தமிழர்கள் மீதான பண்பாட்டு படையெடுப்பு - 10
சோழர் காலத்தில் பரவிய ஆரியம்
- கி.வீரமணி
 |
மறைந்த வொழுக்கத்தோரையும் நாளும், துறந்த வொழுக்கம் கிழவோற்கில்லை எனவருங் களவியற் சூத்திரத்திலுள்ள ஓரை யென்னுஞ் சொல் கிரேக்க மொழியைச் சார்ந்ததென்றும் இது வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்ததென்றும் இதனை வழங்கிய தொல்காப்பியம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென ஆசிரியர் பெரிடேல் கீத் கூறியுள்ளாரென்றும் இங்ஙனமாக எவ்வ-கையால் நோக்கினும் ஆசிரியர் தொல்காப்பியர் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த-வரெனக் கொள்ளுதலே பொருந்துமென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் முடித்துக் கூறியுள்ளார்கள்.
ஓரை யென்னும் சொல், விளையாட்டு என்னும் பொருளில் வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாகும். கோதையாயமொடு ஓரைதழீஇ (அகம் - 49) எனவும், ஓரையாயம் (அகம் - 219), (குறுந் - 48) எனவும், ஓரை மகளிர் (குறுந்-401) எனவும், ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறம் - 176) எனவும், விளையாடாயத்து ஓரை யாடாது (நற்றிணை-2) எனவும் ஓரையென்னுஞ் சொல் விளையாட்டு என்னும் பொருளிற் பயின்று வழங்கியுளது. மேலெடுத்துக்-காட்டிய களவியற் சூத்திரத்தில் வந்துள்ள ஓரையென்னுஞ் சொல்லும் விளையாட்டு என்னும் பொருளி-லேயே ஆசிரியரால் ஆளப்படு-கின்றது. விளையாட் டென்னும் பொருளினதாகிய ஓரை என்னும் இத்தமிழ்ச் சொல்லுக்குப் பிற்காலத்தவராகிய உரையா-சிரியர்கள் முகூர்த்த மெனப் பிறழ உரை கூறியுள்ளார்கள். ஓரை யென்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருள் இதுவெனவுணராத ஆராய்ச்சியாளர்கள் சிலர், ஹோரா என்ற யவன மொழியே வடமொழி வழியாகத் தமிழிற்புகுந்து ஓரையெனத் திரிந்ததெனப் பிழைபடக் கருதியதோடன்றி, அக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு ஓரை என்னும் சொல்லை வழங்கிய தொல்காப்பியம் பிற்காலத்து நூலே என மற்றொரு பிழைபட்ட முடிபினையும் வெளியிடுவாராயினர். அன்-னோரது பிழைபட்ட முடிபினையே அறிஞர் பிள்ளையவர்களும் தமது கொள்-கைக்குரிய சான்றென எடுத்துக் கொண்டமை ஏற்புடைய-தன்றாம்.
பூப்பின் புறப்பாடீராறு நாளும் நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் என்ற தொல்-காப்பியச் சூத்திரத்தின் கருத்து மனுதர்ம சாத்திரத்திற் காணப்படுகிறதென்றும், இந்த ஸ்மிருதியின் காலத்திற்குப் பின்னெல்லை கி.பி. 200 என ஆசிரியர் P.V.Kane கூறுவரென்றும், எனவே தொல்-காப்பியனார் காலம் கி.பி. 200க்குப் பிற்பட்ட தென்றும் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்!
வாழ்க்கைக்கு இன்றியமையாத செயல் முறை விதிகள் சில, எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திற்கும் பொதுவாக ஒத்து வழங்குதல் இயல்பு. இப் பொதுவியல்பினை உணராது ஒரு நாட்டவர் கருத்தையொட்டியே ஏனை நாட்ட-வரும் செயல் மேற்கொண்டனரெனத் துணிதல் பொருந்தாது. ஆரியர்கள் தென்னாட்டிற் குடிபுகுந்து நிலைப்பதன் முன் இயற்றப்பட்டது தொல்காப்பியம். அவர்கள் தென்னாட்ட-வருடன் மிகவும் நெருங்கிப் பழக நேர்ந்த பிற்காலத்தில் தம் நாகரிகத்தினைப் பரப்புங் கருத்துடன் இயற்றியவை மிருதி நூல்கள். பழந் தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திற்கும் பிற்காலத்தனவாகிய இம் மிருதி நூல்களுக்கும் எள்ளளவுந் தொடர்பில்லையென்க.
தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணங்கள் இவையென்பது தம் காலத்தில் வாழ்ந்த எல்லோர்க்கும் நன்கு தெரியுமாதலால் அவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலில் விரித்துக் கூறவில்லை. தொன்று தொட்டுத் தமிழ் மக்கள் கொண்டொழுகிய திருமணச் சட்டங்கள் சிலவற்றை அகநானூற்றில் 66, 86ஆம் பாடல்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். வேள்வியாசான் காட்டிய முறையே அங்கி சான்றாக நிகழும் சடங்கு முறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்-கியத்திலும் கூறப்படாமையால் ஆரியர் மேற்கொண்ட அவ்விவாக முறைக்கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்கு முறைக்கும் பெரிதும் வேறுபாடுண்டெனத் தெளி-யலாம். கலித் தொகையில் ஒத்து-டையந்தணன் எரிவலங்கொள்வான் போல் எனவரும் தொடரில் புரிநூலந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தொடர்புப் பொருளை ஊன்றி நோக்குங்கால் இங்ஙனம் எரிவலம் வருதல் ஒத்துடையந்தணராலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படாத சடங்கென்பது நன்கு புலனாம்.
