நூல் அறிமுகம்

கடலில் உலவாக் கலங்கள்
கவிஞர் நெல்லை வசந்தன்
மரகதம் பதிப்பகம், சி-313, ஓரியண்ட் அப்பார்மெண்ட்ஸ்,
நடேசன் ரோடு, தாகுர்லி (கிழக்கு), தானே - 421 201 (மராட்டியம்) பக். 203 ரூ.65
நூலிலிருந்து...
மொழி பயின்றால்...
அயன்மொழி பயின்றால்
அகிலவுலா வரலாம்!
அறிவொளி யறிந்தால்
அணைத்து முன்னேறலாம்!
பயன்மொழிப் பகன்றார்
வள்ளுவராம் நல்லவரே!
படித்துமுன் னேறிடுவார்
பைந்தமிழ் வல்லவரே!
நயமொழி நானிலத்தில்
நண்பரைச் சேர்க்கும்!
நலந்தரும் இன்பம்
நல்கிடும் யார்க்கும்!
பயமொழி பாரினில்
பகைமையை யூட்டும்!
பலப்பலத் துறைகளில்
துயரினைக் காட்டும்!

வைதிகத்தை எதிர்த்த வள்ளுவர்
புலவர் மு. தமிழ்க்கூத்தன்
கண்ணம்மா பதிப்பகம், 250, தென் நெடுஞ்சாலை, திருப்பரங்குன்றம், மதுரை - 5 பக். 104 ரூ. 50
நூலிலிருந்து...
கணவனல்லாதவனால் பிறந்தசேயும், அறநூல்களால் ஏற்கதக்கனவன்று. அவனைப் பெற்ற தகப்பனுக்கும் பலனில்லை. கற்பரசிகளுக்கு மறுமணம் எங்கும் விதிக்கப் பெறவில்லை.
மனு 5-162
மனைவியை யிழந்தவன் விதிப்படியே மறுமணம் செய்துகொண்டு,
அன்றாட ஐம்பெரும் கேள்விமுயன்று, தன் வாழ்வின்
இரண்டாம் பகுதியை இல்லறத்தாக்கிக் கழிக்க வேண்டியது
மனு 5-169
கற்பு என்பது மறுமணம் என்கின்றது மனு. கணவனை இழந்த மனைவி மறுமணம் முடிக்கக்கூடாது என்பதே அதன் நோக்கம். ஆனால், மனைவியை இழந்த கணவன் விதிப்படி இரண்டாம் மறுமணம் முடித்துக்கொள்ள வேண்டுமாம். ஐந்துயக்ஞம் நடத்த வேண்டுமாம். இரண்டாம் பகுதி வாழ்க்கையை தொடங்கலாமாம். இருப்பத்தியோராம் நூற்றாண்டிலும் போராடிக் கொண்டிருக்கின்ற, இடத்தில்தான் பெண்ணடிமை உள்ளது. இதனை நீட்டிக்கவும், உறுதியும் செய்தது வைதீகக் கொள்கையே. ஆனால், தமிழர்களில் பெரும்பான்மைச் சாதியரில் மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மணவிலக்குகளும் எளிதாக நடந்தன. உயர் சாதியர் பின்பற்றிய வைதீக முறை பின்னாளில் தமிழர் வாழ்விலும் ஊடு பாய்ந்தது எனக் கொள்ளலாம்.
ஒன்பதாவது இயலில் ஆண்கள் பெண்களுக்கான அறங்கள் எனச் சடங்குகளே கூறப்படுகின்றன. கணவனின் குடும்பத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, கற்பு பற்றி பேசப்படுகிறது. ஆனால் பெண்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. பெண்களை பொருளால் மகிழ்ச்சிப் படுத்தக் கூறுகின்றது. எதற்காக? அடிமைப்படுத்த பரவலாகப் பேசப்படுகின்ற இத்தகவல்களை வள்ளுவர், மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என முடித்து விடுகின்றார். சிரார்த்தக் கடன் உடமையைப் பெறுவதற் கான உத்திகளாக வகுத்து, கருமம் செய்பவர் காப்பாற்றும் குழந்தைகள் எனக் கூறி, பார்ப்பனர் தங்கள் பிழைப்பை நடத்தினர். மனித குலத்திற்கு போலி வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்து, தங்கள் உண்மை வாழ்க்கையில் நிறைவு கண்டனர். நான்கு ஆசிரம நிலையில் கிரகஸ்தன் ஆற்ற வேண்டிய கடமைகளை மனுதர்ம சாஸ்திரம் விரித்துப் பேசுகின்றது. பார்ப்பனர்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளையும், மற்றவர்கள் பார்ப்பனரிடம் நடந்து கொள்ளும் முறைகளையும் சடங்குகளாகவே கற்பிக்கின்றது. நெறிசார்ந்த, பண்பார்ந்த, அன்பார்ந்த வாழ்க்கை முறைப்பற்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கூறப்பட்டுள்ளது. வைதீகத்தை நிலைநாட்டும் மனு சாஸ்திரம் பலபடப் பேசுவது பார்ப்பனப் பாதுகாப்பே.
நற்செயல்களால்தான் ஒருவன் உயர் மனிதன் என்பது அளக்கப்படும் என்று வள்ளுவம் கூறுகின்றது. தீய செயல்கள் செய்தேனும் தன் உயர்வைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்கின்றது வைதீகம். தன் வாழ்வு நிலையிலிருந்து சமூக வாழ்வைப் பேணிக்காப்பவராக மாற்றுகின்றது வள்ளுவம். சமூக வாழ்வு நிலையிலிருந்து தங்கள் வாழ்வை பாதுகாத்துக் கொள்ளத் தூண்டுகின்றது வைதீகம். பிறருக்குத் தொண்டாற்றி, நல்வழி நடப்பதே அறம் என்கின்றது வள்ளுவம். தனக்குப் பிறர் ஏவல் செய்ய, குல நடைமுறையைக் கூறுகின்றது வைதீகம். நாடு, மொழி, இனம், எல்லாவற்றிலிருந்தும் விலகி, பொதுவாகக் கருத்தை வைக்கின்றது வள்ளுவம். பார்ப்பனர், வடமொழி, ஆர்யாவர்த்தம் என எல்லையைக் குறுக்கி தன்னலக் கருத்துகளை வைக்கின்றது வைதீகம். மனித நேய விழுமியங்களை, ஒப்புரவை, கண் ணோட்டத்தை உலகுக்கு கொடையாக வழங்குகின்றது வள்ளுவம். மனிதர்களைப் பிரித்து, வர்ணத்தை, சாதியை, தண்டத்தை உலக உறவுக்குத் தடையாக வழங்குகின்றது வைதீகம்.

