Home | Contact us
 

ஆகஸ்ட்16-31_2010


இரண்டு மாத தெய்வம்

சார்வாகன்

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். சிறிய கிராமம் என்றாலும் ஒரு பக்கம் சிற்றோடை சலசலத்து ஓடிக் கொண்டி ருக்கிறது. மறுபக்கம் பச்சைப் பசும் வயல்கள். பிறிதொரு பக்கத்தில் மலைச்சரிவில் அடர்ந்து ரப்பர் மரக்காடுகள். நன்றாகத் தழைத்து உதிர்ந்து வளர்ந்திருந்ததால் சூரிய வெளிச்சத்தையே மறைத்து இருட்டாக்கிய ரப்பர் மரங்கள், தென்னந்தோப்புகள். மறு பக்கம் வீடுகள். குடியிருப்புகள் மிக அழகாக மலையாள மண்ணுக்கே உரிய, எளிய, கம்பீரமான வகையில் அமைந்துள்ளன.

மின் விளக்கு இல்லை. நாட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு அதன்ஒளியே தனிக் கோபையைத் தந்துகொண்டு இருந்த இடத்தில் மக்கள் கூட்டம். ஆண்களும் பெண்களுமாக அமர்ந்து இருந்தனர். எதையோ காண்பதற்காகத் தொலை தூரத்திலிருந்து வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டவன் பிரசன்னமாகி அவர்கள் முன்னாலே ஆனந்தத் தாண்டவம் புரியும். அதனைப் பார்க்கவே ரொம்பவும் ஆவலாதியுடன் அவர்கள் குந்திக் கிடந்தனர்.

அவர்களின் ஆவலை அதிகமாக்கிடும் வகையில் ஆறுபேர் கெண்டை மேளத்தை அடிக்கத் தொடங்கினர். கெண்டை வாத்தியத்தில் புளிய மிலார்க் குச்சியால் அடித்து ஒரே சீரான ஓசையை எழுப்பும் அவர்கள் பறையர்கள். ஆம், பறை அடிக்கும் அவர்கள் தீண்டத்தகாதவர்கள். கெண்டை ஓசைகூடக் கூட, பக்கத்திலிருந்த ஓலைக் குடிசையின் உள்ளே இருந்தவர்களுக்கு அருள் வரத் தொடங்கியது. அங்கே அய்ந்தாறு பேர் மேக் அப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் கால்கள் மட்டும், குளித்துவிட்ட குதிரையின் கால்களைப் போல் மாறி மாறி மேலே தூக்குவதும் தரையில் வேகமாக அடிப்பதுமாக இருந்தன. அருள் வரத் தொடங்குகிறது.

பகவதி அம்மேவுக்கு ஒப்பனை முடிந்துவிட்டது. பெண் தெய்வம் வேடம் போட்டதும் ஆண்தான். முகம் முழுக்க மினு மினுப்பான சிவப்புப் பவுடர், தலைக்கிரீடம், கதக்களி ஆட்டக்காரர்களைப் போல வித்தியாசமான முக அலங்காரம். பக்கத்தில் ஆண் தெய்வம் ஒப்பனை செய்துகொள்ளத் தொடங்கியது. இடுப்பில் முண்டு மட்டுமே மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தது தெய்வம்

தெய்வத்தின் இடுப்பு, கைகளில் மஞ்சள் சாயம் பூசப்பட்டது. ஆரஞ்சு நிற பவுடர் கன்னங்களில் பூசப்பட்டது. கண்களைச் சுற்றிலும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டது. கன்னக் கதுப்புகளில் மாம்பழச் சின்னம் வரையப்பட்டது. தென்னை ஓலையால் சாயத்தைத் தொட்டு அதன் முகம் முழுவதும் பலவிதக் கோடுகள் வரையப்பட்டன. (தெய்வத்தின் முகம் எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? இதுதான் என்று மேக் அப் காரர் கிறுக்கித் தள்ளுவதை ஏற்றுக் கொள்ளத்தான் மலையர் கூட்டம் மந்தையாக வந்திருக்கிறதே!) இது விஷ்ணு தெய்வமாம்!

மேக் அப் முடிந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று விஷ்ணுவிடம் கொடுக்கப்பட்டது. பகவதி அம்மன் வேடம் போட்டவரிடமும் ஒரு கண்ணாடி தரப்பட்டது. தங்கள் முகங்களைக் கண்ணாடியில் அவர்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். வெளியே கெண்டை சத்தம் கூடிக் கொண்டே போகிறது. தெய்வங்களின் உடல் நடுங்கத் தொடங்குகிறது. அருள் வருவதற்கான ஆரம்பம். உடல் நடுக்கம் கூடக்கூட கடவுள் இந்தத் தெய்வங்களின் உடலுக்குள் புகுந்துகொள்கின்றன என்று அர்த்தம்.

வேடம் போட்ட தெய்வங்களின் மனதில் எந்தவித அச்ச உணர்வும் இருக்காதாம். அவர்களின் குரல்கூட மாறிவிடுகிறது. கடவுள் வந்து தெய்வங்களின் உடலில் புகுந்துகொண்டு ஆரோகணித்துவிடுகிறதாம். தெய்வங்களின் உடல்கள் கடவுள் களின் வாகனம், தெய்வம் பேசுகிறது. கடவுளே பேசுவதாகக் கணக்கு. வேஷக்காரர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுற்றிலும் இருக்கும் கூட்டம் கைகளைக் குவித்து, கும்பிட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறது. வேஷம் தரித்தவர் தன் தலையில் இருக்கும் கிரீடத்தைக் கழற்றுகிறார். தெய்வம் ஆட்டம் முடிந்தது. கடவுள் தெய்வத்தின் உடம்பைவிட்டுப் போய்விட்டது என்று அர்த்தம். பிறகு மேக் அப் கலைத்துச் சாதாரண மனிதர்களாகி விடுகின்றனர்.

