உலகப் பகுத்தறிவாளர் பார்பரா ஸ்மோக்கர்
சு.அறிவுக்கரசு
தன்னை வணங்கவேண்டும், வாழ்த்திப்பாட வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறது என்றால் அது கீழ்த்திசை நாட்டு மனோபாவத்தை ஒத்தது; பிரார்த்தனை செய்து தாம் நினைப்பதை முடித்துக் கொள்வது என்பதானது கடவுளின் எல்லாம் அறிந்த மனதை மாற்றிடும் தந்திர உபாயமல்லவா? என்று எழுதிக் கடவுள் கற்பனையைக் கிண்டல் அடித்தவர் நம்மிடையே வாழும் நாத்திகர் பார்பரா ஸ்மோக்கர்.
கடவுள் கண்ணுக்குப் புலப்படாதவாறும் கருத்துக்குப் புரியாதவாறும் இயங்குகிறது என்பது, அதன்பின்னணியில் புகைத்திரையைப் போட்டு மாய உருவத்தை உற்பத்தி செய்வது உண்மைக்கு மாறாக உலவவிடுதலே என்று கடவுள் கற்பனையை நகையாடுகிறார். உருவம் இல்லாதவன் எனக்கூறிக்கொண்டே உருவங்களைப் படைக்கும் மதங்கள், உருவங்களை வழிபடச் சொல்லும் மதங்கள்! அது கடவுள் என்று கதைவிட்டுக் கொண்டே இருப்பவர்களைப்பார்த்து அது புலப்படவில்லையே என்றால் அது புலப்படாது என்று புளுகுபவர்களைப் பார்த்து உனக்குப் புரிவது, எனக்குப் புரியாதது ஏன் எனக்கேட்டால் இன்னும் முயற்சி செய் என்றும் பாம்பன் சாமியாரைப் பார், பரமஹம்சரைப்பார் என்றும் கூறித் தப்பிக்கும் நபர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்.
அத்தகைய அறிவுப் பெண்மணி பார்பரா ஸ்மோக்கர் தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களுக்கு நாத்திகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். 1998 இல் தமிழர் தலைவர் அவர்களைத் தமிழர்கள் தங்கத்தால் எடைபோட்ட மாபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருமையான அறிவுக் கருத்துகளைத் தெரிவித்தவர்.
அவர் லண்டனில் ஒரு பழுத்த, ஆத்திகக் கத்தோலிக்கக் குடும்பத்தில் 1923 இல் பிறந்தவர். கத்தோலிக்கக் குருக்கள் நடத்தும் பள்ளியில் தங்கிப் படித்தவர். பள்ளியில் ஊட்டப்பட்ட மதக்கருத்துகள் தன் எதிர்காலத்தைக் கன்னித் துறவியாகவோ, கர்த்தரின் புகழ்பாடும் எழுத்தாளராகவோ ஆக்கிக் கழிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து அரசரின் கப்பல் படையின் பெண்கள் பிரிவில் கம்பியில்லாத்தந்தி அனுப்புபவராகப் பணிபுரிந்த நேரத்தில், மதம் சம்பந்தமான தம் கருத்துகளை மறு பரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. அத்தகைய மனமாற்றம் இலங்கைப் பகுதியில் பணியாற்றும்போது ஏற்பட்டது.
1945 ஆகஸ்ட் 15 இல் சிங்கப்பூர், மலாயா, பர்மா பகுதிகளை ஜப்பானியரின் பிடியிலிருந்து மவுண்ட்பேட்டன் பிரபு கப்பல்படைத் தளபதியாகப் போரிட்டு வென்றார். (அதன் நினைவாகத்தான் அந்தத் தேதியில் இந்தியாவுக்கு விடுதலை தருவதாக அறிவித்தார். நாள் நல்லநாள் அல்ல; வேறு நாளுக்கு மாற்றுங்கள் என்று இங்குள்ள காங்கிரசார் கேட்ட போதும் மறுத்தவர். இந்து மத வெறிக்கும் மூடநம்பிக்கைக்கும் ஆட்பட்ட காங்கிரசார் இந்திய விடுதலையை நள்ளிரவில் வாங்கினார்கள் என்பது வரலாறு. இந்து மதத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 வரை நல்ல நேரம், கெட்ட நேரம் கிடையாது) போர் இப்பகுதியில் முடிந்த செய்தியை அறியாத பார்பரா ஸ்மோக்கர், படைக்கப்பல்களுக்குத் தொடர்ந்த சமிக்ஞை அனுப்பி உயிர்ச் சேதம் ஏற்படாமலிருக்கும் எண்ணத்தில் செயல்பட்டார். அப்பேர்ப்பட்ட மனிதாபிமானி.
