Home | Contact us
 

ஆகஸ்ட்16-31_2010


குவியல்

முதலாளித்துவத்தின் மூடநம்பிக்கை மூலதனம்

கடவுளும்,மதமும் உலகெங்கிலும் வணிகப் பொருளாவே இருந்துவந்துள்ளன. கோவில்கள், மாதா ஆலயங்கள், தர்காக்கள் வசூல் கேந்திரங்கள்தான் என்பது உலகம் அறிந்த செய்தி. கடவுள், மத நம்பிக்கைகளின் தொங்கு சதைகளான ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம் உள்ளிட்டவையும் நல்ல லாபம் கொழிக்கும் வியாபாரக் கருவிகள்தான். சீசனுக்குத் தகுந்தார்ப்போல தன்னை புதுப்பித்துக் கொள்ளும் இவை,வளர்ந்துவரும் அறிவியலையும் பயன்படுத்திக்கொள்ளும்.கணினி வந்தபோது அதனை முதலில் பயன்படுத்தி வியாபாரம் செய்ததே கம்ப்யூட்டர் ஜாதகக் காரர்கள்தான்.

இப்போது செல்பேசி, இணையம், தொலைக்காட்சிகள் மலிந்த நிலையில் இந்த மூடநம்பிக்கை வணிகர்கள் பல மடங்கு விரைவாக வணிகத்தில் இறங்கிவிட்டனர். அண்மையில் நடந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் போது ஆக்டோபஸ் என்னும் உயிரினத்தை வைத்து ஜோதிடவணிகம் செய்தார்கள். ஆனால், அது முற்றிலும் ஏமாற்றுவித்தை என்பதை உயிரியல் நிபுணர்கள் எடுத்துக்கூறினர். உணவுப் பொருளாக உள்ள இந்த உயிரினத்தைப் பணம் பன்னும் கருவியாக்கியுள்ளனர்.

செய்திகளின் மூலம் பால் என்னும் ஆக்டோபசின் புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கும் நிலையில் இப்போது அது வேறொரு அவதாரம் எடுத்திருக்கிறதாம். அதை விளம்பரங்களில் நடிக்க வைக்க ஜெர்மனியின் முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனவாம். தொட்டிக்குள் பல சிப்பிகள் இருக்க ஆக்டோபஸ் பால் உள்ளே நுழைகிறது. எதை பால் தேர்வு செய்யும்? அதுபோல நீங்கள் எதையும் எங்களிடம் தேர்ந்தெடுக்கலாம் என்று போகிறது ஒரு சூப்பர் மார்க்கெட் விளம்பரம்.

அதை தொடர்ந்து அருங்காட்சியகத்துடன் ஒப்பந்தம் செய்ய 160 நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பணம் சம்பாதிக்க எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற முதலாளித்துவ சிந்தனை,மக்களின் மூட நம்பிக்கையையும் மூலதனமாக்கி பணம் குவிக்கிறது.மூடநம்பிக்கையிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடாமல் பார்த்துக்கொண்டு, ஏதாவது புதுப்புது வடிவத்தில் மூடத்தனத்தை ஊடகங்களில் பரப்பிவருகிறது.ஆறு மாதங்களில் இருந்து அதிகபட்சமாக (சில வகை ஆக்டோபஸ்கள்) அய்ந்து ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழுபவை இந்த ஆக்டோபஸ்கள். எனவே, இன்னும் சில ஆண்டுகள் இந்த ஆக்டோபஸ் ஜோதிட மூடநம்பிக்கை நீடிக்கலாம்.அதன் பின்னர் இன்னொரு உயிரினத்தை மூடநம்பிக்கை வியாபாரிகள் பிடித்துக் கொண்டுவருவார்கள்.


செல்பேசி சில எச்சரிக்கைகள்

செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது என்று செய்திகள் சொல்லுகின்றன. மனிதத் தொடர்பு கள் முதன்மையாகிவிட்ட இன்றைய உலகில் செல்பேசி கிடைத்தற்கரிய பேறுதான்.அஞ்சல் முகவரி கேட்கும் நிலை மாறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் உங்கள் செல்பேசி எண் என்ன? என்றுதான் கேட்கிறார்கள்.

தந்திகள் கொடுப்பதெல்லாம் அந்தக்காலம் என்றாகிவிட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு தந்தி என்றால் என்னவென்றே தெரியாது.செல் குறுஞ்செய்தி (sms) வழியாகவே தகவல் பறிமாறிக்கொள்ளப்படுகிறது. இப்போது பெயரோடு செல் எண்ணைக் குறித்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் பெயரைக் கேட்பதை விட்டுவிட்டு செல் எண்ணை மட்டுமே கேட்கும் நிலைகூட வரலாம்.

