Home | Contact us
 

ஆகஸ்ட்16-31_2010


யார் இந்த பெரியார்?
கதரும் காந்தியும்

மனநல மருத்துவர் ஷாலினி

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் சுவடுகளை நேரில் பார்த்த அக்கணத்தில் இருந்து ராமசாமிக்கு மனசே ஆறவில்லை. சும்மாவே அநீதிகளைக் கண்டால் கொளுந்துவிட்டு எரியும் தன்மை கொண்ட இவர் மனசு, இப்படி ஆயிரக்கணக்கில் பொது மக்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட காட்சியைக் கண்டால் கேட்கவேண்டுமா?

அப்போது மோகன் தாஸ் காந்தி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட, அவர் தனது நூதனமான சத்தியாகிரக முறையில் பிரிட்டிஷை எதிர்த்துப் போராடுவதாக அறிவித்திருந்தார். ரவுலத் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, காரணமே இன்றி, யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்து, விசாரணையே இன்றி, தண்டனை கொடுக்கும் அதிகாரம் பிரிட்டிஷ் சர்க்காருக்கு வந்துவிட, ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ, செய்ய முடியாத நிலை. எதுவுமே செய்யாமல் எப்படிப் போராடுவதாம்? எதுவுமே செய்யாமல் இருப்பதே ஒரு விதப் போராட்டம் தானே என்று ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகப்படுத்தினார் காந்தி.

இதைத் தவிர போராட வேறு வழி இல்லா நிலை. இந்த விதமான போராட்டத்தின் நூதனம், பிரிட்டிஷ் சூழ்ச்சியை ஒரு சின்ன யுக்தியால் வீழ்த்தும் முறை இது என்கிற நம்பிக்கை. கூடவே இளைஞர்களின் இருப்புக்கொள்ளா ஆத்திரம் கேட்கவேண்டுமா? இவை எல்லாமுமாய் சேர்ந்து மக்களை ஆட்படுத்த, காந்தியக் கொள்கைகள் காட்டுத்தீ போல இந்தியா எங்கும் பரவின. காந்தியைப்பற்றியும் அவர் கொள்கைகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப் போதுமான அவகாசம் இல்லை. அவசர காலத்தில் பிரிட்டிஷை எதிர்த்துப் பேசக் கூடிய ஒரு தலைவன் கிடைத்தால் போதும் என்கிற இக்கட்டு. அதனால், யாருமே காந்தியையோ அவர் கொள்கைகளையோ விமர்சிக்காமல் உடனே அவரைப் பின்பற்ற ஆயத்தமானார்கள்.

தன் நண்பர் சி. ராஜகோபாலச்சாரி, காந்திக்குப் பெரிய விசுவாசி ஆகிப்போனதால், அந்த அலையோடு அடித்துச் செல்லப்பட்டார் ராமுவும். காந்தி, தீண்டாமையை ஒழிக்கலாம், மதுக்கடைகளை மறியல் செய்யலாம், பிரிட்டிஷை அகிம்சை முறையில் எதிர்க்கலாம், அந்நிய ஆடைகளைத் துறந்து, கதர் ஆடைகளைப் பயன்படுத்தலாம், புதியதோர் உலகைப் படைக்கலாம் என்று எல்லாம் கோஷம் எழுப்ப, இவை எல்லாமே ராமசாமிக்கு ரொம்பவே பிடித்துப்போயின. மாற்றுச் சிந்தனையே இல்லாமல், உடனே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காந்தியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் பரப்பத் தயாரானார்.