போர்ப்படைப் பணியிலிருந்து விடுபட்டுத் திரும்பிய பின்னர், மதத்தைப் பற்றி நிறையப் படித்தார். நிறையப் படிக்கப்படிக்க, மதத்தின்மீது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. 1949 இல் கிறித்துவ மதத்திற்கு முழுமையாக முழுக்குப் போட்டுவிட்டு, மதமற்ற மனிதநேய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். படிப்பு புத்தியைத் தந்தது. புத்தி வந்ததும் பக்தி போனது. பெரியாரின் புத்தி வந்தால் பக்தி போகும். எனும் கணிப்பு மெய்யானது.
மனிதநேயம் என்பதை விளக்கி அவர் எழுதிய நூல் HUMANISM மிகச் சிறப்பானது. பள்ளிப் பிள்ளைகள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக, தெளிவடைவதற்காக எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டது, பின்னர் விரிவுபடுத்தியும் வெளியிட்டார். அந்த வகையில் எழுத்தாளராக வேண்டும் என்கிற இளமைக்கால எண்ணம் ஈடேறிவிட்டது. ஆனால் ஒன்று கர்த்தரின் மகிமைபற்றிப் பேசுவதற்குப்பதில் மாந்த நேயம் பற்றிப் பேசினார்.
இங்கிலாந்து நாட்டின் மதச்சார்பு அற்ற சங்கத்தின் தலைவராக 1971 இல் தேர்ந்தெடுக்கப் பட்டு 25 ஆண்டுகள் தொடர்ந்து அப்பதவியில் 1996 வரை பணியாற்றினார்.
நாத்திகத்தின் சிறப்பைபெருமையைத் தம் பேச்சுகளால், வாதத்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், வானொலிப் பேச்சுகளில் என்று, எல்லா வகையிலும் பரப்பியவர். கல்வியிலும் அறிவியல் பாடங்களிலும் மதம் பற்றிய பாடங்களே இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்ற செலக்ட் கமிட்டியின் முன்பாக, அவர் தந்த கருத்துகள், எடுத்து வைத்த வாதம் ஒவ்வொரு நாத்திகரையும் பெருமைப்பட வைத்த நிகழ்வாகும்.
இங்கிலாந்து நாட்டில் மதச்சடங்கு அற்ற சவ அடக்கம், மதச் சடங்குகள் அற்ற திருமண ஒப்பந்தங்கள், மதச் சடங்குகள் அற்ற (குழந்தைக்கு) பெயர் சூட்டு விழாக்கள், போன்றவற்றைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர். தந்தை பெரியாரைப் போலவே, இவற்றைத் தொடர்வதற்காகப் பலரையும் பயிற்றுவித்தவர்; பகுத்தறிவுப் படைவீரர்களை உருவாக்கியவர். மிகவும் பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட அமெரிக்க நாட்டிற்கு 1984 இல் சுற்றுப் பயணம் சென்று நாத்திக, மனிதநேய, பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பரப்பியவர். 1990, 1998 ஆகிய ஆண்டுகளில் இருமுறையாக இந்தியா வந்து பரப்புரைப் பணியில் ஈடுபட்டவர். அன்னை மணியம்மையார் 1974 இல் நாத்திக இயக்கமான திராவிடர் கழகத்திற்குத் தலைமை தாங்கினார் என்றால் பார்பரா ஸ்மோக்கர் அதற்கும் முன்னரே 1971 இல் இங்கிலாந்து நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல்பெண் என்கிற பெருமையைப் பெறுகிறார்.
மனிதக் கருவை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திட அறிவியலாளர்கள் முயன்றபோது, அது சிசுக் கொலை, மனிதக்கொலை என்றெல்லாம் மதவாதிகள் பூச்சாண்டி காட்டி எதிர்த்தனர். கருத்தடைபற்றிய கருத்து பரவலாகி கருத்தடை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பழக்கத்திற்குவந்த போதும் கூட, இதுமாதிரி மதவாதிகள் எதிர்ப்புக் காட்டினர். குழந்தையைக் கொடுத்து உருவாக்குவது கடவுளின் செயல் அதனைத் தடுக்கும் வகையில் செய்வது கடவுளை எதிர்ப்பதாகும் என்று பூச்சாண்டி எழுப்பப்பட்டது. ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதைப் பாவம் (SIN) என்கிறது கிறித்துவம். அதைச் செய்த காரணத்தினால் சபிக்கப்பட்டவர்கள் ஆதாமும் ஏவாளும், பாபச் செயலைப் புரிந்த காரணத்தால் பிரசவ வலியும் வேதனையும் ஏற்படட்டும் என்று கர்த்தர் தண்டனை தந்ததாகக் கூறுவது கிறித்துவம். அப்படியிருக்க, கருத்தடை எப்படி கர்த்தரின் கருத்துக்கு எதிர்ப்பானது? ஒருவகையில், கர்த்தரின் கருத்தைச் செயல்படுத்தும் விதம்தானே வேறு வகையில்? கருத்தடை மாத்திரைகளை காங்கோ நாட்டுப் போரின் போது கன்னித் துறவிகளுக்குப் போப் தந்தார், கருத்தடையைச் செய்தார் என்பது வரலாறு!
