அய்யாவின் அடிச்சுவட்டில்...
ஆற்காடு மாநாடு
கி.வீரமணி
7,8-4-1973 இல் வட ஆற்காடு மாவட்டத்தின் இருபெரும் மாநாடுகள் ஆற்காடு நகரில் தொடங்கி இருந்த நிலையில் முதல் நாள் நள்ளிரவு மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கிறது. பந்தல் அடியோடு தீக்கிரையாகிவிட்டது. என்றாலும், உடனடியாக மீண்டும் பந்தல் அமைப்பு வேலை நடைபெற்றது. மாநாடுகள் திட்டமிட்டபடி நடக்கின்றன. இன்று மதியம் ஊர்வலம். ஆற்காடு நகர வரலாறு இதுவரை கண்டிராத அளவு பீடுடனும் பெருமையுடனும் நடைபெற்றது.

வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடும் பகுத்தறிவாளர் கழக மாநாடும் இன்றும் நாளையும் நடத்தப்பட வேண்டும் என்று ஆற்காடு நகரில் பெரியார் திடலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்றிரவு வரைபடம் அமைக்கும் பணியிலும் பிற நாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பணியிலும் நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்ததால் தோழர்கள் அனைவரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பந்தல் மிகவும் பிரமாண்டமான அளவில் அமைக்கப்பட்டிருந்தது. 150 அடி அகலம், 200 அடி நீளம்.
பந்தல் ஒரு முனையில் நாடகம் நடத்த அரங்கமும் பூரணமாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1000 வாட்ஸ், 500 வாட்ஸ் பல்புகள் ஏராளமாகப் போடப்பட்டிருந்தது. டியூப் விளக்குகள் நூறுக்கு மேல் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வளவு பிரமாண்ட முறையில் அமைந்த பந்தலைச் சதிகாரர்கள் தீக்கிரை ஆக்கினர்.
திமுக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த திரு. ந. வீராசாமி அவர்கள், (இன்றைய மின்துறை அமைச்சர்) முதல்வர் கலைஞர் அவர்கள் ஆணைப்படி பல உதவிகளும் செய்து, விடியற்காலை 11 மணிக்குள் பந்தலை மீண்டும் போட்டு அங்கேயே நடத்தச் செய்தார்கள். இரவு 1 மணிக்கு என்னிடம் முதல்வர் கலைஞர் வந்து பந்தல் எரிப்புபற்றிப் பேசினார்.
கொள்ளி வைப்பு வேலையில் ஈடுபட்டவர்கள் ஒரு நடிகர் தலைமையிலான அரசியல் அணியினர்தான் என்றும் புகார் கூறப்பட்டது.
சதிகாரர்கள் செய்த வேலையில் மேடையின் பின் பக்கமாகச் சிலர் வந்து, பெட்ரோலைப் பயன்படுத்தி, பந்தலில் தீ வைத்துவிட்டு ஓடியிருக்கிறார்கள். உடனே அனைத்துத் தோழர்களும் தீயணைப்பு வேலையில் ஈடுபட்டார்கள். தீயணைக்கும் படையும் விரைந்து வந்தது, என்றாலும் ஒரு சில பகுதியைத்தான் மீண்டும் மீட்க முடிந்தது. முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.
தந்தை பெரியார் அவர்கள் மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக வேண்டி நேற்று நள்ளிரவே ஆற்காட்டிற்கு வந்து தங்கியிருந்தார். தீ வைப்பு பற்றி தகவல் கிடைத்ததும் அந்த நிகழ்ச்சிபற்றி மனம் தளர்ந்து விடாமல் தைரியமாக எல்லாத் தோழர்களும் இருக்க வேண்டும் என்றும், யாரும் ஆத்திரம் கொள்ள வேண்டாம் என்றும், மாநாட்டைத் திட்டமிட்டபடி நடத்த எல்லா ஏற்பாடுகளையும் உடனே மீண்டும் செய்யும்படியும் கூறினார்.

சுமார் நான்கு மணிநேரத்தில் மீண்டும் பந்தல் உருவாக்கப்பட்டது. பந்தல் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதம் ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
பந்தல் தீக்கிரையான செய்தி ஆற்காடு வட்டாரத்திலும் பிற இடங்களிலும் தெரியவரவே பொதுமக்களும், பிரமுகர்களும் ஆயிரக்கணக்கில் அங்கு வந்து குவிந்தனர்.
காலை 8 மணிக்குத் தொடங்க இருந்த ஊர்வலம் 11 மணிக்குத் தொடங்கியது. தேவாங்கர் வீதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்களும் மக்களும் கலந்து கொண்டார்கள்.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் அமர்ந்து தந்தை பெரியார் அவர்களும் சட்டசபை உறுப்பினர் ஆற்காடு வீராசாமி, நான், தோழர்கள் பலரும் அரைகிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் இருந்த ஊர்வலத்தில், அலகு குத்துதல், எலுமிச்சைப் பழம் குத்துதல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
ஆற்காடு வரலாற்றிலேயே இத்தகைய ஊர்வலம் ஒன்று இதற்கு முன் நடைபெற்றதில்லை என்று அனைவரும் ஏகோபித்த வண்ணம் கூறும்படியாக ஊர்வலம் அமைந்திருந்தது. திட்டமிட்டபடி திராவிடர் கழக மாநாடு மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநாடும் நடைபெற்றன.
