தலையங்கம்: கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு!

தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிக் கொள்கை தமிழ், ‘‘இங்கிலீஷ்’’ என்ற இருமொழிக் கொள்கை; இது கடந்த 50 ஆண்டுகளுக்குமேல் நடைமுறையில் உள்ள சட்டப்படியான நிலவரமாகும். ஏற்கெனவே ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடரும் என்ற உறுதிமொழியும் மத்திய ஆட்சி மொழிச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக - பிரதமர் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கான களமாக தமிழ்நாட்டை ஆக்கி வரும் முயற்சிகள் தொடர் முயற்சிகளாக மேற்பட்டுவருவதும், அந்தத் திணிப்பின் காரணமாக கடும் எதிர்ப்பையும், வெறுப்பையும் மத்திய அரசின்மீது பெருக்கி வருகிறது. இதில் அரசியல் கண்ணோட்டம் இல்லை; மாறாக மொழி உணர்வும், எந்த மொழி திணிக்கப்பட்டாலும் எதிர்க்கும் மக்களின் மனப்பாங்கும் இயல்பானவை மட்டுமல்ல; பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் உணர்ச்சிபூர்வமான ஒன்று. தமிழ்நாட்டு ஹிந்தி எதிர்ப்புக்கு 80 ஆண்டுகால வரலாறு உண்டு தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்பது 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வர லாறு என்பதை ஏனோ டில்லி ஆட்சியாளர் மறந்து, இந்த நெருப்புடன் விளையாடும் விபரீத விளையாட்டை ஆடி, தமிழ் மக்களின் உணர்வுக்கு அறைகூவல் விடுகிறார்கள் - இது, தேவையற்ற ஒன்று. அரசமைப்புச் சட்டம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ளதை ஏனோ ‘‘வசதியாக’’ மறந்து விடுகிறார்கள்! ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவுச் சீட்டை ஹிந்தியில் அச்சடித்து, அதை குறுஞ்செய்தியாக தமிழ்நாட்டுத் தொடர் வண்டிப் பயணிகளுக்கு அனுப்புவதும், நாட்டுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கி ஒன்றில், கங்கைகொண்ட சோழபுரம் கிளையில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் கடன் கேட்டு மனு போட்டதை விசாரிக்கையில், அந்த வங்கியின் மேலாளர் -  வடபுலத்தவர் -- ‘‘ஹிந்தியில் பேசினால் மட்டுமே தன்னால் பதில் கூற முடியும்‘’ என்று ஆணவமாகப் பதில் கூறியதும், அதன் விளைவாக பரபரப்பான செய்திக்குப் பிறகு, அவர் திருச்சிக்கு மாற்றப்பட்டதும் வந்த செய்தி அல்லவா! (திருச்சிக்குப் போனால், வணிக முறையில் தமிழ் அவருக்குத் தெரிந்துவிடுமா?) எங்கே பணி புரிகிறாரோ அந்த மண்ணின் மொழி தெரிய வேண்டாமா? அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள்கூட கட்டாயம் அந் தந்த மாநில மொழியைக் கற்கவேண்டும்; தேர்ச்சி பெறவேண்டும்; பேச, எழுத வேண்டும் என்ற சட்டம் அமலில் இருக்கும்போது, இப்படிப்பட்ட ஹிந்தி அதிகாரிகள் இங்கே இவ்வளவு ஆணவத்துடன் பதில் கூறுவது எந்தப் பின்னணியில்? அண்ணாவின் இருமொழிக் கொள்கை என்னாயிற்று? தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசு, அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் ஆட்சி மொழிக் கொள்கை என்று கூறும் நிலையில், அதுவே ஹிந்தியில் வினா - விடையை நடத்த அனுமதிப்பதா? மருத்துவத் துறையில் ஹிந்தி இணைப்பை மத்திய அரசு அனுப்பினால், அதை அப்படியே ஏற்பதா? தமிழ்நாட்டின் கொள்கைப்படி மறு இணைப்பு தமிழில் இருக்கவேண்டாமா? மாநில அரசு - இரட்டை வேடம் போடுவது -- வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக் கியானம் கூறுவது, அதன்மீது மக்களுக்குள்ள எதிர்ப்பைத்தான் நாளும் அதிகரிக்கவே செய்யும். இந்த உணர்ச்சிபூர்வ பிரச்சினையில் 80 ஆண்டுகால வரலாற்றைக் கூட மறந்துவிட்டு, ஏனோதானோ என்று ‘‘பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்’’ என்ற விலாங்கு அரசியல், பாசாங்கு அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, இரயில்வே யிலும் மற்றும் பல முயற்சிகளும் தேவையற்ற கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்; அந்த மத்திய அரசு, தமிழக அரசின் மாநிலக் கொள்கையை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று துணிவுடன் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டாமா? வன்மையாகக் கண்டிக்கவேண்டாமா? மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது என்றால், குட்டக்குட்டக் குனிந்து கொண்டே இருப்பதுதானா? தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன? ‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; அதேநேரத் தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம்‘’ என்று கலைஞர் கூறியதை வலியுறுத்திடும் அளவுக்குத் துணிவு வராவிட்டால்கூட பரவாயில்லை; எல்லாவற்றிற்கும் சலாம் போடுவது, இந்திக்கு நடை பாவாடை விரிப்பது - தமிழ்நாட்டின் அரசுக்கு நல்லதல்ல; மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு அரசும் எதிர்த்து நிற்கவேண்டிய தருணம் இது - - கடமை வழுவாதீர்! வரலாற்றுப் பழியைச் சுமக்காதீர்!! - கி.வீரமணி ஆசிரியர்செய்திகளை பகிர்ந்து கொள்ள

கு.வெ.கி.ஆசான் - மறைந்த நாள் 22.10.2010

கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, தம் பெயரையே ஆசான் என்று மாற்றிக் கொண்டவர். அவர் எழுதிய நூல்கள் மொழி உரிமை, ஜாதி உருவாக்கம், பாவேந்தர், பெரியார், குமரன் ஆசான், ஈழத் தமிழர் உரிமைப் போர்; சாகுமகராஜ், மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், Gora’s Positive Etheism and firewill, Thiruvalluvar on Learning and Wisdom உள்ளிட்ட நூல்களை உருவாக்கிய சிற்பி! உலகப் புகழ் பெற்ற அறிவியல் - நாத்திக சிந்தனையாளரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்டு உலகையே உலுக்கி எடுத்த நூலான “The God Delusion” என்னும் ஆங்கில நூலை “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ எனும் தலைப்பில் மிக அரும்பாடுபட்டு, அழகுத் தமிழில் அவர் மொழியாக்கம் செய்தது _- அவருக்குள் அடங்கிக் கிடந்த பேராற்றல் செல்வத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது. காலம் சொல்லிக் கொண்டேயிருக்கும்; நாத்திக உலகம் இந்த மானுட அருந்தொண்டுக்காக ஒரு முக்கியமான இடத்தை அளித்துக்கொண்டும் இருக்கும். அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் அறக்கட்டளை சார்பில் அவர் ஆற்றிய உரை ‘மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்!’ எனும் ஆய்வு நூலாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரைக்காக “பெரியார் பேருரையாளர்’’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. நமது Think-Tank ஆசான் என்று நமது ஆசிரியர் குறிப்பிடுவார்கள். பத்து ஆண்டு காலமாக பெரியார் திடலிலேயே தங்கி, இயக்க ஏடுகளுக்குக் கட்டுரைகளை வழங்கி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மாணிக்கத் தூணாக ஒளி வீசினார். ‘விடுதலை’ குழுமத்தின் மூத்த சகோதரராக விளங்கி வழிகாட்டிய அந்த நந்தா விளக்கு, சற்றும் எதிர்பாராத விதமாக திடீர் என்று தன் மூச்சைத் துறந்துவிட்டது இதே நாளில் (22.10.2010) அதுவும் பெரியார் திடலிலேயே! வாழ்ந்தால் அவர் போல் வாழவேண்டும் என்று ஆசைப் படுவோம்!செய்திகளை பகிர்ந்து கொள்ள

பெரியார் பேசுகிறார்: பெண்கள் அடிமை நீங்குமா?

இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களை இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் 'கல்லென்றாலும் கணவன்; புல்லென்றாலும் புருஷன்' என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நாகரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும், அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும், இதனால் இந்திய நாகரிகமே மூழ்கிவிடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராயமுடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஆண்கள் இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல் தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது. சென்றால் அவர்களுடைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால், பெண்கள் இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத் தக்கதேயாகும். அன்றியும், அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கவும் வேண்டும். சில தினங்களுக்கு முன் லண்டனில், விசியம் கிளப்பில், பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல் என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார். அப்பொழுது அவர், "பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்மந்தமும், பற்றுதலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார்களானால் இந்திய சமுக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல், உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும்''. என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாகல் அவர்கள் நாகரிகம் பெற்ற மேல் நாட்டுப் பெண் மணியாயிருந்தும் இவ்வாறு பேசியிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஆனால், இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப்பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவு கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி, உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே, இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர, வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி கிறிஸ்துவ மதக்கல்வி உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம் என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய வைதிகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால், இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம். பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது என்ற அபிப்பிராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள் அடிமைகளாகத்தான் - அதாவது ஆண்களுடைய உதவியை நம்பித்தான் வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பிய கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும். அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். மதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமைப் புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமைப் புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கை களையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்கவழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமைப் புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாப்பிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது. பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்? ஆனால், தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்விதான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதேயொழிய, வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்விமுறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமைப் புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம். - 'குடிஅரசு'  தலையங்கம், 17.07.1932செய்திகளை பகிர்ந்து கொள்ள

பெண்ணால் முடியும் : உலகின் இளம் பெண் பிரதமர்

தந்தை பெரியாரின் பெண்ணிய பொன்மொழிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவது,  பெண்களுக்கு படிப்பு, சொத்துரிமை ஆகியவை இருந்துவிட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்துவிடும். நம் முன்னேற்ற வண்டிக்குப் பெண்கள் முட்டுக்கட்டை என்பது நம் சமுதாயத்துக்கே அவமானமாகும். ஆதலால், சீர்திருத்தம் செய்ய வேண்டியவர்கள், பெண்கள் விடுதலையும், அறிவும், படிப்பும் பெறும்படி பார்க்க வேண்டும்.  ( 29.9.1940, குடிஅரசு பக்கம் 15) தற்போது மிக உயர்ந்த அதிகாரம் என்னும் பொறுப்பில் உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் இளம்பெண் பிரதமர் என்கிற சிறப்பைப் பெற்ற சன்னாமரின்.  முப்பத்து நான்காம் வயதிலே இந்த உயரிய பொறுப்புக்கு மக்களால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் எதிர்நீச்சல் போட்டு வென்றதைப் பார்க்கையில் நமக்குள் புதிய நம்பிக்கை பிறக்கிறது. அவரின் குடும்பச் சூழலே அவர் மிகவும் பக்குவப்படக் காரணமானது. இளம் வயதில்  தந்தையை இழந்த அவர், தாயாரால் வளர்க்கப்பட்டார். அவரது குடும்ப பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள தன்னுடைய பதினைந்தாம் வயதில் பேக்கரி கடையில் பணியாற்றினார். பள்ளிக் காலத்தில் படிப்பைத் தொடர பருவ இதழ்களை விநியோகம் செய்யும் பணியையும் செய்துள்ளார். அவருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தவர், அவருடைய தாயார்.அவர் விரும்பியதைச் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை தன் மகளுக்குத் தந்திருக்கிறார். குடும்பத்திலேயே   பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் ஆளும் சன்னாமரின் தான். தன்னுடைய இருபதாவது வயதில் அரசியலில் பிரவேசித்தார். ஹெல்சின்கியின் வடபகுதியில் இருந்த டாம்பீயர் என்னும் ஊரில் உள்ளூர் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தொடர்ந்து போட்டியிட்டு தன்னுடைய இருபத்தியேழாம் வயதில் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015இல் பின்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து மக்களின் ஆதரவு கொடுக்கப்பட்டு, அனைத்து கட்சிகளாலும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு பெரும் வெற்றியும் பெற்றார். இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த அவர் நாட்டை வளம் பெற்ற நாடாக மாற்ற இலக்கு அமைத்தார். எதிரிகளின்  விமர்சனத்தை அவர் பொருட்படுத்தவில்லை. “என் வயதைப் பற்றியோ, பாலினத்தைப் பற்றியோ எனக்கு என்றும் சிந்தை கிடையாது. அரசியலில் நான் வெற்றி பெறுவதற்குக் காரணம் மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தான்” என உறுதிமிகக் கூறுகிறார். பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக இளம் வயதில் பெரிய பொறுப்பை ஏற்ற நிலையில், “நான் சமுதாயத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை நான் வளர்ந்த சூழல் தீர்மானித்தது. எதிர்காலம் நோக்கியுள்ள பெரிய பிரச்சனைகளுக்கு மூத்த தலைமுறையினர் தீர்வு காணாததே நான் இப்போது அரசியல் களத்தில் இருப்பதற்குக் காரணம்“ என்கிறார். அனைத்து மகளிருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய அய்ரோப்பாவின் முதல்நாடு என்ற பெருமையுடையது பின்லாந்து. 1907 இல் உலகில் முதன் முதலாகப் பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்லாந்தில் தற்போது முக்கியமான பொறுப்புகளில் அதிகமான இடங்களில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகம் இன்று எதிர் கொண்டுள்ள கரோனா தொற்றுப் பரவலையும் எதிர்கொண்டு மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருவதாக உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

முகப்புக் கட்டுரை: மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட தமிழ்-பண்பாடு புறக்கணிப்பு!