எதையுமே அரை குறையாகச் செய்யும் பழக்கம்தான் ராமுவுக்குக் கிடையாதே. எடுத்த காரியம் எதுவானாலும் அதற்குத் தன் முழு மனதையும், உடலையும் செலவிடுவது தான் அவர் குணம். அதனால், காங்கிரஸில் சேர்ந்து சமூகப் பணியில் ஈடுபடுவது என்று முடிவான அடுத்த நாளே, தன்னை அதற்குண்டான தகுதிகள் கொண்டவராக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். அதுவரை, பட்டும் பொன்னும், ஆடம்பர செல்வந்தரின் வாழ்க்கை முறையுமாக இருந்தவர், அடுத்த நாளே எல்லா அணிகலன்களையும் கழற்றிவிட்டு, சாதாரண கதர் ஆடைகளுக்கு மாறினார். தான் மட்டும் மாறியதில்லாமல், தன் மனைவி, சகோதரிகள், அவ்வளவு ஏன், தன்னோடு எப்போதுமே பிணங்கிக்கொண்டிருந்த தன் அம்மாவைக்கூட கதர் உடுத்த வைத்தார்.

அதுவரை, சிகரெட், வெற்றிலை, பெண் சகவாசம் என்றிருந்த மனிதர், எல்லாவற்றையுமே ஒரே நாளில் ஏரக்கட்டினார். சமூக வாழ்வில் ஈடுபடுபவர் சர்வ ஒழுக்கத்துடன் இருந்தே ஆகவேண்டும் என்பது அவர் தனக்குத்தானே வைத்துக்கொண்ட கொள்கை. இவ்வளவு அகிம்சையும், அன்பும் பேசிய காந்தி, தன் தனிப்பட்ட வாழ்வில் பெரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார் என்று சொல்வதற்கில்லை. தன்னுடைய சாபர்மதி ஆசிரமத்தில் வயதிற்கு வந்த இளம் பெண்களை நிர்வாணமாக்கி, இவரும் அம்மனக்கோலமாய் அவர்களைக் கட்டிப்பிடித்து படுத்துத் தூங்கிய கதைகள் வெளியில் கசியாமல் இல்லை. ஆனால், இந்த உட்கதைகள் எதுவுமே தெரியாத பலர் காந்தியைப் பெரிய மகான் என்றே நம்பினார்கள். இப்படி உள்ளே ஒரு விதம்; அதை நியாயப்படுத்த, நான் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்துதான் அப்பெண்களை இப்படி ஆடையில்லாமல் கட்டிப்பிடிக்கிறேன் என்கிற சல்ஜாப்புக் கதைகள், வெளியே வெட்கமே இல்லாமல் தன்னை ஒரு மகாத்மா என்று காட்டிக்கொள்ளும், ஹிப்போகிரிஸி..இப்படி எந்தச் சூதுமே ராமுவிடம் இல்லை.

அவர் மைனராய்ச் சுற்றிய காலத்தில் அடித்த கொட்டம் ஊர் அறிந்ததே. அதே மனிதன் சமூக சேவகரான பிறகோ, அப்பழுக்கற்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். யாரும் நிர்ப்பந்திக்காமல், சுயமாகவே இப்படி பல கட்டுப்பாடுகளை அவர் விதித்துக்கொள்ள, இதனாலேயே ஊர் மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் பெருக ஆரம்பித்தது.

அவருக்கு இப்படி மக்கட் செல்வாக்கு அதிகரிக்க இன்னும் ஒரு காரணம்: அதுவரை மிகப் பெரிய பணக்காரராக இருந்த ராமு, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, காங்கிரஸ்காரர் ஆன பிறகோ, பெரும் பண நஷ்டம் அடைந்தார். அவர் தன் தொழிலை விட்டுவிட்டு, இப்படி கட்சிப் பணி செய்தது அவர் வருமானத்தைக் குறைத்தது ஒரு பக்கம். தனக்கு வரவேண்டிய 50,000 ரூபாய் பணத்தை, கோர்ட்டுக்குப் போய் சுலபமாக வசூலித்திருக்கலாம். ஆனால், ஒத்துழையாமை காலத்தில் பிரிட்டிஷ் கோர்ட்டுகளைப் புறக்கணிப்பது என்று தீர்மானமாகி இருந்ததால், அப்பணத்தை வசூலிக்க முயற்சியே செய்யாமல் விட்டுவிட்டார் ராமு. அந்தக் காலத்தில் அந்தத் தொகை ரொம்பவே பெரியது என்பதால், அதை அவர் விட்டுக்கொடுத்ததே மிகப் பெரிய செய்தி ஆனது.

