Home | Contact us
 

ஆகஸ்ட்16-31_2010


குடிஅரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

பெருங்கிழவரின் தளராத உழைப்பு
இயக்கத்திற்குப் புத்துயிர்

(1927 ஜூலை முதல் வாரத்தில் கோவையில் பார்ப்பனரல்லாதார் இளைஞர் மாநாடு நடை பெற்றது. அதில் வரவேற்புரையாற்றிய திருவாளர் சி.வி.வி. சுப்பையச் செட்டியார் அவர்கள் தந்தை பெரியாரும் அவர்தம் தளராத உழைப்பால் பார்ப்பனரல்லாதார் இயக்கத் திற்குப் புத்துயிர் அளித்தார் என்பதைப் பலபட புகழ்ந்துரைக்கின்றார். தந்தை பெரியார் தம் சீர்திருத்தத் திட்டத்தைத் தம் காலத்திலேயே மக்கள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரும் காட்சியைக் காணும் பேறு பெற்றுள்ளார் என்றும் இப்பேறு வேறு எவருக்கும் கிட்டாத பெரும்பேறு என திரு சுப்பையா அவர்கள் 1927 ஆம் ஆண்டிலேயே பாராட்டி இருப்பது பெரியார் தொண்டர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும் அல்லவா? தந்தை பெரியாரின் பெருமையைத் திரு சுப்பையா சொற்களில் படித்து மகிழுங்கள்.)

அக்காலத்தில் நமது கட்சியின் பெயரைச்சொல்லவும், நமதில்லங்களில் தாங்கள் வருவது கூட பாவம் என்றும் மனம் புழுங்கியிருகிந்த பார்ப்பனரல்லாதார் மிக அதிகமானார்கள். நாம் இறந்தே விட்டதாக பார்ப்பனர்கள் கூறியதைத் தேசம் நம்பியது. இப்பேர்பபட்டகாலத்தில்தான் நமது குடியரசு அதிபர். திரு. ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் நமக்குத்துணைவராகத் தோன்றினார். இன்று நாட்டில் நமக்கேதாவது யோக்கியதை இருக்கிற தென்று யாராவது எண்ணினால் அது திரு நாயக்கர் அவர்களாலேயே உண்டானதாகும்.

அப்பெரியாரின் இடைவிடா உழைப்பால் தேசத்தில் தேர்தலில் தோற்றகட்சியினரான நமது மதுரை மகாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் விஜயம் செய்திருந்தார்கள், நமது தலைவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, மீண்டும் சமூகவியலை எடுத்துக் கடனாற்றுவதென்றும், அதேவேலையாக இருக்கப்போவதாகவும் கூறினார்கள், பார்ப்பனப் புரோகித பகிஷ்காரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனது சீர்திருத்தத் திட்டம் தன் காலத்திலேயே ஜனசமுகம் அனுஷ்டிப்பதைப் பார்க்கும் பெருமை எந்தச் சீர்திருத்தக்காரரும் பெற்ற தில்லை. அவர்கள் மடிந்தபின்பே அவர்களின் லெட்சியம் நாட்டாரால் கொண்டாடப்படும். ஆனால், ஆச்சர்யபுருடரான நமது நாயக்கர் அவர்களின் திட்டமோ அவர் காலத்திலேயே ஜனசமுகத்தால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப் பெருங்கிழவரின் தளராத உழைப்பும் பிடிவாதமும் ஆண்மையும், இளைஞர்களுக்கு அவரிடம் உள்ள செல்வாக்குமே காரணமாகும். அத்தலைவர் நீடூழி வாழ்க.

ஆச்சரியமான முன்னேற்றம்

சட்டசபையில் சொற்பமாய் உள்ள நமது கட்சியை அப்பெரியார் ஆயுதமாகக்கொண்டு பார்ப்பன அரசியல்வாதிகளின் துரோக சிந்தனைகளை ஒரு நொடியில் உலக முழுவதும் வெளிப்படுத்தினார். மந்திரி கட்சியை எதிர்க்கக்கூடாதென்ற தலைவர்கள், அக்காலத்திலும் இல்லாமலில்லை. ஏதோ நற்காலமாய் மந்திரி கட்சியை எதிர்த்தோம். பார்ப்பன வேஷம் வெளியாயின. ஆனால், மந்திரிசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் நாமே யாவோம். இந்நான்கு மாத காலமாய் மதுரை மஹாநாட்டுத் தீர்மானங்களையும், சென்னை நிர்வாகக் கமிட்டித் தீர்மானங்களையும் நம்தலைவர்கள் நிறைவேற்ற பாடுபட்டுழைத்து வந்திருந்தால் இன்று மயிலை அய்யங்காரின் ஆட்டிவைக்கும் பொம்மையாய் உள்ள மாகாண சர்க்காரும், மாகாண சட்டசபையும் முன்பே மாறுதல் அடைந்திருக்கும். சட்ட சபைகளைக் கலைக்காதது கவர்னர் பெருமானின் குற்றமன்று; நமது குற்றமேயாகும். இன்றும் தலைவர்கள் நினைத்து அதன் வழி நின்றுழைத்தால் சட்டசபையைக் கலைக்க முடியாமல் போகாது.

குடி அரசு 10.07.1927, பக்கம் 3
தகவல் மு.நீ.சி.


  Bookmark and Share