நூல் அறிமுகம்
நூல் : திருக்குறள்: பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா
ஆசிரியர்: முனைவர் க. அன்பழகன்
வெளியீடு: கே.ஜி. பப்ளிகேஷன்ஸ்
எண். 31, பூக்குளம் புதுநகர், கரந்தை, தஞ்சாவூர் 613 002. பக்கங்கள்: 81 விலை: ரூ. 50
அண்ணாவின் மொழிக்கொள்கையில் தொடங்கி கதைப்பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், கடிதங்கள், அரசியல் நெறிமுறைகள் என அஷ்டாவதன முறையில் அண்ணாவின் பன்முகத்திறனை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
இருமொழிக் கொள்கையை ஆதரித்து அதனைச் சரியாக நியாயப்படுத்தி மொழித் திட்டத்தில் புகுத்தியதோடு, தனது பதவிப் பிரமாணத்தை முதன் முதலில் தமிழில் எடுத்த பெருமைக்குரியவர். கண்ணுக்கு மையிடுவது போல, பிற மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மை அதிகமானால் கண்ணை எப்படி அழித்து விடுகிறதோ அதுபோல, பிற மொழிகள் அதிகம் கலப்பதும் நம் மொழிக்கு ஆபத்தான நிலைமை உண்டாக்கும் என்னும் வரிகளிலிருந்து அறிஞர் அண்ணா அவர்கள் தனித்தமிழைப் போற்றிய பாங்கினை அறிந்துகொள்ளலாம்.
எதையும் ஆராய்ந்து கைக்கொள்தல் வேண்டும் என்னும் பெரியாரின் கொள்கைப் பிரச்சாரமாக இன்றைய சாமியார்களின் உண்மையான நிலையினை, தேம்புகிறேன் கதைப்பாடலில் அன்றே விளக்கியுள்ளார். மேலும், அவரது கதைப்பாடல்களில் தமிழ், பகுத்தறிவுக் கொள்கை, மூடநம்பிக்கையைப் போக்கி, தமிழ் மக்களைக் காத்தல் என்னும் பொருண்மையே மேலோங்கி நிற்கிறது. உலகில் நடைபெற்ற, நடைபெறும் பிரச்சினைகளை எல்லாம் எடுத்து விளக்கி, பிரச்சினைகளுக்கான தீர்வினையும் அறிஞர் அண்ணா விளக்கியுள்ள விதமும் அருமையாகக் காட்டப்பட்டுள்ளது.
அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய முன்னுரையைக் கூறி, அவரது சொல்லாற்றலுக்கு சொற்சிலம்பத்துக்கு ஆசிரியர் விளக்கியிருக்கும் விளக்கவுரை, படிப்போரைச் சிந்திக்கவைப்பது. கட்டுரையின் முடிவுரையில், கருத்துகளைத் தொகுத்துக் கூறியதோடு ஆய்வுக்கு வித்தாகும் கருத்துகளை விளக்கி ஆய்வாளர்களைச் சிந்திக்கவும் வைத்துள்ளார் நூலாசிரியர்.
அறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகளை இதுவரையிலும் படிக்காதவர்களையும் படிக்கத் தூண்டும் வகையில் நூலினை அமைத்து, பன்முகச் சிந்தனை முத்துகளைக் கோர்த்துக் கொடுத்த மாலையே பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா.
நூல் : செம்மொழிச் சிற்பிகள்
எழுத்து அஜயன்பாலா வெளியீடு: ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ், 501, அரிஹந்த் டவர்ஸ், கோயம்பேடு, சென்னை 107.
பக்கங்கள்: 248 விலை: ரூ. 1200
தொலைபேசி: 42178992.
தமிழ் மொழிக்காக செம்மொழித் தகுதிக்காக தம் வாழ்வை அர்ப்பணித்து உலக அரங்கில் உயிர்வாழும் அறிஞர்களை நினைவுகூரும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது!
தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அமைந்து, தமிழ் மொழியின் இனிமையினை சிறப்பினை தனித்தன்மையினை உலகிலுள்ளோர் அனைவரையும் திரும்பிப் பார்த்து வியக்க வைத்த பெருமைக்குரியதாகிறது.
பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், இராபர்ட் கால்டுவெல், பா.வே. மாணிக்க நாயக்கர், விபுலானந்த அடிகள் என்று தெரிந்த தெரியாத தமிழ் அறிஞர்களின் பெயர்களை அவர்களின் அரும்பெரும் பணிகளை அறிய வைத்து, தமிழின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களின் மீதும் தமிழின் மீதும் தன்னிகரில்லா காதல் கொள்ள வைத்த காலப்பெட்டகம்!
நூலைப் பார்க்கும் போதே படிக்க வேண்டும் என்ற அவாவினை ஏற்படுத்தும் நூலின் அமைப்பு. உள்ளே படிக்க ஆரம்பித்ததும் தடையின்றிப் படிக்கத் தூண்டும் இனிய எளிய நடையில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கும் நுட்பம் நுண்மாண்நுழைபுலம்!
தமிழில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத தமிழ் ஆர்வலர்களைப் பரவசப்பட வைத்த காலக் கண்ணாடி!
நூலைப் படித்து முடித்ததும் தமிழரது வாழ்க்கைக்குள் தமிழ்க் கடலுக்குள் பயணித்து வெளிவந்த களிபேருவகையினை எம்மொழியாளரையும் அடையச் செய்திருப்பதே செம்மொழிச் சிற்பிகள்!
நூல் : கலைஞர் தந்த செம்மொழி
பதிப்பாசிரியர்: முனைவர் ந. வேலுசாமி
வெளியீடு: ரம்யா பதிப்பகம்
எண் 15/4, ராமநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை17. தொலைபேசி: 2434 0599.
பக்கங்கள்: 176 விலை: 100/ கலைஞரின் அண்மைக்காலப் படைப்புகள் என்னும் பொருண்மையில் 9 அறிஞர்களும், செம்மொழித் தகுதிபெறக் கலைஞர் மேற்கொண்ட முயற்சிகள் என்னும் பொருண்மையில் 9 அறிஞர்களும் கட்டுரைகளுக்குப் பட்டை தீட்டிய நிலையில் தொகுத்துக் கொடுத்துள்ளார் பதிப்பாசிரியர்.
கலைஞரின் எழுத்தில் மலர்ந்த கட்டுரைகளையும், கற்பனை நலமுடன் வடித்த கவிதைகளையும், தீட்டிய புதினங்களையும், வரைந்த நாடகங்களையும் பிறவற்றையும் ஒரு சேரச் சேர்த்துக் காணின், கலைஞர் ஒரு மாபெரும் கலைக்களஞ்சியமாக பல்வகை அரும்பொருள்களும் பொதிந்து கிடக்கும் ஓர் ஆழ்கடலாகத் திகழ்கிறார்.
திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருப்பினும், தனித்து நின்று உரசிப் பார்த்த நிலையில், படிப்போரைச் சிந்திக்க வைக்கக் கூடியதல்லவா கலைஞரின் உரை!
அது பதவுரையா? இல்லை! தோலுரித்த பழம் போன்ற பொழிப்புரையா? இல்லை! பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிய சுளைகளைப் போன்ற சுருக்கமான கருத்துரையா? இல்லை! கனியைப் பிழிந்திட்ட சாறு என்பார்களே அத்தகைய கனியுரையே கலைஞர் உரை! ஆம் குறளின் பிழிவே கலைஞர் உரை என்பதே உண்மை.... அதுதான் எளிமை! அதுவே இனிமை! அதுதான் தெளிவு! அதுதான் தேவை! என்று கலைஞர் உரையின் தனித்தன்மையினை புலவர் அரிமதி தென்னகன் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
மேலும், வள்ளுவர் வழியில் அரசு நடத்தி, சாதனைச் சரித்திரம் படைத்துவரும் கலைஞர் அரசின் செயல்பாடுகளைக் குறள் கருத்துகளோடு ஒப்பிட்டுக்காட்டியுள்ள விதம் அருமை! செம்மொழி மாநாடு பொலிவும் செறிவும், நிறைவும் பெற்ற நிலையில் தமிழ் ஆர்வலர்களின் கருத்துக்குக் கிடைத்த கனியாய் கட்டுரைக் கலம்பகமாய் இளைஞர்களையும் ஆட்கொண்டு இன்புறச் செய்யும் வல்லமை படைத்தது.
கலைஞரின் தமிழ் உள்ளத்தினையும், தமிழ் உணர்வினையும், தமிழ்ப் பற்றினையும், தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த விதத்தினையும் கடித விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி, சுடர்விட்டு ஒளிர்வதே கலைஞர் தந்த செம்மொழி.