அதுமட்டுமல்ல, காந்தி கள்ளுக்கடை மறியல், மதுவை எதிர்த்துப் பிரச்சாரம் என்று ஆரம்பித்த காலத்தில், பனை மரம், ஈச்ச மரம், தென்னை மரம், என்று கள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட எல்லா மரங்களையும் வெட்டிவிடும்படிக் குரல் கொடுக்க, இந்தியா முழுவதும் பல மரங்கள் இதற்காக வெட்டப்பட்டன. சாலையோரம், யாருக்கும் சொந்தமில்லாமல் அநாமத்தாகக் கிடக்கும் மரங்களை வெட்டினாலாவது பரவாயில்லையே, ராமசாமியார் தன் சொந்தப் பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டார்!

இந்த அளவிற்கு கொள்கை வீரரா என்று எல்லோரும் ராமுவைப் பாராட்டி வியக்க, ராமசாமியாரும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தார். கை ராட்டினத்தையும், துணிமூட்டைகளையும் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகப் போய், விதேச துணிகளைப் பயன்படுத்தாமல் கதர் ஆடையை அணிய பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ராமு கொச்சைத் தமிழில் சிரிக்கச் சிரிக்க, தமாஷாகப் பேசி, பொது மக்களின் மனதைக் கவர்ந்து, கருத்துகளைச் சுலபமாக மாற்றி, கதராடை அணியும் எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்திவிட, தமிழகத்தில் கதர் விற்பனை அமோகமாக இருந்தது. கதர் ஆடைகளைத் தயாரிக்கும் கதர் வஸ்திராலயங்களையும் ராமசாமியாரே முன்னின்று ஏற்படுத்தியும் வைத்தார்.

இப்படி ராமு மட்டுமின்றி, அவர் மனைவி நாகம்மையும், சகோதரி கண்ணம்மாவும்கூட இந்தச் சமூகப் பணிகளில் ஈடுபட்டார்கள். 1921 ஆம் ஆண்டு, ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலை ஈ. வெ. ரா. தலைமை தாங்கித் தொடக்கி வைத்தார். இதற்கு 144 தடுப்புக் காவல் சட்டம் விதிக்கப்பட, இத்தடையை மீறி ராமு மறியலில் ஈடுபட, தொண்டர்கள் சகிதம் ராமு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி ராமு சிறைக்குப் போன பிறகு, சும்மா இருக்கவில்லை நாகம்மையார். கண்ணம்மாவும் இவரும், மறியலைத் தலைமை தாங்கி நடத்த, பல பெண்களும் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். இப்படி, பெண்களும் களத்தில் இறங்கிவிட்டதால் திக்குமுக்காடிப் போனார்கள் போலீசார். காரணம், இத்தனை பேரை இனி கைது செய்ய வேண்டுமானால், முதலில் அவ்வளவு இடம் சிறைச்சாலையில் இருக்க வேண்டுமே! இதனால் என்ன செய்வதென்று திணறிய பிரிட்டிஷ் சர்க்கார், அவசரமாக காந்திக்கு அழைப்பு விடுத்தது. மறியல் போராட்டத்தை நிறுத்துங்கள் என்று ஆணை பிறப்பித்தது.

காந்தி வழக்கம் போல சாந்தமாகச் சொன்னார், போராட்டத்தை நிறுத்துவது இனி என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது என்று.

ஈரோட்டில் அந்த இரண்டு பெண்களும் போராட்டத்தை நிறுத்தவே இல்லை. இதனால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக போராட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை ரத்து செய்யப்பட்டது.

இப்படியாக மிக முழுமையாகவும் தீவிரமாகவும், காந்தியக் கொள்கைகளுக்கும், தேசியவாதத்துக்கும் போராடிய ஈ. வெ. ரா. இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டுக்கு மாறி, காந்தியார் ஒழிக என்றே முழங்க ஆரம்பித்தார். ஏன் தெரியுமா?

(தொடரும்....)


  Bookmark and Share