தமிழ் உலகின் உயர்மொழி, செம்மொழி. உலகின் பல மொழிகளின் மூலமொழி என்று நாம் தமிழர்கள் என்பதால் தூக்கி நிறுத்திக் கூறவில்லை. உண்மை அது என்பதால்தான் கூறுகிறோம். உலகின் மொழியியல் ஆய்வாளர்கள் அத்துணை பேரும் இதை ஒத்துக் கொள்கின்றனர்; உறுதி செய்துள்ளனர். 10 ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள இங்கிலாந்தல் பேசப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மொழியான ஆங்கிலம் (ணிஸீரீறீவீsலீ) தமிழிலிருந்து உருவானது. ஆங்கிலத்தில் உள்ள 70% சொற்கள் தமிழிலிருந்து வந்தவை என்று ஆங்கில மொழியியல் அறிஞரே கூறியுள்ளார். ஜப்பானிய மொழி தமிழிலிருந்து வந்தது என்று அந்நாட்டு மொழியியல் அறிஞர் சுசுமோ ஓனோ கூறியுள்ளார். இப்படி உலகின் பல மொழி அறிஞர்கள் தங்கள் மொழியின் மூலமொழி தமிழே என்று உறுதி செய்துள்ளனர். இந்தியாவின் ஆதிமொழி தமிழ் மட்டுமே. சமஸ்கிருதம் தமிழிலிருந்து உருவாக்கப்பட்டது. ஹிந்தி : தமிழ், சமஸ்கிருதம், உருது கலந்து உருவானது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழில் சமஸ்கிருதம் கலந்து உருவானவை. இப்படிப்பட்ட பெருமையும், தொன்மையும், வளமையும் உடைய தமிழை ஒதுக்கி ஒழித்துவிட்டு, சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. அதை பா.ஜ.க. அரசு பகுதி பகுதியாகச் செய்து வருகிறது. அவர்கள் ஹிந்தியைத் திணிப்பதுகூட ஹிந்தியின் மீதுள்ள அக்கறையால் அல்ல. ஹிந்தியை முதலில் திணித்துவிட்டால், பின் ஹிந்தியை நீக்கிவிட்டு  அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை எளிதில் கொண்டுவந்து விடலாம் என்கிற சூழ்ச்சித் திட்டத்தின அடிப்படையில்தான். எனவே, இந்தத் திணிப்பு ஓர் இடைக்கால ஏற்பாடுதான். இதை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே கூறியுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 24,000 பேர் மட்டுமே பேசக்கூடிய செத்த மொழியான சமஸ்கிருதத்தை 140 கோடி மக்கள் மீது திணிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஆபத்தை இந்திய மக்கள் உணர்ந்து - குறிப்பாக தமிழர்கள் உணர்ந்து - அதை முறியடிக்க வேண்டும். மோடி அரசின் தொடர் படையெடுப்பு... இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் இந்தி மொழி திணிப்பில் மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது.  புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருத மற்றும் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகுக்கும் மத்திய அரசு ஒவ்வொரு நாளும் அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தி மொழி திணிப்பில் ஈடுபட்டுள்ளது.  ரயில்வே சம்பந்தப்பட்ட குறுந்தகவல்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்தி மொழியில் மட்டுமே அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முன்பதிவு நிலவரம் உட்பட எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அறிந்த பயணிகள் தள்ளப்படுகின்றனர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிலும் இந்தித் திணிப்பு தீவிரமடைந்துள்ளது. நேஷன் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் தன்னுடைய பாலிசிதாரர்களுக்கு நினைவூட்டல் கடிதங்களை எழுதிய அதில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அந்நிறுவனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதி கவனப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணிகளிலிருந்து தன்னை மத்திய அரசின் அகழ்வாய்வுத் துறை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. ஆனால், மாநில அகழ்வாய்வுத் துறையின் மூலம் நடைபெற்று வரும் பணியின் மூலம் ஏராளமான தொன்மச் சான்றுகள் கிடைத்து வருகின்றன.  முற்றிலும் ஓரவஞ்சனைப் போக்குடன்தான் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் மோடி அரசு நடந்து கொள்கிறது. இந்திய பண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ பெண்களோ,  சிறுபான்மையினரோ, தலித்துகளோ இடம் பெறவில்லை.  இந்தக் குழுவை முற்றாகக் கலைத்துவிட்டு இந்தியாவின் பன்முக வரலாற்றை எழுதும் வகையில் புதிய குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. அடுத்தடுத்து பன்முகப் பண்பாடு மற்றும் மொழி சமத்துவத்தின் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில் மத்திய அரசின் சார்பில் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையில் உலகின் செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகள் இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ள நிலையில் திட்டமிட்டே இந்த வேலை நடந்துள்ளது. தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையில் தமிழ்மொழி பயின்றவர்களும் பயன்பெறும் வகையிலும் தமிழும் சேர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு சமஸ்கிருத மற்றும் இந்தி மொழித் திணிப்பை கைவிட்டு அனைத்து மொழிகளும் செழித்து வளர சமவாய்ப்பை வழங்கும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். 12 ஆயிரம் ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத் துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக்குழுவில் பன்மைத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இடம் பெறவில்லை.  இந்து உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை. ஆனால் சாதிச் சங்கத் தலைவருக்கு இடமிருக்கிறது. விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர ஆதிமொழி இங்கு இல்லையா? ஜான்மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி துவங்கி அய்ராவதம் மகாதேவன், டோனிஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை ஜாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒருபோதும் எழுத முடியாது. எனவே இந்தக் குழுவைக் கலைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்தியிலேயே தேர்ச்சி பெறாத நிலையில் வடமாநிலத்தவர் தமிழ் தேர்வில் வென்று பணியில் சேர்வது எப்படி என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளே கேட்டுள்ளனர்? தமிழகத்தில் சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் உரிய வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். அதேநேரம் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் பணியிடங்களுக்கு சுமார் 1,600க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டது கடந்தாண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதோடு தபால்துறை,  மின்துறையிலும் பல வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2011லிருந்து மத்திய அரசு துறைகளில் நடந்த பணி நியமனங்களில் 99 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணகுமார்,  நீலகிரி அரவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலையில் கெமிக்கல் பிராசசிங் ஒர்க்கர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இவர், 40 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த வழக்கில், மனுதாரருக்கு 4 வாரத்தில் பணி வழங்க தனி நீதிபதி கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் அய்கோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ‘‘மத்திய அரசு பணி தொடர்பான எந்தப் பிரச்சனைக்கும் அதற்கென உள்ள மத்திய நிருவாக தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது’’ என வாதிடப்பட்டது. வக்கீல் சரவணன் ஆஜராகி, ‘‘ரிட் மனு மீதான விசாரணையின்போது பணி வழங்க ஒத்துக்கொண்டனர். அவர்களது பதில் மனுவில் நிருவாக தீர்ப்பாயம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அம்மாநில மக்களுடன் எளிதாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில் அம்மாநில மொழியை அறிந்திருக்க வேண்டும். அதே நேரம் வடமாநிலத்தவர்கள் இந்தியிலேயே போதிய தேர்ச்சி பெறாத நிலையில் தமிழ்மொழி தேர்வுகளில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்று பணியில் எப்படி சேர்கின்றனர் எனத் தெரியவில்லை. ஆனால், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கின்றனர். மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வெழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். தேர்வு நடைமுறையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை. தமிழக மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தவர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.  இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்திற்கு நடந்த எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான 3 நாள்களில் அழிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறுகின்றனர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேரின் விடைத்தாள்கள் இருக்கிறதா, இல்லையா? அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அவசியமும் தேவையும் என்ன? நியமனம் எதன் அடிப்படையில் நடந்தது என்பது குறித்து, ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையின் பொதுமேலாளர் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தவர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். குஜராத்தில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு குஜராத் மாநிலம் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழைப் போற்றிய காந்தி பிறந்த மண்ணில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியில் தமிழும் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உச்சகட்டம்தான் தமிழ்ப் பள்ளியை மூடிய குஜராத் அரசின் செயல்பாடு, தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் தமிழ் படித்துவந்த பள்ளிகளை மூடுவது என்பது அப்பிள்ளைகளின் கல்வியைப் பறிக்கும் செயலாகும். இதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவிலும் தமிழ்ப் பள்ளிகள் மூடல் கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாகத் தொடங்கும் தனியார் தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. சுரங்கம், காபித் தோட்டம், கட்டுமானத் தொழில், வேளாண்துறை ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர். இலட்சக்கணக்கான கர்நாடக மாநிலத்தினர் தமிழகத்தில் வணிகம் செய்கின்றனர். கல்வி கற்கின்றனர். வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக கர்நாடக அரசு தமிழ்க் கல்வியை முடக்குவது கண்டிக்கத்தக்கதாகும். கர்நாடகாவில் தமிழ் வழியாகக் கல்வி கற்கும் தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் அண்மையில் மூடப்பட்ட தமிழ் வழிப்பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தமிழ் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரும் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழும் தமிழ்ப் பண்பாடும் புறக்கணிப்பு! தமிழர் தலைவர் கண்டனம்! “புதிய கல்விக் கொள்கை என்ற மனுதர்மத் திட்டம் திணிக்கப்படுவதற்கு அடுத்த கட்டத் திற்கும் மத்தியில் பெரும்பான்மை பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி ஆயத்தமாகி விட்டது! 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சாரத்தைத் தோண்டி ஆராய முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு இந்திய கலாச்சாரம் - 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு உடையது என்பதை ஆராய்ந்து நிறுவிட, 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய கலாச்சார நிபுணர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக எழுத்துபூர்வ பதில் ஒன்றினை நாடாளுமன்றத்தில் கலாச்சார, சுற்றுலாத் துறை ஸ்டேட் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார்! யார் யார் உறுப்பினர்கள்? இக்கமிட்டியின் உறுப்பினர்களின் பட்டியலை நன்கு ஆழ்ந்து படித்துப் பாருங்கள். 1.            கே.என்.தீட்சித், இந்திய தொல்பொருள் துறை தலைவர், மற்றும் முன்னாள் தொல்பொருள்துறை சர்வே ஜாயிண்ட் டைரக்டர் ஜெனரல். 2.            டாக்டர் ஆர்.எஸ்.பிஷ்த், முன்னாள் ஜாயிண்ட் டைரக்டர் ஜெனரல், ஆர்க்கியால ஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா. 3.            டாக்டர் பி.ஆர்.மணி, முன்னாள் டைரக்டர் ஜெனரல் நேஷனல் மியூசியம், புதுடில்லி, முன்னாள் அடிஷனல் டைரக்டர் ஜெனரல், ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா. 4.            பேராசிரியர் சந்தோஷ் சுக்லா - ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி, புதுடில்லி. 5.            டாக்டர் ரமேஷ் குமார் பாண்டே, சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யா பீடம், புதுடில்லி. 6.            பேராசிரியர் மக்கன்லால், டைரக்டர் டில்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், விவேகானந்தா இன்டர் நேஷனல் பவுண்டேசன், புதுடில்லி 7.            டாக்டர் ஜி.என்.சிறீவத்சவா, முன்னாள் அடிஷனல் டைரக்டர் ஜெனரல், ஜியோ கிராபிகல் சர்வே ஆஃப் இந்தியா. 8.            ஜஸ்டிஸ் முகுந்த்காம் சர்மா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, வேந்தர், சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யா பீடம், புதுடில்லி. 9.            பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, துணை வேந்தர், ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான், புதுடில்லி. 10.         பேராசிரியர் ஆர்.சி.சர்மா, தலைவர், டிபார்ட்மெண்ட் ஆஃப் லிங்குஸ்டிக்ஸ், டில்லி பல்கலைக் கழகம். 11.         பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டீன், ஆந்த் ரோபலஜி, அய்தராபாத் பல்கலைக் கழகம், முன்னாள் டைரக்டர் ஆந்த்ரோபலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா. 12.         டாக்டர் பல்ராம் சுக்லா,  சமஸ்கிருதத் துறை, டில்லி பல்கலைக் கழகம். 13.         பேராசிரியர் ஆசாத் கவுஷிக், விஞ்ஞானி, பன்னாட்டு சிந்தனையாளர், கனடா. 14.         பண்டிட் எம்.ஆர்.சர்மா, தலைவர், ‘‘சங் மார்க்‘’, உலக பிராமணர்கள் பேரவை, புதுடில்லி, இந்தியா. 15.         பிரதிநிதி, மத்திய கலாச்சாரத் துறை, புதுடில்லி அமைச்சகம், டில்லி. 16.         பிரதிநிதி, ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா. மேற்கண்ட அறிவிப்பில் வெளியான நிபுணர்கள் என்பவர்களில் ஒருவர் அல்லது இருவரைத் தவிர மற்ற அத்தனைப் பேரும் பச்சைப் பார்ப்பனர்களே! அதுமட்டுமல்லாது, சமஸ்கிருத மொழியே பிரதானம் என்கிற கொள்கை கொண்ட சமஸ்கிருத வடமொழியாளர்களே! இதிலுள்ள பி.ஆர்.மணி என்பவர் ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா குழுவின் தலைவராக இருந்து, இராமஜென்ம பூமி பாபர் மசூதி இடத்தை 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் தோண்டுகின்ற பணியைச் செய்தபொழுது, அலகாபாத் உயர்நீதி மன்றம் 2003, மே மாதம் மேற்கண்ட நபரை விலக்கிவிட்டு, வேறொரு நபரை அந்த இடத்திற்கு நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது என்றால், அவரைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்; அவர் எதற்காக இதில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பது, புரிகிறதா? உலகப் பிராமணர் சங்கத் தலைவரும் இந்தக் குழுவிலாம்! இதில் உலக பிராமணர்கள் சங்கப் பெடரேஷன் தலைவர் என்று ஒருவர் இருப்பது இப்போதுதான் வெளிச் செய்தியாகி உள்ளது! அவரும் இதில் உறுப்பினர்! இதில் தென்னாடு, மேற்கு வங்காளம், கிழக்குப் பகுதிகள் போன்ற எந்தப் பகுதியிலும் இருக்கக்கூடிய பலவித கலாச்சாரங்களின் பிரதிநிதிகளோ, அவற்றில் ஊறித் திளைத்தவர்களோ, செம்மொழி, தகுதி பெற்ற மொழி சார்ந்த விற்பன்னர்களோ எவரும் மருந்துக்குக்கூட இடம்பெறவே இல்லை! வேதக் கலாச்சாரம் என்பதுதான் இவர்களின் முடிவு! வெளிப்படையாகவே எங்கள் வேதக் கலாச்சாரம் - ஆரியக் கலாச்சாரம் மட்டும்தான் இந்திய கலாச்சாரம் என்று திட்டமிட்ட வகையில் ஓர் அறிக்கை தந்து, அயோத்தியில் இராமன் கோவில் கதைபோல ஒன்றை வலுக் கட்டாயமாக இந்த ‘பூதேவர்கள்’ குழு மூலம் வரலாறு, மற்றும் தரவுகளை தலைகீழாக மாற்றிட, கால்கோள் விழாதான் இந்தக் கலாச்சார ஆராய்ச்சி! அடிவேரையே அழிக்கும் ஆபத்தான முயற்சி! இந்திய கலாச்சாரம் என்பது பன்முகத்தன்மையது என்பதைத் துளியளவாவது ஒப்புக் கொள்ள இன்றைய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மத்திய ஆட்சி தயாராக இல்லை என்பதையும், நாங்கள் திணிப்பதை நீங்கள் - மற்ற குடிமக்கள் - ஏற்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ‘‘பிஞ்சராப் போல்கள்’ நிறைந்த ஒரு அக்கிரகாரக் கமிட்டி! இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது, அடி வேரையே அகற்றிடச் செய்யும் மிகப்பெரிய ஆபத்து! இதனைப் புரிந்து உடனடியாக மற்ற கலாச்சாரத்தினர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிய வைக்கவேண்டும். இதில் பிரபல  வரலாற்றாசிரியர்களோ, ஆய்வாளர்களோ, பொதுவானவர்களோ எவருக்கும் இடமில்லாது செய்திருப்பதால், புரிந்துகொள்ள வேண்டியது என்ன? முறியடிக்க வேண்டியது அவசியம்! அவசரம்!! இந்திய கலாச்சாரம் என்றால், வேத கலாச்சாரம், சமஸ்கிருத கலாச்சாரம், பார்ப்பனிய, ஆரிய கலாச்சாரம் என்று நிறுவிட இது கால்கோள் விழா - இதனை முறியடிப்பது நம் மக்களின் அவசரப் பணி! - அலட்சியம் வேண்டாம்! ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களே! டோனி ஜோசப் போன்றவர்கள் எழுதியுள்ள மரபணு ஆராய்ச்சிமூலம் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள்தான் என்பதும், மொகஞ்சாதாரோ, ஹரப்பா கலாச்சாரங்கள் ஏற்கெனவே பழைமை வாய்ந்த கலாச்சாரம் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொடரிலேயே எதிர்ப்பைப் பதிவு செய்க! தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி தோண்டல்களும், கிடைக்கும் பொருள்களும் தொன்மை வாய்ந்த திராவிடர் நாகரிகத்தினை உறுதிப்படுத்தும் சான்றுகளாக உள்ளனவற்றை மறைத்தோ, திசை திருப்பியோ, எப்படி சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்ற ஓர் அண்டப் புளுகை, திட்டமிட்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனரோ அதுபோல செய்வதற்கும், அரசு செலவில் இந்த அக்கிரகார ‘‘பிஞ்சராப் போல்கள்’’ (கிழட்டு மாடுகளின் அடைக்கலம்). மற்ற அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும். தி.மு.க. மற்றும் தென்னாட்டு எம்.பி.,க்கள் இதற்குத் தங்கள் எதிர்ப்பை இத்தொடரிலேயே பதிவும் செய்ய வேண்டும்’’ என்று தமிழகத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். (மொழித் திணிப்பு, தமிழ்ப் புறக்கணிப்பு பற்றி தமிழர் தலைவரின் அறிக்கையை தலையங்கத்தில் காண்க). மத்திய அரசுத் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு! தி.மு.க தலைவர் கண்டனம்! “மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். நூறு சதவீதம் ‘அப்ஜெக்டிவ்’ கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. தபால் துறையில் ஏற்கெனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிறபோது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதேபோல் ‘குரூப் சி’ பதவிகளுக்கான தேர்வுகள் தொடர்பாக தென்மேற்கு ரயில்வேயின் சார்பில், ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர், இந்தி மொழியில் சில கேள்விகளுக்கு தேர்வு எழுதியிருந்தால் அந்தத் தேர்வுத்தாளைத் திருத்தலாமா? அப்படி திருத்தலாம் என்றால் எவ்வளவு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த ஆங்கிலத்தில் எழுதியுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்கள் போட வேண்டுமா அல்லது இந்தியில் பதிலளித்துள்ள கேள்விகளுக்கும் சேர்த்து அனைத்துக் கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் போட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், விருப்பம் தெரிவித்த ஆங்கிலம் தவிர, வேறு மொழியில் கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் அந்தக் கேள்விகளுக்கு மதிப்பெண் போட வேண்டியதில்லை என்று பதிலளித்திருக்கிறது. ஆனால் அடுத்த வரியில், இந்தியில் எழுத விருப்பம் தெரிவித்து விட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதியிருந்தால் அதற்கு மதிப்பெண் போட வேண்டும் என்று கூறியிருப்பது, ‘ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்று ரயில்வே வாரியம், வஞ்சக எண்ணத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது. குறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் எனக்கூறியுள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பாஜக ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை தி.மு.க. கருதுகிறது. இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கையை தி.மு.க.வால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள் அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும், குரூப் சி பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் ‘குரூப் சி’ தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மொழியை, புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம்’’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆரிய - திராவிடப் போர் என்பது தற்போது உச்ச நிலையில் உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ் செயல் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு சிறப்புகளை அழித்து சமஸ்கிருதத்தை சனதான தர்மத்தை நிலை நாட்டத் துடிக்கிறது. எனவே, தமிழர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் காக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.செய்திகளை பகிர்ந்து கொள்ள

ஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஒப்பீடு!

முனைவர் த.ஜெயக்குமார் பகுத்தறிவு உலகின் 19ஆம் நூற்றாண்டில் உலகப்புகழ் அறிவு மாமேதை, ஒப்பற்ற பகுத்தறிவுப் பரப்புரையாளர், அமெரிக்க வல்லரசு நாட்டில் 1833ஆம் ஆண்டு பிறந்தவர் கர்னல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவர். அதே நூற்றாண்டில், சற்றேறக்குறைய 46ஆண்டுகளுக்குப் பின் 20ஆம் நூற்றாண்டின் முதன்மை தத்துவச் சிந்தனையாளராகவும், ஈடு இணைற்ற சமூக  சீர்திருத்த சமத்துவக் கொள்கைப் போராளியாகவும், இந்தியத் திருநாட்டில் 1879ஆம் ஆண்டு பிறந்தவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் எனும் ஈ.வெ.ரா. (ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி) ஆவர். பிறப்புச் சூழலே அறிவுச் சிந்தனைக்குத் திறவுகோலானது இங்கர்சாலின் தந்தையார் ரெவரென்ட் ஜான் இங்கர்சால் பெரும் கிறித்துவ மதப் பாதிரியார் ஆவார். அவர் வேதப் புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கைகொண்ட மதப் பற்றாளராவார். அவர் தனது மகனையும் பாதிரியாராக்க வேண்டும் என்கிற பேராசையின் காரணமாக இங்கர்சாலை கண்டிப்புடன் வளர்த்ததோடு, கிறித்துவ மத வேதப் புத்தகமாம் பைபிளை வரிவரியாக வாசித்திடக் கட்டளையிட்டார். அவரும் விரும்பிப் படித்தார், ஆழமாகச் சிந்தித்தார். அவரது ஆற்றல்மிகு சுயஅறிவுச் சிந்தனையின் காரணமாக படிக்கப் படிக்க ஏராளமான சந்தேகங்கள் ஏற்பட்டன. அவை யாவும் கேள்விக் கணைகளாக வெடித்தன. அதற்கான விடைகள் சரியாகப் புலப்படவில்லை. மகனின் சந்தேகங்களிலும், வினாக்களிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த அவரது தந்தை, அவரது மூளையைக் கெடுக்காமல், மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும்படி சுதந்திரம் கொடுத்தார். அதேபோன்றுதான், பெரியாரின் தந்தையார் வெங்கட்டநாயக்கர் அவர்களும் மத ஆச்சாரங்களைக் கொண்ட வைணவ பக்தராவார். அதனால் நாள்தோறும் அவரது வீட்டில் இராமாயணம் போன்ற புராணக் கதாகாலட்சபங்கள், பக்தி பஜனைகள், நிகழ்ந்தவண்ணம் இருந்தன. இதனைக் கேட்டுக் கேட்டு இளம் வயதிலேயே அவரது சிந்தனையில் படும் பொது அறிவு வினாக்களுக்கு, விடைதேட முயற்சித்தார் பெரியார். அதோடு பெரியாருக்கு இருந்த ஒருவித குறும்புத்தனத்தின் காரணமாகவும் தலைவிதி போன்ற புரட்டுகளை எதார்த்தமாகத் தெளிவுபடுத்தினார். அதோடு நன்மை - தீமைகளுக்கும் நாமே காரணம் எனவும் உணரவைத்தார். மேலும், அவருக்கு நம்பிக்கையில்லாத கடவுள், புராணம் தொடர்பான பிரசங்கங்களில் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு விதண்டாவாதம் செய்வார். இவ்வாறாக நடைமுறைப் பட்டறிவின் மூலம் பெரியார் அவர்கள் ஒருவித இயற்கைப் பகுத்தறிவைப் பெற்றதோடு, அவருக்கு அப்போது தோன்றிய அய்யங்களுக்கு அறிவுத்தடை போடப்படாமல், சுயசிந்தனை நீரோட்டத்தோடு வளர்ந்ததால், பின்னர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தத்துவச் சிந்தைனயாளர்களுள் முதன்மையராகவும் இன்று உலகப் பெரியாராகவும், பகுத்தறிவுத் தந்தையாகவும் பரிணமிக்கச் செய்தது. மாமேதைகளின் அறிவுக்கும் - கல்விக்கும் சம்பந்தமில்லை இங்கர்சாலுக்கு பள்ளிப் படிப்பு என்பது குறைவுதான். ஆனால் நல்ல ஞாபகசக்தி கொண்டவர். மொழிகளை உபயோகிப்பதிலும், பேசுவதிலும் கதை சொல்வதிலும் திறமைமிக்கவர். சுயமாக நூல்களைப் படித்துப் படித்து ஏராளமான செய்திகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டவர். பின்னாள்களில் சட்டங்களையும் படித்து தன்னை ஒரு வழக்கறிஞராக்கிக் கொண்டார். பெரியார் அவர்களோ 5 ஆண்டுகள் மட்டுமே தொடக்கக் கல்வி வரையில் பள்ளிப் படிப்பு பயின்று, தமது 10ஆம் வயதோடு படிப்பை நிறுத்திக்கொண்டவர். படிப்பைக் காட்டிலும் பெரியாருக்கு தொழிலில் அறிவுக்கூர்மை இருந்தது. 12 வயதிலேயே தமது தந்தையின் தரகுக்கடையாம் கமிஷன் மண்டிக்கு திறமைமிகு வணிகராகத் திகழ்ந்திட்டார். அதனூடே தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி போன்ற கலைக்களஞ்சியத் தொகுப்பு நூல்கள், இராமாயணம் உள்ளிட்ட புராணப் புத்தகங்களைப் படித்துப் படித்து அதனை ஆய்ந்து தோய்ந்து அறிவைப் பெருக்கிக் கொண்டதோடு, சுயமரியாதை, பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துகளை தமது சுயசிந்தனைகளோடு அவர்தம் பேச்சிலும் _ எழுத்திலும் பரப்பலானார். உலகிலேயே அதிமுக்கியமானவை - சுதந்திரமும், சுயமரியாதையும் 1877இல் இங்கர்சால் தமது கொள்கைப் பிரகடனமாக முழங்கியவை: “உலகத்திலேயே அதி முக்கியமான விஷயம் சுதந்திரம். அது உணவைவிட, உடையைவிடப் பெரியது. சிற்பம், ஓவியம், கலைகள் யாவற்றிலும் உயர்ந்தது. எல்லா மதங்களைக் காட்டிலும் சுதந்திரமே நனி சிறந்தது. இத்தகையை இணையில்லா மதிப்புடைய மனிதச் சுதந்திரம் எனும் மரகதத்தைக் காப்பாற்ற நான் எதனையும் இழக்கத் தயாராக இருக்கின்றேன்’’ என உலகிற்குப் பறைசாற்றினார். பெரியார் அவர்கள் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது, தமது தலையாய திட்டமாகக் குறிப்பிட்டது யாதெனில்: “ஈவெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்’’ என்றும், மேலும் சுதந்திரம் குறித்து தமது சிந்தனை வெளிப்பாடாக ‘குடிஅரசு’ இதழில் (18.7.1937) குறிப்பிட்டு எழுதியதாவது: “மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.’’ இவ்வாறாக உலகில் “சுயமரியாதை’’ என்னும் ஒற்றைச் சொல்லை ஆயுதமாக்கி வெற்றி கண்டவர் பெரியாரே! சுயமரியாதைக்கு பெரியார் தந்த விளக்கம் யாதெனில்: சொந்த அறிவுக்கு மரியாதை _ என் சுயமரியாதையை இழக்காமல், பிறர் சுயமரியாதையையும் பாதிக்காமல் அதாவது “எல்லோருக்கும் எல்லாமும்’’  என்பதாகும். நுட்பமான இச்சொல்லாடலில் பகுத்தறிவுச் சிந்தனை_சமத்துவ உணர்வு _ சமூக மேம்பாடு ஆகிய முக்குணங்களும் விளங்கும். கொள்கை லட்சியங்களுக்காகப் பதவியை விரும்பாதவர்கள் 1868ஆம் ஆண்டு இங்கர்சால் அவர்கள் அமெரிக்க_இல்லினாய்ஸ் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாக பெரிய பதவி வகித்தபோது, அவருக்கு கவர்னர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த வாய்ப்பினை அவர் மறுத்தார். காரணம் அவர் தன்னுடைய கொள்கைகளை சிறிதளவும் விட்டுக்கொடுக்க மனமற்றவராக இருந்தார். அப்போது மறுப்புக்கான காரண விளக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது: “என்னுடைய நம்பிக்கை என்னைச் சேர்ந்தது, அது இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே மன்னராக ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்ட முடியாது’’ என்று கூறி அப்பதவியை நிராகரித்ததோடு, தம் கொள்கைக்காக கடைசிவரை அரசாங்கத்தார் அளிக்ககூடிய எப்பதவியையும் ஒத்துக் கொள்வில்லை. பெரியார் அவர்களையும் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த சமயத்தில், இந்தியாவின் சென்னை ராஜதானியின் பிரீமியர் முதல்வராகப் பதவியேற்க வருமாறு 1940இல் கவர்னராக பொறுப்பு வகித்த ஆர்தர் ஹோப் அவர்களும், பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக 1942இல் கவர்னராலும், வைசிராயாலும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். அரசியலை விரும்பாத பெரியார் அவர்கள் பதவி தனை துச்சமென உதறித் தள்ளினார். தமது நோக்கம் சமூக சீர்திருத்தமே என அறுதியிட்டுக் கூறியவர் பெரியார். அதேபோன்று 1919இல் பெரியார் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்தபோதும், அதன் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைக்காக தாம் பொதுவாழ்க்கையில் அதுநாள் வரை வகித்து வந்த ‘ஹானரரி மாஜிஸ்திரேட்’ உள்ளிட்ட 29 கவுரவப் பதவிகளை ஒரே நாளில், ஒரே தாளில் ராஜினாமா செய்து பதவிகளைத் துறந்து வரலாறு படைத்தவர் என்பதும் பெரியாரின் தனிச் சிறப்பாகும். சமூக  அரசியல் மாற்றத்திற்குத் தூண்டுகோலான இவர்களின் சொற்பொழிவுகள் இங்கர்சாலின் சொற்பொழிவுகள் அனைத்தும் கேட்போர் உள்ளத்தை இளகச் செய்து இழுத்ததுடன், அவர்களை வயப்படவும் செய்தது. அமெரிக்க நாட்டில் அதுவும் அக்காலத்தில் கட்டணம் செலுத்தி இங்கர்சாலின் பகுத்தறிவு ததும்பும் மதவாதத்திற் கெதிரான - கடவுள் நம்பிக்கைக்கெதிரான - நாத்திக நன்னெறிக் கருத்துகளைக் கேட்க மக்கள் திரண்டனர் என்பது உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாகும்! 1877இல் “மனிதன் - மங்கை - குழந்தை  அவர்தம் சுதந்திரம்’’  எனும் தலைப்பிலும், 1880  தலைவர் தேர்தலில் கார்பீல்டு, 1884 - அறவழி, 1885 - பொய்யும் அற்புதமும், 1894 - ஆபிரகாம் லிங்கன், வால்ட்டெயர், வேதப் புத்தகம், 1897- நான் ஏன் கடவுள் நம்பிக்கையற்றவர்? மனிதரை சீர்திருத்தும் விதம், இதேபோன்று உண்மை உணர்ச்சி, கடவுள்கள், 1899 - மதம் என்றால் என்ன? பேய்_பூதம்_பிசாசு அல்லது ஆவி, எந்த வழி? என்பன போன்ற பிரபலமான சொற்பொழிவுகள் சமூக அரசியல் மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமைந்தன. அவை யாவும் புத்தகங்களாகவும் பிரசுரிக்கப்பட்டன என்பதே பகுத்தறிவுக் கொள்கைப் பரவலுக்குச் சான்றாக அமைந்தன. இதைவிடக் கூடுதல் சிறப்பொன்று உண்டென்றால் அதுதான், இங்கர்சாலின் சொற்பொழிவு நூல்களை தமிழாக்கம் செய்து 1933களிலேயே 6 நூல்கள் வெளியிட்டவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் அவர்களது சொற்பொழிவு குறித்துக் கூறவேண்டுமானால், நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போன்று ஆழமாக, அதாவது மூலபலத்தோடு தர்க்கம் செய்து வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்தெடுக்கும் கடப்பாரை போன்ற தாக்கத்தைக் கொண்டவையாகும். பெரியாரது தத்துவத் தாக்கம் என்பது அண்ட பிண்ட சராசரம் வரை பாயும் ஈட்டி போன்ற வலிமையானவையாகும். இந்தியாவின் முதன்முதல் மனிதஉரிமைப் போராட்டமாம் வைக்கம் பேராட்டம் என்பது 1924இல் மனிதன் தெருவில் நடக்க உரிமைக்கானது. இதில் பெரியாரின் தீண்டாமை ஒழிப்புக்கான சொற்பொழிவுகள் இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதேபோன்று 1925இல் சமத்துவமற்ற சமூகத்தினை மேம்படுத்திட கல்வி -  வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரியாக இடஒதுக்கீடு கேட்டுத் தொடர் போராட்டம் செய்தும், பின் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டபோதும் பேசிய பெரியாரின் வாழ்வுரிமைச் சொற்பொழிவுகள் மிகப்பெரிய சமூகப் புரட்சியை உண்டாக்கியது என்றே சொல்லலாம். மேலும், பெரியாரின் பிரபலமான சொற்பொழிவுகளும், பத்திரிகை இதழ்களில் அவர் எழுதியவையும், பெரியார் சிந்தனை நூல்களும், மிகப்பெரிய விழிப்புணர்வுத் தாக்கத்தினையும்_உணர்ச்சியையும் - கிளர்ச்சியையும் உண்டு பண்ணி சுயமரியாதை சொரணைபெற்று பகுத்தறிவால் மேம்பட்டிட வழிவகுத்ததையும் அறியமுடிகிறது. பெரியாரின் சிந்தனைச் செல்வங்களான அவர்தம் நூல்வரிகளிலிருந்து 1930 இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த முதல் சிந்தனை 1930 - ‘கர்ப்ப ஆட்சி’, 1934 - ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நவீன பெண்ணியத்துக்கான உலகின் முன்னோடி நூல், 1938 - பெரியாரின் தொலைநோக்கு அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடான ‘இனிவரும் உலகம்’, 1944 - ‘கிராம சீர்திருத்தம்’, ‘தத்துவ விளக்கம்’ இப்படியான 153க்கும் மேற்பட்ட நூல் வடிவிலான சிந்தனைச் செல்வங்கள்தாம் இந்தியாவில் நிலவி வந்த ஆரியர் - திராவிடர் எனும் சமத்துவமற்ற சமூகத்தினைச் சீர்திருத்தி, அடிமைப்பட்டிருந்த திராவிடர் சமுதாயத்தை சமூக  பொருளாதார - அரசியலில் பெரும் மாற்றம் கண்டு முன்னேற்றமடைய தூண்டுகோலாக அமைந்தன என்பது புலனாகிறது. (தொடரும்..)செய்திகளை பகிர்ந்து கொள்ள

அய்யாவின் அடிச்சுவட்டில் ...: இயக்க வரலாறான தன் வரலாறு (254)

வடமாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகம் கான்ஷிராம் முழக்கம்! கி.வீரமணி 16.08.1994 ‘தடா’ சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இருந்த கோவை இராமகிருஷ்ணன் உள்பட 9 பேர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் தமிழக அரசு கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அதில், கோவையில் ‘தடா’கைதிகளாக சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த கோவை இராமகிருஷ்ணன், ஆறுச்சாமி, சண்முகம், கவுரிசங்கர், லோகநாதன், ஜெயபால், ரவி மற்றும் சிலர் உள்பட 9 பேர்களை கோவை ‘தடா’ நீதிமன்ற நீதிபதி அவர்கள் ‘தடா’ சட்டத்தின்படி அவர்கள் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகள் சட்டப்படி நிரூபணம் ஆகவில்லை என்று கூறி, பல சட்டப் பிரிவுகளையெல்லாம் விளக்கி 112 பக்கங்கள் தீர்ப்பு எழுதி விடுதலை செய்துள்ளார் - ஒருவாரத்திற்கு முன்பு. அவர்களது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு - அப்பீல் செய்யப்போவதாக தமிழக அரசின் சார்பில் காவல்துறை டைரக்டர் - ஜெனரல் திரு. சிறீபால் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது சில நாள்களுக்கு முன்பு நாளேடுகளில் வந்துள்ளன. ‘தடா’ சட்டத்தின் விதிகளின்படி இவ்வழக்கின் சாட்சி சட்டப்படி சரி இல்லை என்று விரிவாக, விளக்கமாக நீதிபதி அவர்கள் ஓர் ஆழமான தீர்ப்பைத் தந்துள்ள நிலையில், தமிழக அரசு, அவர்களை பழி வாங்க வேண்டும் என்பதுபோன்று அதற்கு எதிராக அப்பீல் செய்வோம் என்று கூறுவது, மனித உரிமைக் கண்ணோட்டத்திலும், மனிதநேய அடிப்படையிலும், தேவையற்றதும், முறை அற்றதும் ஆகும். ஏற்கெனவே இதுபோன்ற இரண்டு, மூன்று ‘தடா’ வழக்கு கைது ஜாமீன் வழக்கில் தமிழக அரசு வெற்றி பெறவில்லை என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது. ‘தடா’ சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்ற உரத்த சிந்தனை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ரங்கநாத்மிஸ்ரா அவர்களால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. இப்படி நாடே மனித உரிமைகள் பறிப்பு குறித்தும், கறுப்புச் சட்டங்கள் குறித்தும் மிகப் பெருங்கவலையும், அக்கறையும் கொள்ளுகின்றன. வடநாட்டில் உள்ளதுபோல தமிழ்நாடு இல்லை: தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று ஒருபுறம் தமிழக அரசின் சார்பில் கூறிக்கொண்டே மறுபுறம் ‘தடா’ போன்ற காட்டுமிராண்டித்தன சட்டத்தைப் பிரயோகப்படுத்துவது மக்களாட்சிக்கு மாண்பாகாது. சிறையில் அடைக்கப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசினையும், குறிப்பாக தமிழக முதல்வர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். 16.08.1994 மேற்கு வங்க மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பொதுக்கூட்டம், பேரணியில் கலந்து கொண்டேன். கூட்டத்திற்கு தேசிய  சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் எம்.பி. தலைமை வகித்தார். மேற்கு வங்க மாநில ஒடுக்கப்பட்ட அமைப்பின் செயலாளர் கார்த்திக் சந்திர போஸ் அனைவரையும் வரவேற்றார். 18 சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள். மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற பேரணி - பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் சமூக அமைப்பின் தலைவர்கள் அங்கு உரையாற்றுகையில், தமிழ்நாடு இந்தியத் துணை கண்டத்திலேயே சமூகநீதிக் கொள்கைக்கு வழிகாட்டும் மாநிலம், தமிழ்நாட்டில் தான் இடஒதுக்கீடு 69 சதவிகிதம் இருந்து வருகிறது என்று கூறிய போது மக்கள் பலமாக கைதட்டி வரவேற்றனர். அதனை மேற்கு வங்க மாநிலத்திலும் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கூறுகையில், பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களும் ஆமோதித்து பெருத்த கரவொலி எழுப்பினர். மண்டல் குழுப்பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள 27 சதவிகிதத்தையாவது மேற்கு வங்கத்தில் அமல்படுத்த வேண்டும் என எடுத்துக் கூறினேன். டெல்லியில் சமூக நலத்துறை அமைச்சர் சீதராம் கேசரி உடன் உரையாடும் ஆசிரியர் முன்னதாகப் பிற்பகல் 2:00 மணிக்கு மேற்கு வங்க ஆளுநர் திரு.ரெகுநாத ரெட்டியை 18 பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளின் தலைவர்களுடன் சந்தித்தோம். அப்போது என்னை திரு.சந்திரஜித் யாதவ் அறிமுகப்படுத்த முயன்ற போது மேற்கு வங்க ஆளுநர், “வீரமணியைப் பற்றி நான் அறிவேன். நானும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன்தான்’’ என்ற ஆளுநர் மகிழ்ச்சியோடு தமிழிலேயே பேசினார். பெரியார் பற்றி ஆங்கில நூல்களை ஆளுநருக்கு வழங்கினோம். மேற்கு வங்க ஆளுநர் திரு.ரெகுநாத ரெட்டியை சந்தித்து மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை மனு தரும் ஆசிரியர் உடன் சந்திரஜித் யாதவ் 17.08.1994 அன்று புதுடில்லியில் சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரியை சந்தித்து, அய்.பி.எஸ், அய்.ஏ.எஸ்களுக்கான நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவிகிதம் மட்டுமே இடம் கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினோம். அடுத்து முக்கிய தேர்வு, நேர்முகப் போட்டி எல்லாம் கடந்து வெற்றி பெறுகிறவர் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். அதனால் நுழைவுத் தேர்விலும் - பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தது 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தேன். அவரும் அதில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார். சி.சிகாமணி - ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவிக்கும் ஆசிரியர்  23.08.1994 சென்னை எழும்பூர் மோத்தி மகாலில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைத் தலைவர் சி.சிகாமணி மணவிழாவை தலைமையேற்று நடத்தி  வைத்தேன். மணமக்கள் சி.சிகாமணி - ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து உரையாற்றுகையில், நாளும் கிழமையும் பார்க்காமல் நடைபெறுவதே தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைத் திருமண முறையாகும். லண்டன்  தொலைக்காட்சி பி,.பி.சி.யில் இருந்து என்னைப் பேட்டி காண்பதற்காகப் பெரியார் திடலுக்கு வந்தார்கள். அவர்களிடம் கழகத்தின் சமூகப்பணியைப் பற்றியும், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றியும் விளக்கிக் கூறினேன். அங்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்தையும் அவர்கள் படம் எடுத்தார்கள். இன்றைக்கு டில்லியில் இருந்து லண்டன் பி.பி.சி.நிருபர் ஆன்ட்ரூ ஒயிட் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்  சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்த போது அங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்து, நானும் அதுபோல சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். லண்டனில் இருக்கும் பி.பி.சி. நிருபர் இதுபோன்ற திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் இந்த அளவுக்கு உலக மக்களையும் கவர்ந்துள்ளது என வாழ்த்துரையில் குறிப்பிட்டோம். கோ.இமயவரம்பன் 28.08.1994 சென்னை சைதாப்பேட்டை வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயல் வீரர் தே. தமிழ்ச்செல்வன் - விஜயாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். 1.09.1994 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று நடத்தினேன். கனத்த உள்ளத்தோடு கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலந்து கொண்டார். அந்தப் படத்திறப்பில் உரை நிகழ்த்துகையில், பேச இயலாமல் கண் கண் கலங்கியபடி பேசினேன். அதிக துக்கத்தினால் சில நேரம் பேசமுடியாமல் நின்றேன். புலவர் அவர்கள் மறைவின் போது குழந்தைகள் கதறி அழுத காட்சிகள் கண்முன்னே நிற்கிறது. அதுமட்டுமல்ல; இவர்களுக்கெல்லாம் தாயாக, தந்தையாக, அண்ணனாக, தாதியாக, ஆசிரியராகத் திகழ்ந்தார்கள். இந்தக் கட்டடங்கள் எல்லாம் இந்த அளவுக்கு உருவாகி உயர்ந்து இருக்கின்றன என்றால் அதற்குப் புலவர் அவர்களின் கடுமையான உழைப்பே காரணம். ஒவ்வொரு செங்கல்லிலும் அவரின் வியர்வைத்துளி, உழைப்பு இருக்கிறது. அப்படி இந்நிறுவனங்கள் வளர்வதற்கும், இயக்கம் வளருவதற்கும் காரணமாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல; அய்யா அவர்களின் அன்புக்கும், அய்யா அவர்களின் மகிழ்ச்சிக்குரிய செயலாளராக இறுதி வரை இருந்தார்கள். எத்தனையோ பேர் அய்யா அவர்களுடன் இருந்தாலும் இறுதிவரையில் அய்யா அவர்களுடன் புலவர் இருந்தார்கள். என நினைவு கூர்ந்து உரையாற்றினேன். குன்றக்குடி அடிகளார் புலவர் இமயவரம்பன் அவர்களின் பெயரால் ஆண்டுதோறும் நினைவுப்பரிசு வழங்கப்படும் எனக் கூறினேன். அவ்வகையில் முதல் நினைவுப் பரிசை தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்குக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் எனக் கூறி அவருக்குப் பரிசு வழங்கினேன். மேலும், பெரியார்- -மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தில் ‘புலவர் கோ.இமயவரம்பன் நினைவுக்கூடம்‘ என்று பெயரிட்ட கட்டட பெயர்ப் பலகையை குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். நிகழ்வில் குன்றக்குடி அடிகளார் உரையாற்றுகையில், “புலவர் அவர்கள் அதிகமாகப் பேச மாட்டார். நாம் பத்து தடவை பேசினால் அவர் ஒரு தடவை தான் பேசுவார். அது அவருடைய இயல்பு. பிடிவாதமும் உண்டு. அதற்குக் காரணம் கொள்கைப் பிடிப்பே தவிர, அதைப் பிடிவாதம் என்று சொல்ல முடியாது. தன்னுடைய கொள்கையிலும், கோட்பாட்டிலும் இருந்தவர்கள். செயல்திறன் மிக்கவர்கள். அவர்களை நாம் இழந்திருப்பது மிகப்பெரிய இழப்பு. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு, செயல்கூட பலர் செய்துவிடலாம், வெற்றி பெறலாம். ஆனால் நன்றி. - கடப்பாடு எதுவுமே தனக்கு வேண்டாம் என்ற உணர்வுடன் கழகத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதில் முதன்மையானவர் புலவர் அவர்கள். அவர் சிறந்த ஆளுமையாளர். அவரின் இழப்பு கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்’’ எனப் புகழாரம் சூட்டினார். 2.09.1994 தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் ந.கோவிந்தராசுவின் மணவிழாவை நடத்தி வைத்தேன். பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளரும் கழகப் பொருளாளருமான கா.மா.குப்புசாமி முன்னிலை வகித்தார். மணமக்கள் கோவிந்தராசு - பிரேமலதா இருவருக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தினேன். வாழ்த்துரையில் சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தேன். கனடா நாட்டின் சிறப்பு அழைப்பாளர் செல்வி.எலைன் எம்.ஹான் அவர்களுக்கு நினைவுப் பரிசு அளிக்கும் ஆசிரியர் 6.09.1994 வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் மூலமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் சமுதாய தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தினை செயல்படுத்தினோம். அதில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.தனவேல், கனடா நாட்டின் கேபட் (Cabot) கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.எலைன் எம்.