உலக விஞ்ஞானிகள்
சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு
அங்குசம் வெளியீடு, 15, எழுத்துக்காரன் தெரு,
காலடிப்பேட்டை, திருவொற்றியூர், சென்னை - 19 பக். 72, ரூ. 30
திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு எழுதிய 12 அறிவியலாளர்கள் பற்றிய நூல் இது. பெரியாரைப் பின் பற்றிய அவரின் தொண்டர்கள் அறிவியக்கத்திற்குத் தந்த அருங்கொடைகளில் இந்நூலும் ஒன்று.
நூலிலிருந்து...
நியூட்டன் கண்டது மற்றொன்று கோளங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் ஒரே விதமாகச் சற்று நிலை பெற்றிருப்பதைக் கண்டார்.
சூரியன் நிலைபெற்றிருக்கின்றது. பூமிதான் அதைச் சுற்றி வருகிறது என்பதால், பூமி தன்னைத்தானே ஒரு மணிக்கு ஆயிரம் மைல் சுற்றுகிறது என்று கணக்கிட்டு, பூமி சுற்றிக் கொண்டயிருந்தால் நாம் கீழே விழாமலும் நம் கண்களுக்குத் தெரியாமலும் இருப்பதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கினார்.
பூமியின் இழுக்கும் சக்தியைக் கடந்து போனால் சந்திர மண்டலத்தின் இழுக்கும் சக்தி இழுத்து விடுகிறது. பூமியின் இழுக்கும் சக்தி குறைந்தோ, சந்திர மண்டலத்தின் இழுக்கும் சக்தி அதிகமாகவோ இருக்குமானால், ஏதாவது மாற்றங்கள் ஏற்படக் கூடும். அப்படியில்லாமல், இரண்டு சக்திகளுக்கும் இழுக்கும் ஆற்றல் சம பலத்தில் இருக்கிறது என்று கண்டார்.
ஆனால், நாம் ஒரு சைக்கிளை ஓட்டுகிறபோது மெதுவாக ஓட்டினால், சாய்ந்துவிடும் போலிருக்கிறது. வேகமாக ஓட்டினால் செங்குத்தாகவும் சாயாமலும் செல்கிறது. இதன் காரணமே பூமியின் இழுக்கும் சக்திதான்.
பூமியின் இழுக்கும் சக்தியையும், சந்திர மண்டலத்தின் இழுக்கும் சக்தியையும் இரண்டு பங்காக்கினால் இழுக்கும் சக்தியையும் இரண்டாகும். அப்படியில்லாமல் இழுக்கும் சக்தியை தூரமாக்கினால், இழுக்கும் சக்தி கால் பாகம் குறைந்துவிடும்.
பூமி உருண்டை என்றாலுங்கூட வட துருவத்திலும் தென் துருவத்திலும் பூமி சற்று தட்டையாயிருப்பதால், பூமத்திய ரேகைக்கும் பூமியின் மத்தியிலுள்ள, தூரம் பதின்மூன்று கல் குறைவு. ஆகவே அங்கே இழுக்கும் சக்தி குறைவு. இவ்விதம் நியூட்டன் கண்டுபிடித்துக் கூறிய விஞ்ஞான விதி, பின்னால் வந்த ஆராய்ச்சிக்கும் பெருமளவு உதவி புரிந்திருக்கின்றது. உலக முழுவதும், ஒன்றை ஒன்று தாக்காமல் அதனதன் இடத்திலிருந்த படியே இழுக்கும் சக்தியைப் பெற்றிருப்பதால் உலகம் ஒழுங்காக நடைபெறுகிறது என்பதை ஆங்கில நாட்டுப் பேரறிஞர் ஹெர்பர்ட் என்பவர் இங்கே ஒரு பூவை அசைத்தாலும் அங்கே ஒரு நட்சத்திரத்தைப் பாதிக்கும் என்று அழகாகக் கூறுகின்றார். |