அந்தவகையில் கரு ஆராய்ச்சி (EMBRYO RESEARCH) தடை செய்யப்படக்கூடாது எனும் போராட்டத்தில் பகுத்தறிவாளர்கள் 1985 இல் இறங்கினர். அதற்கு ஆதரவாக முட்டைகள் மனிதர்கள் அல்ல என்ற தலைப்பில் கட்டுரை எழுதி நாடாளுமன்றத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் தந்தவர் பார்பரா ஸ்மோக்கர்.
அவர் சார்ந்த மதத்திற்கு எதிராக இவற்றை அவர் செய்துவந்தார். என்றாலும், இசுலாமிய மதவெறிக்கு எதிராக அவர் செய்த போராட்டம் சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். இந்தியாவில் பிறந்த இசுலாமியரான சல்மான் ருஷ்டி, சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதினார். இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூல். இந்நூலில் இசுலாமிய மத எதிர்ப்புக் கருத்துகள் இருக்கின்றன எனக்கூறி, அவருக்கு மரணதண்டனையை மதநீதிமன்றம் விதித்தது ஈரான் நாட்டில்! அவரது உயிரைக் காத்திடும் மகத்தான செயலில் இங்கிலாந்து அரசு இறங்கியது. அவரைப் பாதுகாத்திடும் பணியில் முழு வீச்சுடன் செயல்பட்டது. அந்த நேரத்தில், இங்கிலாந்தில் இருந்த முசுலிம்கள் சல்மான் ருஷ்டிக்கு எதிராகப் பெரும் பேரணி ஒன்றை லண்டன் மாநகரில் நடத்தினர். அரசும் அதனை அனுமதித்தது. அவர்களின் கருத்து எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தாலும் அதற்கும் மதிப்பளித்தது இங்கிலாந்து அரசு. தன் மதச்சார்பற்ற தன்மையைக் காட்டிக் கொள்கிற போர்வையில் ருஷ்டியின் நூலுக்குத் தடைபோட்ட இந்திய அரசு போல அல்லாமல் இங்கிலாந்து அரசு நூலுக்குத் தடை போடவில்லை. (நான் அந்நூலை வாங்கிப் படித்ததும் அந் நாட்டுக்குப் போயிருந்த போதுதான்) அதுபோலவே, ஊர்வலத்திற்கும் தடையே போடவில்லை.
பேச்சுச் சுதந்தரம், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்தரம் கட்டுப்பாடற்ற வகையில் அனைவருக்கும் அளிக்கப்படவேண்டும் என்கிற நியாயமான கருத்தை வலியுறுத்திப் பதாகை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஊர்வலப் பாதையில் நின்றார் பார்பரா ஸ்மோக்கர். நாள் 27.5.1989. நியாயம் என்றால் என்னவென்று தெரியாத மதவெறியர்கள், அவரைத் தாக்கினர். பலத்தகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சீரானார். தாம் கொண்ட கொள்கைக்காக ரத்தம் சிந்திப் போராடிய போர்க்குணம் கொண்ட வீராங்கனை அவர்!
உலக நாடுகளுக்கான பி.பி.சி. வானொலி ஒலிபரப்பில், நான் ஏன் நாத்திகன் எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை 1985 இல் உலக நாடுகள் முழுவதிலும் ஒலிபரப்பாகிய பெருமைக்கு உரியது.
1999 இல் கிறித்துவ மத அடிப்படை வாதிகளுடன் ஒருவாரம் தங்கி, வாதப் போரில் ஈடுபட்ட காட்சி பிபிசி தொலைக்காட்சியில் எதிரிகளுடன் வாழ்க்கை எனும் தலைப்பில் ஒளிபரப்பாகியது.
2005 ஆம் ஆண்டில் பிபிசி வானொலியில் என் மதத்தை இழந்தேன் எனும் தலைப்பில் அவருடைய பேட்டி ஒலிபரப்பாகியது.
ஒல்லும் வகை என்று வள்ளுவர் சொன்னதைப் போல் எல்லா வகையிலும் தம் பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளைப் பரப்பி, வெல்லும் வகையில் பாடுபட்டு வரும் பெருமைக்குரியவர்.
மனிதர்களின் அறிவின் ஆற்றலை அளவிடும் முறை உள்ளது. அய்.க்யு (I.Q) என்கிறார்கள். அதுபோல, ஆண்டவனின் அறிவாற்றலை அளவிட்டால் என்ன, என்கிற கேள்வியை எழுப்பினார். விடையையும் அவரே சொன்னார் அது....
(தொடரும்)