மாநாட்டில் ஆற்காடு நா. வீராசாமி எம்.எல்.ஏ, பேராசிரியர் க. அன்பழகன் எம்.ஏ., அன்பில் தர்மலிங்கம், க. இராசாராம் பி.ஏ., எஸ். இராமச்சந்திரன், ப.உ. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், சி.டி, நடராசன், மகாதேவன், திருஞானசம்பந்தம், திருவாரூர் கே. தங்கராசு, திரு.ஏ.எம். தர்மலிங்கம், பெங்களுர் பேராசிரியர் நஞ்சுண்டசாமி மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இவ்வளவு சதி வேலைகளுக்கும் இடையில் இப்பெரிய மாநாடுகள் நடைபெற்று ஆற்காடு வரலாறு படைத்தது.
ஆற்காடு பகுத்தறிவாளர் மாநாட்டில் வீராசாமி எம்.எல்.ஏ, உரை ஆற்றிய போது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைமகன், முத்தமிழ் வித்தகர், அறிவின் ஒளி, அன்பின் உரு, அடக்கத்தின் இலக்கியம், பண்பின் பெட்டகம், பகுத்தறிவுப் பகலவன், பல்கலைச் செல்வர், பரந்த உள்ளம் கொண்ட பெருமகன், கொள்கைக் கோமான், எழுத்து வேந்தன், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர், இனியவைகளையே இயம்பியவர், இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்த நல்லவர், சொல் வல்லன், சிந்தனைச்சிற்பி, ஏழைப் பங்காளர், எளிமையின் மொத்தஉரு, அனைவரையும் அன்பு, பாசத்தால் பிணைத்தவர், அரசியலில் அறம் வளர்த்த அண்ணல், அரசாட்சியின் சிறந்த நிருவாகி, தமிழகத்தின் இதய வேந்தன், தென்னகத்தின் தென்றல் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கர், என்று அத்தனைக்கும் அண்ணனாக வாழ்ந்து மறைந்தும் மறையாமலிருக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களை நினைவு கூர்ந்து, என் நெஞ்சிலும் உங்கள் நெஞ்சங்களிலும் அப்பெருமகனின் நினைவை நிறுத்தி என் வரவேற்புரையைத் தொடக்குகின்றேன்.
இச்சிறப்பு மிகு கழக மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கும் இப்பணி என் வாழ்நாளில் என்றும் நினைத்து நினைத்துப் பெருமை கொள்ளும் பெருநாளாக இருக்கும் என்பதைப் பேருவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர் சமுதாயம் வெடித்துக் கிடக்கும் வயல்போல், பட்டுப்போகும் நிலையில் உள்ள மரம்போல், உலர்ந்து கொண்டு வரும் கொடிபோல், வற்றிக்கொண்டிருக்கும் குளம் போல் இருந்த சமுதாயமாய் அர்த்தமற்ற திருப்தியும், வெறுப்பான வாழ்வும், சாவை எதிர்நோக்கிய சஞ்சலபுத்தியும் கொண்ட சத்தற்ற சமுதாயமாய் எத்தனையோ சிக்கல்களுக்கிடையே முரண்பட்ட மூடநம்பிக்கைகளிடையே அறிவாளி அறிவற்றவனையும், பலமுள்ளவன் பலமற்றவனையும் சுரண்டிச் சுகபோகியாக வாழ்ந்திட வாய்ப்பும் வசதியும் தந்துகொண்டிருந்த ஏமாளிச் சமுதாயமாய்க் காட்சியளித்தது.
ஒரு சமுதாயம் முன்னேற அந்த முன்னேற்றம் நிலைபெற சமுதாய விடுதலைதான் அடிப்படை; அவ்விடுதலை இல்லாமல் அரசியல் விடுதலையும் பொருளாதார விடுதலையும் நிரந்தர முன்னேற்றத்தைத் தராது என்று கண்டார். யாருடைய பிரச்சாரத் திறனும் ஓயா உழைப்பும் உயர்தரமான அறிவாற்றலும் தமக்குப் பயன்படும் என்று அரசியல் சூதாடிகள் எண்ணி, அவரை வரவேற்று உபசரித்து, முகமன் கூறி முறுவல் காட்டினரோ அந்தப் பெரியார் அரசியல் சூதாடிகளுக்கு அல்ல, என் உழைப்புக்கு மக்களைச் சுயமரியாதைக்காரர்களாக்கவே பகுத்தறிவாளர்களாக்கவே, ஜாதிக் கொடுமைகளைத் தகர்க்கவே மத மடமைகளை அழிக்கவே பயன்படும் என்று கூறினார். 1925இல் சுயமரியாதை இயக்கம் தன்மான இயக்கம் துளிர்த்தது. சூது மதியினர் மிரண்டனர், பணம் படைத்தோர் பதைத்தனர். புராண மேதைகள், பூசுரத் தலைவர்கள், புருவங்களை நெளித்தனர். எதற்கும் அஞ்சாமல் சுயமரியாதை இயக்கத்தை பகுத்தறிவு இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தினார் பெரியார் என உரையாற்றினார்.
