Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

பறை-5


முனைவர் மு.வளர்மதி

இங்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலக்கியச் சான்றுகள் மூலம் பண்டைக் காலத்தில் தமிழர் எருமைக் கன்றின் தோலைத் தோற்கருவிகளுக்குப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. தற்காலத்தில் ‘பறை’ கருவிகளுக்கு எருமைக்கன்றின் தோலையும், ஆட்டுத் தோலையும் பயன்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இளங்கன்றாக உள்ள சுமார் 3 அல்லது 4 மாத எருமைக் கன்றின் தோலை மட்டுமே ‘பறை’க்குப் பயன்படுத்துகின்றனர். எருமைக் கன்றின் தோலை முதலில் நன்றாகக் காயவைத்து மயிர் நீக்கிச் சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற வைக்கின்றனர். புளியங்கொட்டையை நசுக்கி ஊற வைத்து அதன் சாற்றை சட்டியிலிட்டு கொதிக்க வைக்கின்றனர். இதை மேளக்குண்டில் காய வைக்கின்றனர். பிறகு தோலைப் போர்த்தி வாரால் இறுக இழுத்துக் கட்டுவதற்காக 27 அல்லது 29 துளைகளிடுகின்றனர். மேற்பகுதியில் போர்த்தப்படும் அதே எருமைக் கன்றின் தோலினால் வார் தயாரிக்கின்றனர். தோலைத் தேவையான அளவு சீவி வாராக முறுக்கி ஏற்றபடி செய்து 3/4 வளையத்தில் கட்டுகின்றனர். பறையின் மேற்பரப்பை நெருப்பனலில் சூடுகாட்டிக் கொட்டும்பொழுது  அடிப்பதற்கு எளிதாகவும், அதிகத் தொலைவு பறையின் ஓசை கேட்கும்படியாகவும் இருக்கும்.

நெல்லை, சிதம்பரனார் மாவட்டங்களில் வெள்ளாடுகளின் தோலினைப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்து வருகிறது. இவர்கள் பறை மேளம் செய்யும் முறையும் சற்று வேறுபட்டதாக உள்ளது.

‘மேளம் செய்வதற்கெனக் கன்றுக் குட்டிகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் தோல்களைப் பயன்படுத்துகின்றனர். முதலில் தோலின் வெளிப்புறத்தில் உள்ள உரோமங்களை நீக்குவதற்காக அவற்றை நிழலில் சுருட்டி வைத்து அழுகப் பண்ணுகிறார்கள். மூன்று நாட்களுக்குப் பின் ரோமத்தை நீக்கிச் சூரிய ஒளியில் உலர்த்துவர். தோலில் இருக்கும் அழுகிய பகுதிகள் நாற்றம் நீங்குவதற்காகச் சுண்ணாம்புப் பொடி தூவி வைக்கப்படுகிறது. நன்றாக வெயிலில் உலர்த்திச் சுமார் ஒரு வாரம் கழித்து ஆவரை என்ற செடியின் பட்டையை உரித்து அதனுடன் நீரில் ஊற வைக்கப்படுகிறது. இந்தச் செடியின் பட்டையில் உள்ள துவர்ப்புப் பொருட்கள் தோலை நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக்கும் எனக் கூறப்படுகிறது. இறுக்கமும் செறிவும் தருவது அந்தப் பசை. சுமார் மூன்று அல்லது ஐந்து நாட்கள் இந்த நீருடன் ஊறியபின் வெயிலில் உலர்த்தி மேளத்திற்கென உள்ள உருளையின் இரு பக்கத் துளைகளிலும் வைத்துக் கட்டப்படுகிறது. இளம் கன்றுகளின் தோலில் செய்யும் கருவிகளில்தான் ஓசை நயம் இருக்கும் என்பதால் அவற்றிற்கே முக்கியத்துவம் அளித்துத் தயார் செய்யப்படுகிறது. மேளம் அடிக்க அரளி, ஆவரை, மூங்கில் ஆகிய தாவரங்களின் கம்புகள் உலர வைத்துப் பயன்படுத்தப்படுகின்றன.’’ தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு வேறு முறைகளில் ‘பறை’ கருவியைத் தயாரிக்கின்றனர்.