ஹான் அவர்களும் கலந்து கொண்டனர். விழாவில் தலைமையுரையாற்றுகையில்  “கனடா நாட்டிலுள்ள கேபட் கல்லூரியும் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கும் இணைந்து சமுதாய தொழில் பயிற்சியளிக்கும் திட்டம் கிராமத்திலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட நலிந்த சமுதாயத்திற்கும், பெண்களுக்கும் கல்வியறிவு புகட்டக்கூடிய  பெரியார்  கண்ட கனவு”த்  திட்டமாகும்.  பூதலூர் போன்ற 30 கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு இந்த சமுதாய தொழிற்பயிற்சி அளிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை விளக்கிக் கூறினேன். திருமதி.எலைன்ஹான் பேசுகையில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுத்த அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார். பேராசிரியர்களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர். 8.09.1994 சமூகநீதி பாதுகாப்புப் பேரவையின் சார்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை எனப் பாராட்டி பட்டம் கொடுத்தோம். முதல்வர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர் அந்தப் பாராட்டு விழாவின் போது, தந்தை பெரியார் அவர்களது பெயரில் தமிழக அரசு சார்பில் சமூகநீதிக்காக உழைத்த ஒருவருக்கு பெரியார் விருது அளிக்கப்பட வேண்டுமென்று நமது இயக்கச் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை அங்கேயே ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் ஆண்டு, 1995 முதல் தமிழக அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்படும் என்று  அறிவித்தார்கள். நமது முதலமைச்சரின் இந்த முடிவினை செய்தி வாயிலாக அறிந்த சமூகநீதிக்காகப் பாடுபடும் வடபுலத் தலைவர்களில் சிலர் கூட என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெரிதும் பாராட்டினர். வெளிநாட்டுத் தமிழர்களும் தங்களது பெருமகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். “5 சவரன் பதக்கம் மற்றும் ஒரு பாராட்டு இதழுடன் கூடியது பெரியார் விருது என்பது அறிந்து பெரியார் தொண்டர்களும், சமூகநீதி விரும்பிகளும் மிகவும் மகிழ்வது திண்ணம். 9.09.1994: அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரிக்கு -கழக சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து தந்தி அனுப்பினோம். அந்த தந்தியில், அய்.ஏ.எஸ். நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் தங்களிடம் நேரில் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்து அதை அமல்படுத்தியதற்காக உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்; சமூகநீதியில் மற்றொரு சாதனையை நிகழ்த்தியதற்கு எங்கள் நன்றி’’ என அந்த தந்தியில் குறிப்பிட்டிருந்தோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சால்வை போர்த்தி பாராட்டு தெரிவிக்கும் ஆசிரியர் 10.09.1994 பிரெஞ்சு அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி கணேசனை அவரது இல்லத்துக்குச் சென்று பாராட்டினோம். நான் பொன்னாடை போர்த்தும் போது, அவர் நான் விளைந்த பூமி அல்லவா என்று கூறி என்னை அன்புடன் ஆரத்தழுவி மகிழ்ந்தார். உலகத் தமிழர்கள் சார்பாகத் தாய்க் கழகம் உங்களை மனமாரப் பாராட்டுகிறது என்றேன். சிறிது நேரம் நாட்டு நடப்புகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி மனம் விட்டுப் பேசினார். விடை பெறும் போது வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார். என்னுடன் கழகப் பொறுப்பாளர்களும் வந்திருந்தனர். 10.09.1994 பொன்னேரி கடைவீதியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களோடு திறந்து வைத்தேன். கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கழகத் தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க என ஒலி முழக்கம் செய்தனர்.  பொன்னேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.சந்திரராசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்விழாவில் சிறப்புரையாற்றுகையில், மூடநம்பிக்கைகளைச் சாடியும், கடவுளர் கதைகளின் பித்தலாட்டங்களையும், 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக்காக கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினேன். முடிவில் கழகச் செயல் வீரர் கா.வெள்ளைச்சாமி நன்றி கூறினார். சமூக நீதிக்காவலர்  கான்ஷிராம் உடன் ஆசிரியர் 17.09.1994 அன்று மயிலை மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சமூகநீதிக் காவலர் கான்ஷிராம் அவர்கள் பேசுகையில், இனி இந்தியாவை ஆளப்போகிறவர்கள் பெரியார் -அம்பேத்கர் வழி நடப்பவர்கள் தாம். பார்ப்பனியத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பெரியார் வலியுறுத்திய சுயமரியாதைக்காகப் போராடக் கிளம்பி இருக்கிறார்கள். இந்த சுயமரியாதைத் தத்துவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய உரிய நேரம் வந்துவிட்டது. அதில் தமிழ்நாடு தனித்து விளங்குகிறது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு கருத்தைச் சொல்ல வரவில்லை; கருத்துகளைப் பெற்றுச் செல்லவே வருகிறோம். பெரியார் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பாடுபட்டு வருபவரும் மிகச்சிறந்த தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களின் சிறந்த வழிகாட்டுதலால் தமிழகம் சிறந்து விளங்குகிறது’’ என கழகத்தின் சமூகப் பணியைப் பாராட்டி உரையாற்றினார். 19.09.1994 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் புலவர் ந. தங்கவேலன் இல்லத்து மணவிழா என் தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வட்டம் புலவர் ந.தங்கவேலன்-----சரோஜா ஆகியோரின் மகன் இராவணனுக்கும், மலைக்கோட்டாலம் நயினா --- சிவகாமி ஆகியோரின் மகள் கவிதாவுக்கும், மலைக்கோட்டாலம் கருப்பன் -- முனியம்மாள் ஆகியோரின் செல்வன் செம்மலைக்கும் புலவர் ந. தங்கவேலனின் மகள் கவிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, இரண்டு மணவிழாக்களையும் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினேன். சுயமரியாதை திருமண நிலையத்தில் மணமக்கள் எம்.பாஸ்கர் - என்.கலைச்செல்விக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவினை நடத்தும் ஆசிரியர் 21.09.1994 பெரியார் திடலில் அத்திப்பட்டை அடுத்த வள்ளூர் முனுசாமி -  லட்சுமி ஆகியோரின் மகன் எம்.பாஸ்கருக்கும், திருவொற்றியூர் விம்கோ நகர் ஆர்.நரசிம்மன் - விஜயா ஆகியோரின் மகள் என். கலைச்செல்விக்கும், ஜாதி மறுப்புத்  திருமணம் நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து; சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் சிறப்பாக  நடந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தேன்.  29.9.1994 சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், வேறு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். அவர் என்னை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்குச் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தேன். விமான நிலையத்தில் ஜனதா தள தலைவர் ஜி.ஏ. வடிவேலு, இரா. செழியன், தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, முரசொலிமாறன், முகமது சகி, ஆலடி அருணா ஆகியோரும் அவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர். வி.பி.சிங்கும் நானும் ஒரே காரில் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். வழிநெடுக வி.பி.சிங் அவர்களை வரவேற்று எழுதிய சுவரெழுத்துகளையும், பதாகைகளையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். சிறிது நேரம் கழகத் தோழர்களோடு உரையாடிவிட்டுச் சென்றார். 30.9.1994 திராவிடர் கழகப் பொன்விழா மாநாடு இரண்டு நாள்கள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. சென்னை பெரியார் திடலில் காலை 9:00 மணியளவில் புலவர் கோ. இமயவரம்பன் நினைவரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளோடு மாநாடு துவங்கியது. தந்தை பெரியார் சிலைக்கு கழக மத்திய நிருவாகக் குழு தலைவர் சிதம்பரம் கு. கிருட்டினசாமி மாலை அணிவித்தார். கழக மகளிரணி செயலாளர் க. பார்வதி திராவிடர் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! பொன் விழா காணும் திராவிடர் கழகம் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தோழர்களின் உரை வீச்சுடன் கருத்தரங்கம், பட்டிமன்றம், உரையரங்கம், கலைநிகழ்ச்சிகள் சிறப்புற நடத்தப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர் கோ. சாமிதுரை தலைமையில் தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கைகளை உயர்த்தி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆசிரியர் மாலை கழகப் பொன்விழா மாநாட்டில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் உரையாற்றுகையில்,  “சமுதாயத்தில் உள்ள எல்லா சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடக் கூடிய இயக்கம் பெரியார் இயக்கம். இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் 60-ஆம் ஆண்டு, 70-ஆம் ஆண்டு என்று விழா கொண்டாடுகின்றனர். அதனால் அந்த அமைப்புகள் எல்லாம் சாதிக்காததைச் செய்து முடித்து, பொன் விழாவைக் கொண்டாடுகிற திராவிடர் கழகம் ஏராளமான நன்மைகளை மக்களுக்கு அளித்துள்ளது. இந்தப் பொன்விழா மாநாட்டில் ஒன்றைத் தெரிவித்து கொள்கிறேன் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் அவர்களின் ஒத்துழைப்புடன் தந்தை பெரியார் சிலையை விரைவில் நிறுவும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ் ஆகியோர் 69 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டனர் என்றால் உங்கள் தலைவர் வீரமணி அவர்களின் முயற்சியால்தான் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தந்தை பெரியார் சமுக காப்பணி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கும் ஆசிரியர் மதவெறிகொண்ட வகுப்புவாத சக்திகள், இந்தியாவைப் பிளவுபடுத்தும் சக்திகள்- - அவற்றை முறியடிக்கும் வரை நமக்கு ஓய்வே இல்லை. தந்தை பெரியார் அவர்கள் கண்ட ஒரு புரட்சிகர மாறுதல்களை நாம் உண்டாக்கும் வரை நம் பணி முடியாது தொடர வேண்டும்“ என கழகத்தின் சாதனைகளைப் பாராட்டி, பல கருத்துகளை எடுத்துரைத்தார். திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில்  கலந்து கொண்ட சந்திரஜித் யாதவ் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியர் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்ற செனல் இடமருகு - டில்லி, முருகு சீனிவாசன்- - சிங்கப்பூர், கே.ஆர். இராமசாமி-- - மலேசியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முதல்நாள் நிகழ்வில் நான் உரையாற்றுகையில், “திராவிடர் கழகம் வன்முறையை விரும்பாத இயக்கம், ரகசியம் என்பது இல்லாத இயக்கம், பயங்கரவாதம் என்றோ, தீவிரவாதம் என்றோ இளைஞர்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற இயக்கம் அல்ல இந்த இயக்கம். நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கிப் போகப் போகிறோம்; போய்க் கொண்டிருக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டு வேறு யாருடைய நூற்றாண்டும் கிடையாது; தந்தை பெரியாருடைய நூற்றாண்டு; திராவிடர் கழகத்தினுடைய நூற்றாண்டு! சமூகநீதியின் நூற்றாண்டுக்கு நடைப்பயணத்தைத் துவக்கிவிட்டோம்; நடப்போம், கடப்போம்; நம்முடைய பணிகளை முடிப்போம், முடிப்போம்!” என்று உணர்ச்சி பொங்க பல கருத்துகளை விளக்கிப் பேசினேன். (நினைவுகள் நீளும்...)செய்திகளை பகிர்ந்து கொள்ள