திட்டமிட்டபடி நேற்று மாலை வட ஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு ஆற்காடு பெரியார் திடலில் நடைபெற்றது. முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், மாநாடு வெற்றிகரமாக நிறைவெய்தியது. இன்று மாநாடும் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இனமான பேராசிரியர் அன்பழகனும், அன்பில் தர்மலிங்கமும் அன்றைய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். மாநாட்டை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார். திறந்து வைப்பது என்பதும், திறப்புரை ஆற்றுவதும் சடங்காக ஆகிவிடக்கூடாது என்பதால் நான் இந்த மாநாட்டைத் திறந்து வைக்கிறேன் என்று கூறி தமது உரையைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார் அமைச்சர்.
மாநாட்டுக்குத் தலைமை ஏற்று தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு:
நான் திராவிடர் கழக மாநாடுகள் திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கின்றவன். ஏனென்றால், கொள்கையில் நல்ல பிடிப்பும் உறுதியும் கொண்டிருப்பது திராவிடர் கழகத்தினர்தான்.
பதவிக்கு வந்த பிறகு கொள்கைகளையெல்லாம் கெட்டியாகவும் உறுதியாகவும் பற்றிக்கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான காரியமாகும்.
இந்த மாநாட்டுக்காகப் போடப்பட்ட பந்தலை இரவோடு இரவாக தீ வைத்து எரித்திருக்கிறார்கள். மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைப்பது என்பது இப்பொழுதுதான் திராவிடர் இயக்க வரலாற்றில் ஏற்பட்டிருக்கிறது என்பதில்லை. இதற்கு முன்பும்கூட எத்தனையோ முறை பந்தலுக்குத் தீயிட்டிருக்கிறார்கள். இப்படிப் பந்தலுக்குத் தீ வைப்பதினால் நம் கொள்கைகள் சாம்பலாகி விடுமா என்ன?
மாறாக, இப்படிப்பட்ட தீ வைப்புகளினால் நமக்கு நன்மையே. அறிஞர் அண்ணா அவர்கள் தீ பரவட்டும் என்று அன்று கொள்கை முழக்க மிட்டார். அதே போல இன்றும் தீ பரவட்டும்! பகுத்தறிவுத் தீ நம் நாட்டில் பரவட்டும்! அதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் நல்லதோர் தூண்டுதலாக அமையட்டும் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. இவ்வாறு அமைச்சர் அன்பில் தலைமையுரையாற்றினார்.
மாநாட்டில் பாடத்திட்டத்திலும் பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களிலும் பகுத்தறிவு புகுத்தவும், அரசு சேவையில் உள்ள மூடநம்பிக்கை அடிப்படை ஒழிக்கப்படவும் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் உருவப்படங்களைத் திறந்து வைத்து அமைச்சர்கள் ராசாராமும், இராமச்சந்திரனும் இலட்சிய விளக்கமளித்தனர்.
நான் மாநாட்டில் நீண்டதோர் உரையாற்றினேன். அதில் நான் குறிப்பிட்ட சில பகுதிகளை அப்படியே தருகிறேன்.
திராவிடர் கழகத்தின் வரலாற்றில் இரண்டாவது முறையாக, வட ஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடைபெற்றதற்காகப் போடப்பட்டிருந்த மாபெரும் பந்தலை, அரசியலில் கபட வேஷமிட்டு அலையும் கயவர்களில் சிலர், வாலியை மறைந்திருந்து கொன்று வீரனாகிவிட்ட பேடி இராமனைப் போல், நள்ளிரவில் நட்ட நடு நிசியில், மேடையின் பின்புறத்துப் பகுதியில் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டு ஓடிவிட்டனர்.
விடிந்தால் மாநாடு என்ற நிலையில் இரவில் இப்படி ஒரு பதட்டப்படக்கூடிய கொடுமையான விஷமச் செயல் என்றவுடன், நமது தோழர்கள் அப்பந்தல் எரிந்து போனதால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் நட்டத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் திட்டமிட்டபடி ஊர்வலமும் மாநாடும், எப்படிப்பட்ட இடுக்கண் வருமானாலும் இடையூறுகள் குறுக்கே நிற்பினும் இமயமே எழுந்து வந்து தடுத்தாலும் நடத்தியே தீருவது என்ற கருஞ்சட்டைப் பட்டாளத்தின் நெஞ்சுரம் சவாலுக்கு அழைக்கப்பட்டு நிமிர்ந்து நின்றது.
தூக்கிய புலியை இடறிய மடையனைப்போல் ஆகிவிட்டது எதிரிகளின் விஷமம்! ஆற்காடு மாநாட்டை நமது இயக்க வரலாற்றில் என்றென்றும் மறக்கமுடியாதபடி, கல்லில் செதுக்கிய எழுத்துகளைப்போல் ஆக்கிய பெருமை தீவைப்புச் சம்பவத்தால் ஏற்பட்டது.
நினைவுகள் நீளும்...