Home | Contact us
 

ஆகஸ்ட்16-31_2010


ஆசிரியர் பதில்கள்

கேள்வி : வழிபாட்டு மொழி யாக தமிழ் இருக்கவேண்டுமென்று இனவுணர்வின் அடிப்படையில் நாத்திகர்களான நாம்தானே குரல் கொடுக்கிறோம்! தமிழ்நாட்டுப் பக்தர்கள் போராட முன்வராதது ஏன்?

கு.நா. இராமண்ணா, சீர்காழி

பதில் : நாத்திகர்கள் அறிவை (புத்தியை) அடிப்படையாகக் கொண்டு எதையும் சிந்திக்கும் கேட்கும் மனித உரிமைப்போராளிகள்; பக்தர்கள் பரிதாபத்திற்குரிய வகையில் புத்தியை மறந்தவர்கள் அல்லது துறந்தவர்கள். அதனால்தான் அந்நிலை!


கேள்வி : குஜராத்தையே மிக மிக மோசமாக ஆளும் மோடிக்கு, பிரதமராகவே தகுதி இருப்பதாகக் கூறுகிறாரே...துக்ளக் சோ?

நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : பார்ப்பன பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கண்ணாடி அவர் அணிந்துள்ள கண்ணாடி!


கேள்வி : நம் தமிழ்நாட்டில், மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்ற பெருமை மிகு விவசாயத்திற்குப் பெயர்பெற்ற நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் எனும் தொழில் மூலம் அழிக்கப்பட்டு வருகிறதே!

தெ.மதியழகன், கணியூர்

பதில் : மாடி கட்டிப் போரடித்தால் மாளாது என்று நிலங்களில் வீடு கட்டி, விவசாயத்திற்குப் பாடைகட்டி மகிழ மக்கள் பலர் தயாராகிவிட்டார்களே என்ன செய்ய!


கேள்வி : ஈழப் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் செயல்படுகின்றதே?

கு.பழநி, புதுவண்ணை

பதில் : தேசிய இனங்களின் விடுதலை உணர்வுபற்றிய லெனினின் கருத்துகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஏகாதிபத்திய வேட்டையில் ஈடுபட்ட வியாதியின் வெளிப்பாடு அவைகளுக்கு!


கேள்வி : கட்டாய ஜாதி மறுப்புத் திருமணச்சட்டம் கொண்டுவர மாநில அரசிடம் தி.க. சார்பில் அழுத்தமான கோரிக்கை வைக்கப்படுமா?

ஜெயச்சந்திரன், மணக்காடு

பதில் : கட்டாயச் சட்டம் வந்தால் அடிபட்டுப் போகும் நீதிமன்றங்களில் ! எனவே, அது ஜனநாயகத்தில் சாத்திய மாகாது!


கேள்வி : விசுவாமித்திரர் மேனகையிடம் மயங்கியது புராணக்கதை; நிஜம் அல்ல என்று விகடன் கேள்விபதிலில் ஹாய்மதன் கூறியிருக்கிறாரே....

பாவலர் அறிவரசன், திருலோக்கி

பதில் : பலே பலே பார்ப்பனர்கள்கூட இப்படி சில பல, நேரங்களில் உண்மைகளைக் கூறுகிறார்களே!


கேள்வி : கல்கண்டு இதழ் ஆசிரியர் திரு. லேனாதமிழ்வாணன் சாதிவாரிக் கணக்கெடுப்பில் மிகவும் குழம்பிப் போயிருப்பதாகச் சொல்லியுள்ளாரே!

மதி, கணியூர்

பதில் : யாருக்குக் குழப்பம்? விடுதலையைத் தொடர்ந்து படித்தால் அந்த நல்ல நண்பரின் குழப்பம் தானே தீரும்.


கேள்வி : சமூக விரோதிகளின் பட்டியலில், சாமியார்களாகவே சேர்ந்து கொண்டிருப்பது எதனைக் காட்டுகிறது?

நெய்வேலி க.ராசன்

பதில் : சாமியார்கள் என்றாலே சமூகவிரோதிகள் என்பதையே காட்டுகிறது!


கேள்வி : காமன்வெல்த் போட்டிக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை எடுக்கப் போவதாக பி.ஜே.பி. குற்றம் சாட்டியுள்ளதே.....

இ.ஜீவா, கோடம்பாக்கம்

பதில் : இதில் உண்மையிருந்தால் கண்டனத்திற்குரியது; திடீர் என்று தாழ்த்தப்பட்ட தலித் மீது பாசம் பா.ஜ.க. வுக்குப் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டதே!


  Bookmark and Share