கவிதை : இந்தி எதற்கு?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சீர்மிகுந்த நாட்டினிலே  இந்தி எதற்கு? சிக்கலினை வளர்ப்பதற்கு  ஆட்சி எதற்கு?   ஊர்கள்தோறும் வடவர்இந்தி  ஓட்டம் எதற்கு? ஒற்றுமையைக் கெடுப்பதற்கு  ஆட்சி போதாதோ?   சூழ்ச்சியொடும் இந்தியினைக்  கொணர்வ தெதற்கு? தொல்லையினை விலைகொடுத்து  வாங்கல் எதற்கு?   வெற்றிபெற்ற தமிழிருக்க  இந்தி எதற்கு? வீரர்களின் தோள்தினவால்  வீழ்ச்சியுறற்கா?   கற்பதற்கு வழிகளில்லை  கலகம் எதற்கு? காப்பதற்குத் திட்டமில்லை  கருத்துமில்லையே,   தெம்பில்லாத மக்களிடை  தீமை எதற்கு? திராவிடத்தில் ஒற்றுமையைத்  தீர்ப்பதெதற்கு?   வம்புசெயும் தீங்குவட  இந்தி எதற்கு? வளரும்இளம் தலைமுறையை  ஒழித்துக் கட்டவா?   அருவருப்பு வறுமையினை  அறுக்க மாட்டாமல் அதிகார வாள்எடுத்தே  அச்சுறுத்தல் ஏன்?   கரும்பிருக்க கனியிருக்க  வேம்பும் எதற்கு? கன்னித்தமிழ் இருக்க இந்திக்  கழுதை எதற்கு?   தாழ்வுயர்வு மாறவில்லை  சாதி சமயத்தின் தறுதலைகள் ஒடுக்கவில்லை  தலைமை எதற்கு?   வாழ்வுயர்த்தும் தாய்மொழியின்  வன்மை இருக்க வடமொழியின் வைப்பாட்டி  இந்தி எதற்கு?   கமழ்உரிமை விடுதலையின்  கட்ட விழ்க்காமல் கலக நச்சுக் கண்ணீர்ப்புகை  இந்தி கலப்பதேன்?   தமிழ்மொழிக்கே உலகையாளும்  தகுதியிருக்கு தமிழ்மகனே இந்திப்பாம்பின்  தலையை நறுக்கு!செய்திகளை பகிர்ந்து கொள்ள

