ஈழத்தமிழர் தமிழக மீனவர் பிரச்சினைகள்! தமிழின மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவது கொல்லப்படுவது நிர்வாணப்படுத்திச் சிறுமைப்படுத்தப்படுவது அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவது என்பவையெல்லாம் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிவிட்டது. கடந்த 6 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில்கூட இந்தக் கொடுமைக்கு முடிவு காணப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 7 ஆம் தேதி 12 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறையடுத்த வெல்லப்பள்ளம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செல்லப்பன் உள்பட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 கல் தொலைவில் இரவு 10 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த சிங்களவர்கள் திடீரென வந்து தாக்கியிருக்கின்றனர். மீன்களையெல்லாம் கடலில் கொட்டியிருக்கின்றனர். நிர்வாணப்படுத்திச் சித்திரவதை செய்துள்ளனர். கடுமையான தாக்குதலால் தமிழின மீனவர் செல்லப்பன் படுகொலையும் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை தமிழின மீனவர்கள் இப்படி எத்தனைப் பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதற்கு கணக்கும், அளவும்கூட கிடையாது அந்த அளவுக்கு மூர்க்கத்தனமான தொடர் கதையாகிவிட்டது. இலங்கைக் கடற்படையினரால் தமிழின மீனவர்கள் தாக்கப்பட்டதற்கும், ஒருவர் கொல்லப்பட்டதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதமும் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறையும் சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது, மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கு விடுப்பதும், ஆனால், அதற்குப் பிறகு சில நாள்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலேகூட. தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு, தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால்கூட அவர்களைத் தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயலில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மாறாக, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதோடு, இந்த நிகழ்ச்சிபற்றி உண்மை விவரமும், தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் உருக்கமாகவும், சுருக்கென்று தைக்கும் வகையிலும் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர். ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழக மீனவர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இந்திய அரசு நடந்துகொள்ளும் அலட்சிய மனப்பான்மை, பொறுப்பற்ற போக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், மனிதநேயர்கள் மத்தியிலும் பெரும் வெறுப்பு கடும் அதிருப்திப் புயலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அய்யமில்லை. இந்தியா இந்தியத் தேசியம் என்றாலே தமிழர்களுக்கு விரோதமானது என்ற எண்ணம்தான் மேலோங்கி வருகிறது; இதற்கான பொறுப்பை மத்திய அரசுதான் ஏற்கவேண்டும். கி.வீரமணி, |
Warning: include(archives/2010.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/viduthalaiin/unmaionline.com/2010/july/16-31/page01.php on line 117 Warning: include() [function.include]: Failed opening 'archives/2010.php' for inclusion (include_path='.:/usr/local/lib/php:/usr/local/php5/lib/pear') in /home/viduthalaiin/unmaionline.com/2010/july/16-31/page01.php on line 117 |
|||