சீனப்பயணம்
ஆக்டோபஸ் சாப்பிட்டோம்

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 2006 இல் சீனா சென்றபோது அந்நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆண்டுதோறும் நூறு மாணவர்களை இந்தியப் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்து நல்லுறவை வளர்ப்பது என்ற அடிப்படையில் அமைந்ததே அந்த ஒப்பந்தம். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் 70, பேர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என 30 பேர் குழுவாக சீனா சென்று வந்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டிலிருந்து. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், S.S.N. பொறியியல் கல்லூரி, பத்திரிகைத்துறையிலிருந்து தலா ஒருவர் இக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். 2010 ஜூன் மாதம் சீனா சென்று வந்தவர்களுள், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ணிசிணி மூன்றாமாண்டு பயிலும் மாணவி நயாகராவும் ஒருவர். அவரிடம் ஒரு பேட்டி:
செய்தியாளர்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலிருந்து எப்படித் தேர்வு செய்யப்பட்டீர்கள்?
நயாகரா: நாட்டுத் தொண்டுத் திட்டத்தின் சார்பாக இக் குழுவில் கலந்து கொண்டேன். என்.எஸ்.எஸ். முகாமில் பங்குபெற்றது, தொடர்ந்து ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளில் முதல்பரிசு பெற்றது, மற்றும் மதிப்பெண்கள், நான் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணங்களாகும். தேர்வு செய்யப்பட்ட பிறகும்கூட, சென்னையிலிருந்து இளைஞர் நலத்துறை அதிகாரி பல்கலைக்கழகம் வருகை புரிந்து திறனறிச் சோதனை நடத்தினார். மத்திய அரசின் இளைஞர் நலத்துறை, சீனா செல்வதற்கு என்னைத் தெரிவு செய்து அறிவித்தவுடன் பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி அய்யாவிடம் வாழ்த்துப் பெறச் சென்றபோது பயனுள்ள ஏராளமான குறிப்புகளை வழங்கினார். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. வீ. அன்புராஜ் அவர்களும் மிகச் சிறந்த முறையில் வழிகாட்டுதல் நல்கினார். இந்தியாவின் பிரதிநிதியாக சீனா செல்வதற்காக மிகவும் மகிழ்ந்து வீட்டிற்கு அழைத்து உற்சாகமூட்டி, பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
செய்தியாளர்: சீனப் பயணம் குறித்து...?
நயாகரா: 17.06.2010 முதல் 26.06.2010 வரை 10 நாள்கள் சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன், டில்லியில் எங்களுக்கு 2 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி (Orientation) அளித்தார்கள். சீனாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இந்திய சீன நட்புறவு மேம்பட என்னென்ன வழிவகைகள் இருக்கின்றன? சீனாவில் சுற்றுப்பயணத் திட்டங்கள், சீன மொழியின் அடிப்படையான சில சொற்கள் முதலியனவற்றைச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தில் இருந்து உபச்சாரமும் நடைபெற்றது.
சீனாவில் நாங்கள் மூன்று பெரும் நகரங்களுக்குச் சென்றோம். சாங்காய் (Shanghai) ஹிஃபெய் (Hefei) சாங்சிங் (Chong ching) இம் மூன்றும் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்கள். தூய்மையாக இருக்கின்றன.
செய்தியாளர்: சீனாவில் World Expo நடக்கிறதே பார்த்தீர்களா?
நயாகரா: ஆமாம் World Expo 2010 நடந்தது. “Better City Better Life” என்பது அதன் மய்யக் கருத்து. இந்தியாவின் சார்பான அரங்கம் கண்கவரும் வண்ணம் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்தது. எல்லா நாடுகளும் தங்களது கலை, நாகரிக வளர்ச்சியினை விளக்கி யிருந்தார்கள். இக்கண்காட்சியில் இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கலந்துகொண்டார். அவருடன் உரையாடினோம். ஒரு கூரையின் கீழ் பல்வேறு நாடுகளைப்பற்றி அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.
செய்தியாளர்: சீனாவில் வியந்த விஷயம்?
நயாகரா: விளையாட்டுத்துறைக்கு அவர்கள் கொடுக்கிற முக்கியத்துவம். பயிற்சி அரங்கத்தைப் பார்வையிட்டோம். விதவிதமான பயிற்சிகள் நவீன முறையில் தொழில் நுட்ப உதவியுடன் அளிக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிகளைக் குவிக்கமுடிகிறது.
செய்தியாளர்: சீனாவில் மாணவர்களுடன் கலந்துரையாடினீர்களா?