சிறுகதை : பக்தி

தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அடுக்கடுக்காக, ஒன்றுக்கொன்று ஆதரவாக பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும் போது, என் இதயம் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. உதிக்கும் கதிரவன் ஒளிபட்டதும் அவை அத்தனையுமே விதிவிலக்கில்லாமல் மலர்ந்து சிரிக்கும். வட்டமிடும் வண்டு மலரை முத்தமிடும் போது ஒவ்வொரு இதழும் சிரிக்கும். ஒன்றுபட்டு வாழ்ந்த அந்தக் குடும்பத்தைத் துண்டுபடுத்திய அந்தச் சிறு நிகழ்ச்சி...! எவனோ ஒரு வேலையற்ற விவேகமில்லாத வீணன் அந்த மலரைச் செடியிலிருந்து பறித்து அதன் இதழ்களைப் பிய்த்துப் போட்டுவிட்டான். சேர்ந்து வாழ்ந்த போது அவைகளுக்கு ஜீவசக்தி ஊட்டிய அதே கதிரவன் ஒளியே அவை சிதறி விழுந்தவுடன்  கருக்கித் தீய்த்து விட்டது. என் மனம் இந்த அலங்கோலத்தைக் கண்டு அழுது கண்ணீர் வடித்தது. ஆனால்.......? மலரின் இதழ்களுக்கு நாங்கள் ஒன்றும் உயர்ந்து போகவில்லை என்று மனித இதயங்கள் சொல்லிக் காட்டும்போதுதான் வெட்கத்தாலும் வேதனையாலும் துடித்துப்போனேன். பொன்னம்பலக் கவிராயருக்கும் தங்கப்பனுக்கும் இடையே இருந்த ஆழமான நட்பு - கயிறு கட்டிப் பிணைத்த கதம்ப மாலையாக இல்லை - ஒன்றோடொன்று உருக்கி வார்த்த உலோகக் கலப்பாக இருந்தது. அந்தக் கலப்பைக் காய்ச்சித் தனித்தனியே பிரித்த நிகழ்ச்சி மிகவும் சாதாரணமானதுதான். ஒருநாள் பேச்சுவாக்கில் தற்செயலாகக் கவிராயர் திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தானே துணை என்று சொன்னார். தங்கப்பன் கொஞ்சம் சு.ம.வாடை படிந்தவன்! அவனும் விளையாட்டாகவே, தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே, அது எங்கே துணை செய்யப் போகிறது என்று சொல்லிவிட்டான். இந்த உரையாடலைவிட அது நிகழ்ந்த நேரந்தான் நெருப்பாக இருந்து அவர்கள் நட்பைப் பிரித்தது. அந்த ஊர்ப் பரந்தாமன் கோவில் பாழடைந்து கிடந்தது. சட்டபூர்வமான சோதாக்களுக்குப் பதிலாகக் கள்ள மார்க்கட் சோதாக்கள் அதைப் பஞ்சமா பாதகங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கப்பனுடைய சொற்கள் இந்த சோகச் சித்திரத்தைச் சுட்டிக்காட்டுவது போலக் கவிராயருக்குத் தெரிந்தது. ஆபத்பாந்தவன் அவருடைய இதயத்தின் ஆழத்தில் அவதாரமெடுத்து அபயம், அபயம் என்று கதறினார். அன்றிலிருந்து கவிராயரும், தங்கப்பனும் கிழக்கும் மேற்கும் ஆனார்கள். இருவர் உள்ளங்களும் ஈட்டி முனைகளாக உருப்பெற்றன! ஏமாளித்தனத்தின் சின்னம் என்று பரிதாபப்பட்டான் தங்கப்பன். தடிகொண்டு தாக்கப்பட வேண்டிய படமெடுத்தாடும் நச்சுப்பாம்பு என்று ஆத்திரப்பட்டார் கவிராயர். வேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயர் கைஆயுதங்களாக ஆயின; விடுதலை, திராவிடநாடு போர்வாள், கொஞ்சம் சொந்தப்புத்தி, இவைதாம் தங்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங்களும், அஸ்திரங்களும்! ஊர் இரண்டு பட்டது. சொற்போரில் தொடங்கி மற்போரில் வந்து முடிந்தது இந்தப் போராட்டம்! மலர்க்குலம் மனித குலத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது. இத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன் மீது அந்த ஊரில் புதிதாக நிலம் வாங்கிய செட்டியாருக்கு அக்கறை பிறந்தது. வண்டி வண்டியாக வந்திறங்கிய கருங்கல்லும் செங்கல்லும் வானளாவும் மதிலாகவும் கோபுரமாகவும் உயர்ந்தன. எவனோ எங்கிருந்தோ வீசியெறிந்த வாழைப்பழத்துண்டு எப்படியோ நம் வாய்க்குள் வந்து விழுந்ததால் ஏற்படும் திகைப்பும் மகிழ்ச்சியும் கவிராயர் உள்ளத்தைக் கட்டி அணைத்தன. நினைத்து நினைத்து நெக்குருகினார். மகிழ்ச்சியில் மல்கிய கண்ணீர் கசிந்து கசிந்து தரையில் விழுந்து காய்ந்தது! பக்தர்களை ரட்சித்துத் துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப் பார்க்க அவருக்கு பரவசமாக இருந்தது. தங்கக் கலசம் - அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள்! நீர்வீழ்ச்சியிலிருந்து தெறித்து விழும் நீர்த்திவலைகள் உடல்மேல் படும் போது உண்டாகும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது. அதே நேரத்தில் கோவிலின் வாயிற்படியில் நின்று தங்கப்பனுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள் மேல் பதிந்திருந்தது. காய்ந்து வறண்டு போன அவர்களுடைய உடல்கள் - அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவனின் வெம்மை! இத்தனை உழைப்பும் எவனோ ஒரு தனி மனிதன் புகழுக்கும் பெருமைக்கும் தானே என்பதை நினைத்த போது அவன் நெஞ்சு பிளந்தது. அவர்கள் இருவரும் கோவிலிலிருந்து ஒன்றாகவேதான் திரும்பி வந்தார்கள். இரட்டை மாட்டி வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் வண்டிக்காரன் சாட்டையால் விரட்டப்பட்டு வெருண்டோடுவது போல, வேகம் வேகமாக மவுனமாக ஒருவரொடொருவர் பேசிக்கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர். அய்யா! ஏழை! காலாணக் கொடுங்கோ! கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்! தீனமான அந்தக் குரல் இருவரையுமே திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு பேசும் எலும்புக்கூடு, பிணமாகாமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லாமற் சொல்லி நின்றது. கடவுள் உனக்கு நல்லகதி காட்டுவாரப்பா என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே நடந்தார் கவிராயர். தங்கப்பன் ஒரு காலணாவை எடுத்து அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்தான். கவிராயரைக் குறும்பாக ஒரு முறை பார்த்தான். நல்லவேளை! கடவுள் இதற்காகவது உபயோகப்படுகிறாரே! அதுவரையில் லாபம்தான்! என்று சொல்லிக் கொண்டே நடந்தான். இந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சி அன்றிரவு தங்கப்பன் வீட்டெதிரே ஒரு பெருங் கூட்டத்தையே கூட வைத்து விட்டது. கவிராயர் பக்தியால் தூண்டப்பட்டு ஆவேசத்தோடு கூச்சலிட்டார். அவர் கட்சி ஆள்கள் வெறிபிடித்துக் கூத்தாடினார்கள். செட்டியார் கொடுத்த காசும் அவர்களோடு சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தது. இவற்றால் ஏற்பட்ட - உருவான பலன் தங்கப்பன் உடம்பிலிருந்து ஒரு சில எலும்புகள் விழுந்தது தான்! குற்றுயிரும் குலை உயிருமாக அவனை ஆக்கிவிட்டு அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது. இந்த நிகழ்ச்சி செய்தியாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவனுக்கு அந்த ஊர் மக்கள் நற்பாடம் கற்பித்தனர். என்ற தலைப்போடு வெளியாகி பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா வரை பரவியது. அடுத்த நாள் மாலை கவிராயரைத் தேடிச் செட்டியாரே வந்துவிட்டார். நம்ம கோவிலுக்கு அதன் மகிமையை விளக்கி நீங்கதான் ஒரு ஸ்தல புராணம் எழுதித்தரணும் என்ற வேண்டுகோளை வினயமாகத் தெரிவித்தார். உடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்படி அந்தரத்தில் ஊசலாடும் என்பது இதுவரைக்கும் எவருக்கும் தெரியாது. ஆனால் கவிரயார் அதை உண்மையாகவே அனுபவித்துக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து கவிராயர் இரவும் பகலும் அகராதியும் நிகண்டுமாகக் காலங் கழிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவ்வப்போதே அரங்கேற்றம் செய்த கவிராயருக்கு அந்தப் புது ஸ்தல புராணம் அச்சாகி வந்ததும் எவ்வளவு இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் அப்போது தான் ஈன்ற கன்றை ஆசையோடு நாவால் தடவிக் கொடுத்தார். ஒவ்வொரு செய்யுளிலும் கற்கண்டும் கனிச்சாறும் கலந்து ஓடுவதைப் போலத் தோன்றியது. அவருக்கே அவற்றை எழுதும் போது அவருக்கே புலப்படாத உட்பொருளும் மெய்ப்பொருளும் அவற்றில் பொதிந்து கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தார். கவனிப்பாரற்றுக் கிடந்த அகராதியும் நிகண்டும் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தன! கவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பாராட்டித் தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் விமரிசனம் செய்தன. அவைகளைப் படித்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சி அவரைத் தன் நிலையில் இருக்கவொட்டாமல் செய்தது. அத்தனை புத்தகங்களையும் அப்படியே எடுத்துப் போய் அந்தக் கருணை வள்ளலின் காலடியில் காணிக்கையாக வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் தூண்டப்பட்டு, வேக வேகமாக ஓடினார் செட்டியார் வீட்டை நோக்கி! உள்ளே செட்டியார் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் கவிராயர் வெளியில் நிற்க வேண்டி ஏற்பட்டது. ஏது, இடிஞ்சு கிடந்த கோவிலைப் புதுப்பிச்சிருக்காப்போலே இருக்கே? புதுக்குரல்! கவிராயர் உள்ளத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் உருவானது, ஏதோ இந்த ஊர்க்காரவுங்களுக்குத்தான் அக்கறையில்லாமே இருக்குது. நாமாவது செய்யலாம் என்றுதான். அப்படியே அதன் எதிரொலியைச் செட்டியார்  வாயிலிருந்து எதிர்பார்த்தார் கவிராயர். இல்லை, புதிசா இந்தக் கிராமத்திலே ஒரு இருநூறு வேலி நிலம் வாங்கினேன். இந்தக் காட்டுப் பய ஊருக்கு வந்து போகப் பயமாயிருந்துச்சு. செலவோடு செலவா இதைக் கட்டித் தொலைச்சுட்டா நாலு பேரு வந்து போக இருப்பாங்க. நமக்கும் பயமில்லாமே இருக்கும் என்றுதான்... டணார் என்று தொடங்கித் தொடர்ந்து ஒலித்தன. ஆண்டவன் ஆலயத்திலிருந்து மணியொலிகள். கவிராயர் கையிலிருந்த புத்தகங்கள் நழுவிக் கீழே விழுந்தன. திரும்பி வேகமாக நடந்தார்; ஓடினார்; பறந்தார். அடி தாங்காது உயிர் துறந்த தங்கப்பன் பிணத்தை எரிக்கச் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தனர். அதன் எதில் போய் விழுந்து தங்கப்பா என்று கதறினார் கவிராயர். அப்பன் ஆலயத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். தங்கம் அவர் தலைமையில் கிரீடமாக ஒளிவிட்டது. கோவில் மணிகள் மட்டும் நிதானந் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன.செய்திகளை பகிர்ந்து கொள்ள

மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (16)

