27% இட ஒதுக்கீட்டிற்கு மேலும்
காலதாமத சூழ்ச்சி
மத்திய கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசு கல்வி நிறுவனங்களைப் போல, பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு என்பதை வற்புறுத்தி, தந்தை பெரியார் அவர்கள் 1950 இல் போராடியதன் விளைவாகவே, முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் 1951 இல், பிரதமர் பண்டித நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் ஆகியவர்களால் நிறைவேற்றப்பட்டது. 15(4) பிரிவு இணைக்கப்பட்டது.
மத்திய அரசில் உள்ள மேல்ஜாதி பார்ப்பனக் கூட்டு ஏகபோக ஆதிக்கம், அதனை அங்கே செயல்படுத்த விடாமலேயே இருந்தது; நாமும் சமூகநீதிப் போராளிகளும் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி மண்டல் ஆணையத்தின் பரிந்துரையும் இணைந்த நிலையில், 2005 இல் மீண்டும் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து 15(4)க்கு அடுத்தபடியாக, அதன் விரிவாக்கமாக (இப்படி ஒரு கூடுதல் திருத்தம் இல்லாமலேயே செயல்படுத்திட முடியும் என்பது பல சட்ட வல்லுநர்கள் கருத்தாக இருந்த போதிலும்) நிறைவேற்றிடும் நிலையில்,
மக்களது வரிப் பணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவழித்து கல்வி அக்கிரகாரங்களாகவே நடத்தப்பட்டு வந்த அய்.அய்.டி. (மி.மி.ஜி) என்ற உயர் தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களையொத்த கல்வி நிறுவனங்களில் ஏதோ உடனடி யாக 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோருக்குத் தர, அடிப்படைக் கட்டுமான வசதியை ஏற்படுத்த மேலும் காலதாமதம் ஆகும் என்று ஒரு சாக்குப் போக்குக் கூறி கைக்கெட்டியதை வாய்க் கெட்டாமல் தடுக்கும் வண்ணம் 27 சதவிகித இடங்களை மூன்று தவணைகளாக 9, 9, 9 என்று மூன்று ஆண்டுகள் மெல்ல மெல்லத்தான் தர முடியும் என்று கூறி, ஏமாற்றியது மத்திய அரசின் கல்வித் துறை.
07.08.2010 அன்று வந்துள்ள மற்றொரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி என்ன தெரியுமா?
இந்த அய்.அய்.டி.களில் இது மேலும் பல ஆண்டுகள் காலதாமதம் ஆகுமாம்! மேலும் 3 ஆண்டுகள் தேவையாம்! இதற்கென தனி மசோதா ஒன்று மாநிலங்களவையில் 06.08.2010 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம்!
2014 வரை கூடுதலாக 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைக்காதாம்! அப்படி என்ன பெரும் கட்டுமான வசதிகளை மாயா பஜார்களாக உருவாக்கப் போகிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.
மக்கள் தொகையில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்ட மக்கள்; அவர்களை ஏமாளிகள், எதையும் ஏற்கும் இளிச்ச வாயர்கள் என்று மத்திய அரசின் மனித வள அமைச்சகம் கருதுகிறதுபோலும்; அதனால்தான் இந்த காதில் பூ சுற்றும் ஏற்பாடு. இது அரசியல் சட்டத் திருத்தம் கூறியதையே பறிக்கும் மாபெரும் மோசடி.
1951லிருந்து கிடைக்கவில்லையே என்று தொடர்ந்து குரல் எழுப்பிய பிறகு, 2005 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்து, அதையும் 2010_11 வரை கூட சரிவர செயல்படுத்தாமல் கிடப்பில் போடும், மெத்தன ஏற்பாடு, இந்தியாவிலுள்ள அத்துணை அய்.அய்.டி. அக்கிரகாரப் பார்ப்பனர் மேல்ஜாதிக்காரர்களே தலைமை நிருவாகிகள் என்பதால், ஊறுகாய் போடப்பட்டது.
இப்போது 2014 ஆகுமாம்! இது 9, 9, 9 என்று சொட்டு, சொட்டு என்று சொட்டுமாம்! என்னே அக்கிரமம்! என்னே சமூக அநீதி!!
அடிக்கட்டுமானம் எல்லாம் முழுமையாக செய்த பிறகுதான் அரசுகளால் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றனவா? உயிர் காக்கும் அதனால் அப்படிப் படிப்படியாக செய்கையில் இருப்பதில் கூடுதல் வசதிகளுக்கு நிதி பற்றாக்குறை இல்லை என்னும்போது ஏன் இந்த மோசடி வேலை?
இதனை நாட்டில் உள்ள அத்துணை சமூகநீதிப் போராளிகளும், தலைவர்களும், கட்சிகளும் உடனடியாகக் கண்டித்து பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எழுதவேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் தக்க கவனம் செலுத்தி, இந்த மசோதாவை நிறைவேற்றாமல் உடனடியாக ஏற்கெனவே 5 ஆண்டுகள் காலதாமதம் ஆகிவிட்ட நிலை (2005_2010) யில் உடனே வற்புறுத்திட வேண்டும்.
ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்! வாரீர்! வாரீர்!!
கி.வீரமணி, ஆசிரியர்