நயாகரா: ஆம், பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினோம். University of Science and Technology of China (USTC) சென்றோம். அங்கு 600 மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் பேசினோம். அவர்களது கல்வி நிலையினைக் கேட்டறிந்தோம். மிகவும் அன்புடன் மரியாதையுடன் பழகினார்கள். இந்தியாவில் அனைவரும் இங்கிலீஷ் பேசுகிறார்களே எப்படி? என்று ஆச்சரியப்பட்டார்கள். ஆங்கிலம் எந்த வயதிலிருந்து படிக்க ஆரம்பிப்பீர்கள் என்று கேட்டார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் கிராம மக்களுக்கு உதவி செய்கின்ற புரா திட்டத்தைக் கூறினோம். மகிழ்ச்சி அடைந்தார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு இரு நாட்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

செய்தியாளர்: தொழிற்சாலைகளைப் பார்வையிட்டீர்களா?
நயாகரா: ஆமாம். Hefei Metal Forming Machine Tool Limited என்ற நிறுவனத்தைப் பார்வையிட்டோம். பிரமிப்பாக இருந்தது.
தொழிற் பூங்கா சென்றோம். அங்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதையும் கார்பன்டைஆக்சைடைக் குறைப்பதையும், காற்று மாசுபடாமல் இருக்க மேற்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கினார்கள். சீனாவில் இப்போது காற்று மாசுபடக் கூடாது என்ற விழிப்புணர்வு வளர்ந்திருக்கிறது. பேட்டரி கார் வந்துவிட்டது. அதிகமாக சைக்கிள் ஓட்டுகிறார்கள்.
செய்தியாளர்: நகரங்கள் எப்படி இருக்கின்றன?
நயாகரா: டயூ (Dayu) என்ற புதிய நகரத்தை நிர்மாணிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் காட்டினார்கள். அகலமான வீதி, குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள், தொழிற்சாலைப் பகுதிகள், கடைவீதிகள் எனத் திட்டமிட்டு அமைத்து வருவதைக் கண்டோம். அங்கு நிறைய மரங்களை வளர்த்துவருகிறார்கள். பழைய நகரங்கள் நெருக்கமாகவே இருக்கின்றன.
செய்தியாளர்: சீனாவின் பாரம்பரியம் குறித்து....
நயாகரா: சீனா பழைமையான நாடு. நெடிய வரலாறு உடையது. சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். சீனாவின் மியூசியம் சென்று பார்த்தோம். இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாற்றினை அருங்காட்சியகம் எடுத்துரைக்கிறது. சீனர்களின் கலை, பாரம்பரியம், நாகரிகத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
செய்தியாளர்: சீனர்களின் உபசரிப்புக் குறித்து...
நயாகரா: இந்தியப் பிரதிநிதிகளை மிகவும் உயர்வாக நடத்தினார்கள். பத்து நாள்களும் மிக உயர்ந்த விடுதிகளிலே தங்கவைக்கப்பட்டோம். எங்களை அழைத்துச் செல்வதற்கு மூன்று AC Buses எப்போதும் தயார் நிலையில் இருந்தன. பாதுகாப்புக்கு காவல் துறை வாகனம் கூடவே வந்தது. தினந்தோறும் இரவு விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புதிய உணவு வகைகளைச் சுவைத்துப் பார் என்று துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் அவர்கள் அறிவுரை கூறி இருந்தார்கள். அதன்படி நான் நத்தை, ஆக்டோபஸ், ஈல், வாத்து போன்ற உணவுகளைச் சாப்பிட்டேன். அசைவப் பிரியர்களுக்குச் சீன தேசச் சாப்பாடு கொண்டாட்டம்தான். சைவம் மட்டும் உண்பவர்களுக்குச் சிரமம்தான்.
செய்தியாளர்: மக்கள் எப்படி இருக்கிறார்கள்?
நயாகரா: சீனக் குழந்தைகள் ரொம்ப அழகு, பெண்களும் அழகாக இருக்கிறார்கள்.
செய்தியாளர்: வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
நயாகரா: உலக அதிசயமாம் சீனப் பெருஞ் சுவரினைப் பார்க்கவில்லை என்ற வருத்தமுண்டு. சீனாவில் கிராமத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், அவை பயணத்திட்டத்தில் இடம் பெறவில்லை. நாட்டுத் தொண்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஷ்வரி, திட்ட அலுவலர்கள் பேராசிரியர் டாக்டர் அருணாச்சலம், பேராசிரியர் நர்மதா மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.