நுரையீரல் அழற்சி (PNEUMONIA) இதயம் கைப்பிடி அளவிலேயே உள்ள ஓர் இன்றியமையாத - ஓய்வில்லாமல் வேலை செய்யும் - உடல் பொறி. ஆனால் இதயத்தை ஒட்டியுள்ள நுரையீரல் இதயத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிதான, ஓய்வில்லாமல் உழைக்கும் இன்னொரு உடல்பொறி, நமது மார்புப் பகுதி முழுவதும் பரவியுள்ள நுரையீரல், விலா எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. இதயத்தைப் போல் கடுமையான தசைகளால் உருவாகாமல், மிகவும் மென்மையான காற்றழைகளால் உருவானதே நுரையீரல் (Lungs)  நுரையீரல் அடிப்படைச் சொல் பல்மோ என்னும் இலத்தின் மொழியிலிருந்து உருவானது. அதே போல் கிரேக்கச் சொல்லானா நியுமோ (Prneumo) என்பது காற்று என்ற பொருளுடன் இணைந்துள்ள உறுப்பான நுரையீரலைக் குறிக்கும். மூக்கின் வழியே நாம் உள்ளிழுக்கும் (Inspiration) காற்று செல்வதும், அதன் வழியே காற்று வெளியேறும் செயல்பாட்டையே மூச்சுவிடுதல் (Respiration) என்கிறோம். மூச்சுக்குழாய் இரண்டாகப் பிரிந்து வலப்பக்க, இடப்பக்க என இரண்டு பக்க நுரையீரல்களுக்கும் காற்றுப் பரிமாற்றத்திற்கு உதவும். இந்த  மூச்சுக்குழாய் மேலும் பல நுண்ணிய சிறு, சிறு குழாய்களாக (Bronchioles) மாறும். நுரையீரல் வலப் பக்கம் மூன்றுபிரிவுகளாகவும் (Lobes), இடப் பக்கம் இரண்டு பிரிவுகளாகவும் இருக்கும். நுரையீரல் பல லட்சக்கணக்கான நுண் காற்றறைகளால் (alveolus) ஆனது. மூச்சுக்குழாய், மூச்சுக் கிளைக் குழாயாக (Bronchus) மாறி ஒவ்வொரு நுண்காற்றறையிலும் காற்றுப் பரிமாற்றம் நிகழும். இந்த நுண் காற்றறைகள், நுண் மூச்சுக்குழாய் வழியே வரும் காற்றிலிருந்து உயிர் மூச்சுக் காற்றை (ஆக்சிஜன் - Oxygen) உறிஞ்சு கொண்டு, உடலில் உற்பத்தியாகும் கரியமிலக் காற்றை (Co2) - கார்பன் - டை - ஆக்சைடு) வெளியேற்றும். இதையே மூச்சுவிடுதல் என்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 22000 முறை மூச்சுவிடும் நாம், 9000 கன அடி காற்றை உள்ளிருந்து வெளிவிடுகிறோம். உறங்கும் போதும், இயங்கும் போதும் இடைவிடாமல் இந்தச் செயல்பாடு நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 20 முறை இவ்வாறு நாம் மூச்சு விடுகிறோம். இதயத்தின் வலப்பக்க கீழறையிலிருந்து புறப்படும் நுரையீரல் தமனி, நுரையீரலில் உள்ள இந்தக் காற்றறைகளுக்கு இரத்தத்தைக் கொண்டு வரும். கழிவுப் பொருள்கள் கலந்த கெட்ட இரத்தமே அது. நுரையீரல் தமனி, மேலும், மேலும் சிறிய, சிறிய குழாய்களாக மாற்றி, தந்துகிகளாக (capillaries) மாறி, இரத்தத்தை நுரையீரலில் உள்ள நுண்காற்றறைகளுக்குக் கொண்டு செல்லும். இந்தத் தந்துகளில் வந்த கரியமிலக் காற்று கலந்த இரத்தத்திலிருந்து, அதை வெளியேற்றி, உயிர் மூச்சுக்காற்றை (ஆக்சிஜன்) இரத்தக் குழாய்களுக்குள்  செலுத்தி, அதை நல்ல இரத்தமாக மாற்றி அனுப்பும். இதையே காற்றுப் பரிமாற்றம் (Gaseous exchange) என்கிறோம். இப்படி பல லட்சம் நுண் காற்றறைகளிலிருந்து வெளியேறும் கரியமிலக் காற்று மூச்சுக்குழாய்கள் வழியே வெளியேற்றப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட நல்ல இரத்தம் தந்துகளின் வழியே, சிறிய, பெரிய இரத்தக் குழாய்களில் செலுத்தப்பட்டு, முடிவில் நுரையீரல் சிரை வழியே இதயத்தின் இடப்பக்க மேலறைக்கு  (Left auricle) வரும். அங்கிருந்து கீழறைக்கு செலுத்தப்படும் நல்ல உயிர் மூச்சுக்காற்று கலந்த (Oxygenated blood) இரத்தம் உடல் முழுவதும் செலுத்தப்படும் . இதன் மூலம் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்கத் தேவையான உயிர்மூச்சுக்காற்றைப் பெறும். குருதியில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients) உயிர் மூச்சுக்காற்று (Oxygen), இயக்கு நீர்கள் (Hormones) இரத்த அணுக்கள் (Blood Cells)  கலந்து உடலின் பல பாகங்களிலிருக்கும் உயிரணுக்களுக்கு  (Cells) செலுத்தும். இதன் மூலம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் இயக்குதல் நிகழும். இதனால் நோய் எதிர்ப்பாற்றல், உடல் வெப்பநிலை சீரமைத்தல் (Thermoregulation) உடல்நீர்ச் சமநிலை  (Homeostasis) போன்றவை சரியான முறையில் நிகழும். எப்படி இதயம் ஓய்வின்றி தன் வேலையைச் செய்யுமோ, அதே போல்தான் நுரையீரலும்  தன் வேலையை ஓய்வின்றி நாள் முழுதும் செய்து கொண்டேயிருக்கும். நுரையீரலைச் சுற்றி வெளிப்படலம், உள்படலம் என இரண்டு உறைகள் உள்ளன (Pleura). இந்த இரண்டு படலங்களுக்கும் இடையில் ஒரு திரவம் இருக்கும். மூச்சு விடும் பொழுது, நுரையீரல் படலம் நுரையீரலைப் பாதுகாக்கிறது. மூளையில் உள்ள முகுளம் தான் (Medulla Oblongata) இந்த மூச்சு விடுதலை முழுமையாகக் கண்காணித்து, செயல்பட வைக்கிறது. நம் மூக்கிலிருந்து துவங்கும் மூச்சுக்காற்று மண்டலம், நுரையீரல் செயல்பாட்டின் மூலம் நிறைவடைகிறது. மூக்கில் இருக்கும் முடிகள், மூலம், தூசு, தும்புகள், வடிகட்டப்படுகின்றன. மூச்சுக்குழாய்களில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் தூசுகள், நுண்துகள்கள், நுண்கிருமிகளையெல்லாம் வெளியேற்றும். நுரையீரல் அழற்சி  (PNEUMONIA) நுரையீரல் அழற்சி பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளோம். நிமோனியா என்னும் சொல் நம் காதில் அடிக்கடி விழும் சொல்லாகும். இனி அந்நோயைப் பற்றி நோக்குவோம். நோய் காரணிகள் : நுரையீரல் அழற்சி 95 சதவிகிதம், நோய்க் கிருமிகளாலும், (Bacterias) நுண்ணியிரியான வைரஸ்களாலும், பூஞ்சான்களாலும் (Fungus) ஏற்படுவதாகும். வெகுஅரிதாக மார்பில் ஏற்படும் காயங்களால், விலா எலும்பு முறிந்து நுரையீரலை பாதிப்பதால் ஏற்படும். நீமோகாக்கஸ் நிமோனியே  (Pneumococcas pneumonia) என்ற நோய்க்கிருமியே பெரும்பாலும் இந்நோய்க்குக் காரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது பல வைரஸ்களாலும், பூஞ்சைகளாலும், மருத்துவமனை நோய்த் தொற்றாலும் (Hospital Cross Infection) இந்நோய் வரும் என நிரூபணமாகியுள்ளது. நோய்க் கூறியியல் : நோய்த் தொற்று, நுரையீரலில் ஏற்படும்போது, நுரையீரலில் உள்ள நுண்ணறைகள் அனைத்திலும் கிருமிகள் பரவும். உடன் அழற்சிக்கான மாற்றங்கள் நுரையீரலில் ஏற்படும். அதன் விளைவாக நுரையீரலின் நுண்ணறைகளில் நீர் சுரக்கும். காற்றைவிட, நீர் அடர்த்தியினால் நீர், நுரையீரலின் கீழறைகளில் சேர்ந்துவிடும். அதனால் மூச்சுவிடுவதில் இடைஞ்சல் ஏற்படும். இதுவே நுரையீரல் அழற்சியால் ஏற்படும் அறிகுறிகளுக்கு அடிப்படை. நோயின் அறிகுறிகள் : நுரையீரல் அழற்சி, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றில் மிகவும் அதிகளவில் ஏற்படும் நோய்த் தொற்றாகும். மேல் மூச்சு உறுப்புப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றே இதற்குக் காரணம். நாளடைவில் கீழ் மூச்சுப் பாதை வழியே நோய்த் தொற்று, நுரையீரலின் அடிப்பகுதி வரை பரவும். அதனால் நோய்கிருமிகள் ஏற்படுத்தும் விளைவுகளால், நுரையீலின் அடிப்பகுதியில் நீர்சேரும். இதனால் நுரையீரலின் முழு அளவு காற்றுப் பரிமாற்றம் ஏற்பட முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக மூச்சிறை, மூச்சுவிடுவதில் சிக்கல் உண்டாகும். நோய்த் தொற்றினால் மேலும் பல அறிகுறிகளும் தெரியும். றகடும் காய்ச்சல் *இருமல், தொடர்ச்சியான இருமல் *தொண்டை கரகரப்பு, தொண்டை வலி றசளி, மூக்கு ஒழுகுதல் *கெட்டியான சளி *பசியின்மை *வாந்தி *தொடர்ச்சியான இருமலினால், மார்பு வலி *அடிவயிற்றில் வலி *மூச்சு விடுவதில் தொல்லை *அசதி, களைப்பு *மூச்சுத்திணறல் *மூச்சுத்திணறலால் படுக்கையில் வசதியாக படுக்க முடியாது *உட்கார்ந்து இருப்பதே வசதியாகக் தெரியும் சில வேளைகளில் மூச்சுத்திணறலால், உடனடி மருத்துவம் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும். நோய் ஆய்வு : மருத்துவர்கள் சில சோதனைகளை மேற்கொள்வர். இதில் இரத்தப் பரிசோதனை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சளி பரிசோதனை செய்யப்படுகிறது. *மார்பு எக்ஸ்ரே - ஒரு முக்கிய ஆய்வு *கணினி ஊடுகதிர் நிழற் வரைவு (C.T.Scan) *காந்த அதிர்வலை ஊடுகதிர் நிழற் வரைவு (M.R.I) மேற்கண்ட ஆய்வுகள் மூலம் நோயின் தன்மை, பாதிப்பின் அளவு, எவ்வகை நோய்க்கிருமிகள் தாக்கியுள்ளன. அவை எந்த மருந்துகளால் கட்டுப்படுத்தப்படும். மேலும்   ஏதாகிலும்  ஒவ்வாமை உள்ளதா என்பவற்றை வெகு துல்லியமாக அறிய முடியும். மருத்துவமுறைகளையும், நோயின் அறிகுறிகளுக்குகேற்பவும் அதன் தீவிரத் தன்மைக்கேற்பவும் மருத்துவர்கள் முடிவு செய்வர். ஆரம்ப நிலையிலேயே செய்யப்படும் மருத்துவம் சிறந்த பலனைத் தரும். நாள்பட்ட நோய், தீவிர மருத்துவம் மூலமே குணமாகும். மருத்துவம்: இந்நோய் வருமுன் காக்கும் தடுப்பு மருந்துகளும் உள்ளன. ஆனால், எல்லா நோய்களுக்கும் தடுப்பு மருந்து பயன்படாது. வைரஸ்களால் உண்டாகும் மூச்சு நோய்களுக்குத்தான் தடுப்பு மருந்து பயன்படும். பெரும்பாலான நுண் கிருமிகளால் (Bacteria) ஏற்படும் நோய்களுக்கு, நுண்ணுயிர் கொல்லிகள் ..(Anti - Biotics) சிறந்த பலனைத் தரும். நோயின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால் மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிர் மூச்சுக்காற்று (Oxygen Therapy) மருத்துவமும் தேவைப்படலாம். இதன் அளவு (இயல்பாக sPo2) அளவு  85 முதல் 95 வரை இருக்க வேண்டும். சில நேரங்களில் செயற்கை மூச்சுப் பொறியையும்  (Ventilator) பயன்படுத்தும் நிலையும்  ஏற்படலாம். எந்த வகையான மருத்துவம் என்பதை தேவைக்கேற்ப மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும் இந்நோய்  நன்றாகும் வாய்ப்புகளே அதிகம். புகைபிடிப்பவர்கள் அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். புகைப் பழக்கம் நோயின் தொல்லைகளை அதிகமாக்கும். (தொடரும்...)செய்திகளை பகிர்ந்து கொள்ள