மனிதன் தெய்வமாகிதெய்யம் வேடம் போட்டு ஆடுவதுஇந்தியாவின் முற்போக்கு மாநிலம் எனப் பீற்றிக் கொள்ளப்படும் கேரளாவில்தான். வேஷம் போடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். பார்ப்பனர் பூசாரியாக இருக்கும் கோயில்களில் இந்தக் கூத்து நடைபெறுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் பூசாரியாக இருக்கும் சிறிய, பெரிய கோயில்களில் மட்டுமே தெய்யம் ஆட்டம்! தெய்வம் எனும் சமக்கிருதச் சொல்லைத்தான் தெய்யம் என்று கொச்சையாகக் கூறுகிறார்கள்.

தெய்யம் வேஷம் போட்ட நம் ஆள், நம்பூதிரி, நாயர் போன்ற உயர் ஜாதிக்காரர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம், ஆட்டத்தின்போது கொட்டித் தீர்ப்பார்கள். 10 மாதம் மனதில் வைத்துப் புழுங்கிக்கொண்டு இருந்தவை எல்லாம் தெய்யம் நடக்கும் இரண்டு மாதத்தில் கொட்டித் தீர்த்திடும் வடிகால் வாய்ப்பு இது. ஒரு வழியில் பழிதீர்த்துக் கொள்ளக்கூட பகவான் வேடம் பயன்படுகிறது.

தெய்யம் ஆகும் ஒருவர் திருமணவீடுகளை அலங்கரிக்கும் தொழிலில் இருப்பவர். ஒருவர் ஓட்டல் சர்வர். ஒருவர் பேருந்து நடத்துனர். ஒருவர் கள் இறக்குபவர். ஒருவர் கிணறு வெட்டும் தொழிலாளி. ஆனால் எல்லாரும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர்.

தெய்யம் ஆடும் இருமாத காலம் முடிந்து ஒரு நாள் கிணறு வெட்டும் தொழிலாளி அரிதாஸ் என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. இடுப்பில் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு முகம் முழுக்க மண்ணும் சேறும் மண்டிக்கிடந்தது. ஆமாம், கிணறு வெட்டும் வேலையில் இருந்தபோது பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்பு அவரைப் பார்த்தது, தெய்யம் வேடத்தில் விஷ்ணுவாக ஆடிப் பேசியபோது! இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?

தாம் வேலை செய்துகொண்டிருந்த வீடு நம்பூதிரிப் பார்ப்பனருக்குச் சொந்தமானதாம். அங்கேதான் இவர் கிணறு தோண்டுகிறார். அரிதாஸ் தெய்யம் ஆடியபோது கடந்த மாதம் இந்தப் பார்ப்பனர் தெய்யத்தின் காலில் விழுந்து கும்பிட்டாராம். விஷ்ணு வேடத்தில் இருந்த அரிதாஸ் அவரை ஆசீர்வதித்தாராம்.

இன்றைக்குக் கிணறு வெட்டும் எங்களைத் திண்ணையில் வைத்து உணவு கொடுத்தாராம். அதுவும், வீட்டுக்குள்ளே பார்ப்பனர் இருந்து கொண்டு மூன்றடி நீளரக்காம்பு உள்ள அகப்பையால் எடுத்து சோறு போட்டாராம். தீட்டுப் பட்டிடக் கூடாதல்லவா? சாப்பிட்டு முடிந்ததும் இலையை இவர்களே எடுத்துப் போட்டுவிட்டுக் கை அலம்பிக்கொள்ள தனி வாளியில் தண்ணீர் வைத்தாராம்.

வாளியில் இருந்த தனி தண்ணீரே அரிதாஸ் வெட்டிய கிணற்றிலிருந்து மொண்டு எடுத்தது தான் என்பதுதான் வேடிக்கை!

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தெய்யம் தெய்வம் கடவுள் காலில் விழுவது கும்பிட்டுப் பணிவது! மீதிப் பத்து மாதங்களும் பறையன் தான்! தீண்டத் தகாதவன் தான்! தாழ்த்தப்பட்டவன்தான்!

ஆனால், இரண்டு மாதங்களில் தான் அடையும் மகிழ்ச்சி பெருமை மரியாதை போதும் என்கிறார் அரிதாஸ்! 10 மாதப்பறை நிலை அவருக்கு அவமானமாகத் தெரிய வில்லையாம்!

தாழ் நிலையை கீழ் நிலையை பெரும்பான்மைச் சமூகம் சகித்துக் கொண்டிருப்பதோடு அல்லாமல் அதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று திருப்திப்பட்டுக் கொள்ளச் செய்ததோடு நிறுத்தாமல் பெருமைப்பட்டுக் கொள்ளவும் தெய்யம் அய்யப்பசாமி என்றெல்லாம் ஆக்கி அடிமைப்படுத்துவதிலேதான் ஆரியம் இன்றளவும் வென்றுகொண்டு இருக்கிறது.

(NINE LIVES (ஒன்பது உயிர்கள்) எனும் தலைப்பில் வில்லியம்டேல்ரிம்பிள் எனும் வெளிநாட்டவர் எழுதிய நூலில் கிடைக்கும் செய்தி இது).


  Bookmark and Share