தொல்காப்பியனார்க்கு முன்னமே நாடக வழக்கு தமிழ் நாட்டில் உருப்பெற்று வளர்ந்து வந்ததென்பது நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் என வருந் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு புலனாம். இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளையும் மொழி வளர்ச்சியின் வகைகளாகக் கொண்டு வளர்த்த பெருமை பண்டைத் தமிழ் மக்களுக்கு உரியதாகும். கூத்த நூல் பற்றியும் செய்யுளியல் பற்றியும் எண்வகை மெய்ப்பாடுகளும் விளக்குதற்குரியனவாம். ஆகவே எண்வகை மெய்ப்பாடுகளைப் பற்றி இயற்றமிழ் நூல்களும் நாடகத் தமிழ் நூல்களும் ஒப்ப விரித்துரைப்பனவாயின. இத்-துறையில் பரதம் என்ற பெயருடன் இயற்றப்-பட்ட நாடகத் தமிழ் நூலொன்று பண்டை நாளில்- தமிழகத்து வழங்கியுளது. இடைக்-காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் முன்-னோர் தேடிய அறிவுச் செல்வங்களைப் பேணாது சோம்பியிருந்தமையால் பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் பலவும் வழக்கிறந்து மறைந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களிறந்தன என அடியார்க்கு-நல்லூர் கூறுதலால் இச்செய்தி யுணரப்படும். சங்க காலத்திலேயே பரதம் என்னும் பெயரின-தாகிய நாடகத்தமிழ் நூலும் சுவைகளையும் மெய்ப்பாட்டினையும் தனித்தனியே விரித்-துரைக்கும் ஏனைய தொன்னூல்களும் வழங்கிய வரலாற்றினை அடியார்க்குநல்லூர் குறிப்பிடுதலால் எண் வகை மெய்ப்பாடுகளை வடமொழி நாட்டிய சாத்திரத்திலிருந்து தொல்காப்பியர் உணர்ந்து சொல்லினா-ரென்பார் கூற்று ஒரு சிறிதும் பொருந்தமை புலனாம். அன்றியும் ஆசிரியர் தொல்காப்-பியனார் எண்வகை மெய்ப்பாடுகளைக் குறித்து வழங்கும் பெயர்கள் யாவும் தனித்தமிழ்ச் சொற்களாகவே அமைந்துள்ளன. ஆசிரியர் எண்வகை மெய்பாடுகளையும் செய்யுளின் உறுப்பாகவே கொண்டு விளக்குவதல்லது நாடகத்தின் உறுப்பாக வைத்து உரைத்திலர்.
 |
இலக்கிய தரவுகள் ஒருபுறம் இவ்வாறு இருக்கின்றன என்றாலும் தமிழக வரலாற்றில் காணப்படும் சில முக்கிய செய்திகளை வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே. பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 2000) நூலில் மிகவும் அருமையாகத் தருகிறார்.
பார்ப்பனப் பண்பாட்டுப் படை-யெடுப்-பினை அது தெளிவாக விளக்குகிறது:
பல்லவர் ஆட்சியில் தோன்றி வந்த குலப் பிரிவுகள் சோழர் காலத்தில் நூற்றுக் கணக்கில் மலிந்துவிட்டன. மக்களிடையே புதுப் புதுப் பிரிவுகள் தோன்றலாயின. குலங்களுள் வலங்கைச் சாதியினர் என்றும் இடங்கைச் சாதியினர் என்றும் ஆழ்ந்த பிளவு ஒன்று புதிதாகத் தோன்றியது.
தமிழகத்தில் சமய வளர்ச்சியும், வேதப் பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழிபாடும் பலதரப்பட்ட துறைகளில் விரிவடையவே அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக் கொள்ளும் ஆற்றல்-கள் தமிழ்ப் பிராமணரிடம் பெருகவில்லை போலும். ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்-களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்-களிலும் அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர்.
பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்-பட்டன. அக் கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப்பல பெயரில் வழங்கின. இக் குடியிருப்பு-கள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்-துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணை-கள் அவற்றினுள் செயல்படா. அக்கிராமங்-களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டன.
பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள்.
விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ் மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குல வேறுபாடு-களைப் பெருக்கித் தமிழர் அனை-வரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்விக்ம் தமிழன் ஒருவன், தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், பிராமணர்களின் பின்னின்று கோயில் பிரசாதங்களைப் பெறவும் ஒப்புக் கொண்டு விட்டான். கோயில் கருவறையில் வடமொழியின் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ் ஒலி மறையவும் வழக்காறுகள் வகுக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குட் செல்லும் உரிமை பெற்றிருந்தும் சோழர் பாண்டியர் காலத்தில் அவ்வுரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள்.
கோயிலின் பாதுகாப்புப் பணியும், அறக்-கட்டளைகளும் பிராமணரிடையே ஒப்புவிக்கப்-பட்டன. சிவன்கோயில் நிருவாகமானது மூலபருடையார் என்ற சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அச்சபையின் உறுப்-பினர் அனைவரும் பிராமணர்களாகவே இருந்தனர். மூலபருடைய சபையினர் கோயில் நிருவாகத்துடன் வேறு சில நடவடிக்கை-களிலும் ஈடுபடுவது வழக்கம்.
தானமாகப் பெற்ற நிலங்களும் ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப்பெற்ற பிராமணர்கள் அவையாவும் எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள்; மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர். வேந்தர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்-களுக்கும் வமிசங்களையும், கோத்திரங்-களையும், சூத்திரர்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதே தம் சீரிய கடமை-யாம் எனக் கூறும் மெய்க்கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரியப் பழக்கவழக்-கத்தைப் பாராட்டிக் கூறும் சாஸ்திரங்களும் புராணங்களும் எழுந்தன. அவற்றைப் பிரா-மணர் பயில்வதற்கென அரசர்கள் பல கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தனர்.
- வளரும் |