட்டது தந்தை பெரியாரைத்தான்).
சாப்பாட்டு வேளையில் தஞ்சாவூரின் நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி!
திரு. வீரமணியின் திருமணம் வாழ்த்தித்
திருச்சியின்று திரும்பும் எனக்குப் பெரும்பசி வயிற்றைப் பிசைவதாயிற்று! நானோ பார்ப்பனன் தொட்டதைத் திரும்பியும் பாரேன்!
தமிழன் உணவு தாங்கி வாரானோ
என்று நினைத்துக் கிடக்கையில், எதிரில்
தமிழன் ஒருவன் தலைப்பெட்டியுடன்
சுவைநீர், இட்டளி, தூயவடை, எனும்
அமிழ்தை என் காதில் போட்டான்! அழைத்தேன்!
அழைத்தவர் நிறையவே உண்டு பெரும்-பசியை ஆற்றிக் கொண்டார். மலிவு விலையில் சுவையுணவு. அதுவும் தம் உணர்வுக்கு முரண்படாமல்! இந்த மகிழ்ச்சியில், நமக்குப் பாடம் புகட்டுகிறார்:
உண்டி விற்கும் உண்மைத் தமிழரே
அண்டிய தமிழர் அமிழ்தமிழ் தமிழ் எனச்
செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக!
உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே
தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!
தமிழர் தமிழனை ஆதரிக்க!
தஞ்சைத் தமிழன் செய்தது போலே
இனிதேயாயினும் எட்டியே ஆயினும்
வாழ்வதாயினும் சாவதாயினும்
தமிழன் ஆக்கியதுண்க
தமிழகம் தன்னுரிமை பெறற்பொருட்டே!
கடும்பசியினும் தம் கருத்து மாறாத அழுத்தத்தை ஏற்படுத்திய உணவகமே நமக்கு உணர்வகமாக உருப்பெற்றதை நினைத்து நம் நெஞ்சம் பெருமிதம்! கொள்கிறது!
|