பகுத்தறிவும் கடவுள் வாக்கும் (2)
படைப்புக் கதை பிரளயக் கதை
தந்தை பெரியார்
வினா:- பகுத்தறிவுப்படி தப்பானதையும் நம்ப வேண்டுமென்று வேதம் கட்டளையிட்டால் நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்ப்படிவாயா? பகுத்தறிவுக்குக் கீழ்ப்படிவாயா?
விடை:- பகுத்தறிவுக்கு ஒத்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.
வினா:-பகுத்தறிவு பொய் என்று கூறுவதை, மெய் என்று நம்புவது சாத்தியமில்லையா?
விடை:- சாத்தியமே அல்ல. பகுத்தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி. மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகாரமில்லை.
வினா:- பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை எந்த வேதமாவது போதனை செய்கிறதா?
விடை:- ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன.
வினா:- உதாரணம் கூறுக.
விடை:- படைப்புக் கதை.
வினா:- வேறொரு உதாரணம்.
விடை:- பிரளயக் கதை.
வினா:- மேலும் ஒரு உதாரணம்.
விடை:- மனிதன் சபிக்கப்பட்டுப் பாபியான கதை.
வினா:- அவற்றைப் பற்றி தற்காலத்திய அபிப்பிராயம் என்ன?
விடை:- வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாகவில்லை; பிரளயம் உண்டாகவில்லை; கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.
வினா:- வேதங்களில் உள்ள வேறு தப்புகள் எவை?
விடை:-சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக்கின்றன. வேதங்களில் கூறப்பட்டவை எல்லாம் பரஸ்பரம் முரணாக இருக்கின்றன. பாபகரமான பல விஷயங்களையும், வேதங்கள் போதனை செய்கின்றன.
வினா:- வேதங்களில் காணப்படும் இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?
விடை:- மனிதன் தப்புச் செய்யக் கூடியவன்தானே!
வினா:- அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்ததுதானா?
விடை:- வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும், துர்க்குணங்களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.
வினா:- அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?
விடை:- நம்மிடமுள்ள ஒளி வழி காட்டுகிறபடி நடக்க வேண்டும்.
வினா:- அது என்ன ஒளி?
விடை:- அதுதான் பகுத்தறிவு.
வினா:- பகுத்தறிவு நம்மைத் தப்பு வழியில் செலுத்தாதா?
விடை:- ஆம். செலுத்தக் கூடும்.
வினா:- அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்?
விடை:- ஏனெனில், அதை விடச் சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.
வினா:- வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன?
விடை:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங்கெட்டு விடும் என்ற பயமே அதற்குக் காரணம்.
வினா:- அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?
விடை:- இல்லவே இல்லை. வேதங்களின் பெயரால் எவ்வளவோ பயங்கரக் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களை நம்பாத அநேகர் உதவியாளராக இருந்திருக்கின்றார்கள்.
வினா:- எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளியதுண்டா?
விடை:- இல்லை. சுமார் 5,000 வருஷங்களுக்கு முன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது.
வினா:- அதற்குமுன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா?
விடை:- நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்கு முன் மக்களும், சமூகங்களும், தேசங்களும் இருந்தே வந்திருக்கின்றன.
வினா:- உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளினாரா?
விடை:- இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா:- அப்படியானால் உலக மக்களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்கமுடையவர்கள்.
விடை:- இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர் பண்டு மிக்க நாகரிகம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
வினா:- அதனால் விளங்குவது என்ன?
விடை:- வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை யென்பது அதனால் விளங்குகிறது.
வினா:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்பதனால் நன்மை ஏற்படுமா?
விடை:- ஏற்படாது. முதலில், வேதங்கள் இல்லை. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் ஆகி விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமல் ஆகி விடும்.
வினா:- மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?
விடை:- பிரதிபலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதனாலும், விரும்புவதனாலும் வலுப்படுத்தலாம்.
வினா:- நல்ல ஒழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை?
விடை:- முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிற நல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி.
வினா:- கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா?
விடை:- கடமை ஒரு சோதனை என்றும், உத்தமர்களாக இருக்க வேண்டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்துவிட வேண்டும் என பழைய மதங்கள் போதனை செய்கின்றன.
வினா:- அத்தகைய மத போதனையினால் விளையும் பயன் என்ன?
விடை:- அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படுகிறார்கள். உத்தம வாழ்க்கையைப் பற்றி எண்ணும் போதும் பயமும் மனச்சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது.
வினா:- அவ்வளவுதானா?
விடை:- துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது.
வினா:- கடமை என்பதற்குச் சரியான பொருள் என்ன?
விடை:- கடமை ஒரு சோதனை அல்ல; தியாகமு மல்ல, கடமை என்பது ஒற்றுமை, அழகு. மகிழ்ச்சி, சரீர மானச விதிகளை நாம் மீறும்போதுதான் நாம் ஆத்ம தியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்.
(குடிஅரசு 19.4.1936)