கணினிப் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் மின்னஞ்சல் முகவரியும் செல்பேசி எண்ணோடு சேர்ந்துகொள்ளலாம். இவை தவிர்க்க முடியாதவை ஆகிவிடும்.இச்சூழலில் செல்பேசியைப் பயன்படுத்துவதில் சில ஒழுங்குகளைக் கடைபிடித்தால் நல்லது என்பதை சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதிகமாக செல்பேசியில் பேசுவோருக்கு தலைவலியும்,அதனைத் தொடர்ந்து புற்று நோயும் வர வாய்ப்பு உள்ளது என்ற செய்தி வெளியானது. இதனைத் தவிர்க்க சிறு ஒலிபெருக்கி (Head Phone) யைப் பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

புளூ டூத் எனப்படும் ஒலி பெருக்கிகூட அவ்வளவு நல்லதல்ல என்கிறார்கள் அவர்கள். ஏனென்றால், அவையும் கதிர்களைப் பாய்ச்சும் தன்மையுடையவைதான். இது ஒருபுறம் இருக்க, செல்பேசியில் உள்ள மற்ற வசதிகளைப் பயன்படுத்துவதில் நேரத்தைத் தொலைப்பது, குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பது போன்றவற்றால் எழும் சிக்கல்கள், தகவல் பதிவுகளைச் செல்பேசியில் சேமிப்பதால் நினைவாற்றல் குறையும் அபாயம் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் மன நல மற்றும் உளவியல் வல்லுனர்கள்.

அண்மையில் ஒரு செய்தி வெளியானது. செல்பேசியைச் சார்ஜ் செய்வதைத் திட்டமிட்டுச் செய்யாததால் ஓர் உயிர் இழப்பே ஏற்பட்டுவிட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள புதுப்பேட்டையில் வசித்து வந்த சரித்ய போரா (வயது 21) என்ற அசாம் மாநில தொழிலாளி செல்பேசியை சார்ஜரில் போட்ட படியே அதனை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது செல்பேசியில் இருந்து வெளியேறிய தீப்பொறி அவரது வலது கன்னம் மற்றும் காதுகளில் பட்டு கருகியது. மேலும் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

அறிவியல் விளைவுகள் அத்தனையும் மக்களின் வசதிக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்கமுடியும்.


இந்தி என்ன செய்திருக்கும்?

வழக்கமாக திராவிட இயக்கத்திற்கு எதிரான சில குற்றச் சாட்டுகளை பார்ப்பனீயம் சொல்லிவந்திருக்கிறது. அதில், இந்திபடித்தால் வேலை கிடைக்கும், ஆனால் இவர்கள் அதனைத் தடுத்துவிட்டார்கள் என்பதும் ஒன்று. ஏதோ இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கெல்லாம் வேலை கிடைத்துவிட்டது போலவும், வேலை காலி உள்ளது என்று வடபுல நிறுவனங்களில் போர்டுகள் தொங்கிக் கொண்டு இருப்பது போலவும் பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதுவார்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் நடுவில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிக்கொள்கையே எங்கள் கொள்கை என உறுதியாக இருந்ததால் இன்று கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழர்கள் பெருமளவு பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று முன்னேறிவருகின்றனர். தமிழ்,ஆங்கிலத்தோடு இந்திச் சுமையையும் ஏற்றி இருந்தால் இந்த அளவுக்கான வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது. ஏனென்றால், இந்தி வேலை வாய்ப்புக்கான மொழி அல்ல என்பதை திராவிட இயக்கம் நன்கு அறிந்திருந்ததனாலும், அது ஆரியப் பண்பாட்டைத் தமிழர்கள் மீது திணிக்கும் மொழி என்பதனாலும்தான் பெரியார் இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்தார்.

திராவிட இயக்கத்தின் இந்த தொலைநோக்குப் பார்வையை வழிமொழிவதுபோல அண்மையில் பேசியிருக்கிறார் புதுவை மாநில ஆளுநர் இக்பால் சிங். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திப் பிரச்சார சபா 73 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஜூலை 25 அன்று அவர் பேசும் போது, மொழி என்பது எண்ணங்கள் மற்றும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள கூடிய சாதனம் மட்டுமல்லாது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பரப்பக்கூடிய கருவி, என்று கூறியுள்ளார்.

அன்றைய மத்திய ஆட்சி இந்தியைப் பரப்பியதன் நோக்கமே ஆரியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து நமது கலாச்சாரத்தை அழிப்பதற்குத்தான். இதனை சரியாகப் புரிந்துகொண்டதால் நாம் தப்பினோம். திராவிடப் பண்பாடும் ஆரியப்பண்பாடும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. நாம் இந்தியை எதிர்க்காமல் இருந்திருந்தால் நம் பண்பாட்டையும் இழந்து இன்றைய நல்வாழ்வையும் இழந்திருப்போம். ஆங்கிலம் அறிவுமொழியாக இருப்பதாலும்,புதிய தொழில் நுட்பங்கள் ஆங்கிலத்திலேயே உருவாகின்றன என்பதால் அதனைப்படித்தால்தான் தமிழர்கள் தங்களை உலகத்தில் உயர்த்திக்கொள்ளமுடியும் என்று மிகச் சரியாகக் கணித்தார் தந்தை பெரியார்.

பெரியாரின் கணிப்பும் திராவிட இயக்கத்தின் ஆட்சிமொழிக் கொள்கையும் நூற்றுக்கு நூறு சரி என்பதை வடநாட்டினர் வியந்து பாராட்டுகின்றனர். தாங்கள் இந்தியை மட்டுமே நம்பியிருந்து ஏமாறியதை எண்ணி மராட்டியர்கள் வருந்துகின்றனர். இந்த வருத்தத்தை மராட்டிய மண்ணின்மைந்தர் கொள்கையை வலியுறுத்தும் பால் தாக்கரேயும், நவநிர்மான் கட்சியின் ராஜ் தாக்கரேயும் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றனர்.


  Bookmark and Share