தஞ்சைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் புதாற்றங்கரையில் ரெட்டிப்பாளையம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் கிராமம் முழுக்க 200 தலித் குடும்பங்கள் இசைக் குடும்பங்களாக உள்ளன. இந்தக் குடும்பங்களின் உறுப்பினர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கலைஞர்களாகவே உள்ளனர். தப்பாட்டம், தவில், நாதஸ்வரம், உறுமி, பம்பை, கிடிகட்டி, கொம்பு, உடுக்கு, ஒத்து, ஜால்ரா, கடைசிங்கி, கும்மி, கோலாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கரடி, பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டம், மாடு ஆட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பரம்பரை இசைக்கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள் இசைக் கருவிகளைத் தாங்களே செய்து கொள்கின்றனர்.

“நாங்க வாசிக்கிற தப்பு தவில் எல்லாமே நாங்களேதான் செய்துக்குவோம். அதாவது கட்டை மட்டும் கடையிலே வாங்கிப்போம். தோல் போடுவதை நாங்களே செய்துக்குவோம். எருமைக் கன்னுகுட்டியோட தோலிலேதான் செய்ய முடியும். கறி போடுகிறவங்ககிட்ட தோலை வாங்கிக்குவேன். தோல் மட்டுமே ரூ.150லிருந்து 250 வரை இருக்கும்.தப்புக்கட்டை ரூ.250 ஆகும். இல்லேன்னா 4 கட்டை வைத்து ஒட்டிச் செய்வோம். முன்னாடியெல்லாம் வார்போட்டுத் திருவி செய்வோம். இப்பல்லாம் போல்ட்டு போட்டு முடுக்கி விடுகிறோம். தவில் மட்டும் ரூ.3000லிருந்து 12,000 வரை இருக்கும். யாழ்ப்பாணத் தவில் 8000 ஆகும். திருவாடுதுறை, நரசிங்கம்பேட்டை, உடையார்பாளையம் இங்கிருந்தெல்லாம் கட்டை வாங்குவோம். தப்பு வாத்தியம் பலா, வேம்பு மரத்தில் செய்றது. நாதஸ்வரம் கருங்காலி மரத்தைக் குடைந்து செய்வாங்க. இதுக்குத் தனித்தனியா பசை எல்லாம் வாங்கிச் செய்றது ரொம்ப கஷ்டமான வேலை’’ என்று கூறுகிறார் நாதஸ்வரக் கலைஞர் குமார்.

இசைக் கருவிகளுக்குத் தோலைப் பதப்படுத்துதல் வேலை மிகவும் கடினமானது என்று கூறினாலும் தொடர்ந்து இம்மக்கள் இதைச் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் சுப்ரமணி என்ற தவில், நாதஸ்வரக் கலைஞர் தம் அனுபவத்தை பின்வருமாறு கூறுகிறார். “தோலைப் பதப்படுத்துறதுதான் ரொம்பவும் கஷ்டமான வேலை தொடர்ந்து வேலை செஞ்சா ஒரு வாரம் ஆகும். காயவச்சு, மயிரை எல்லாம் எடுத்து, பசை தடவி, ஊறவச்சு மறுபடியும் காயவச்சு. இப்படி பெரிய வேலை. இதுக்கு ‘வளை மூட்டுதல்’ன்னு பேரு’’ என்று தோற்கருவிகள் தயாரிப்பில் ஈடுபடும் இக்கலைஞர் கூறுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் ‘ஸந்தால்’ என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் குரங்குத்தோலைக் கொண்டு ‘டும்டா’ (தம்பட்டம்) என்ற பறையும் ‘ஓராவோன்’ சமூகத்தைச் சார்ந்தோர் ‘மந்தார்’ என்ற பறையும் தயாரிக்கின்றார். ஓராவோன் மக்களிடையே ஒரு சிறுவன் பாடுவதாக உள்ள பாடல் பின்வருமாறு:

“அந்த மலைக்கோட்டையின் மீது
அவரைக்காய்காய்த்துக் குலுங்குகிறது
அதைப் பார்க்கும் குரங்கை நோக்கி
நான் கூறினேன்
நான் உன்னை என் வில் அம்புகளைக் கொண்டு
கொல்வேன். உன் தோலை உரிப்பேன்.
அத்தோலைக் கொண்டு ஒரு மந்தார் தயாரிப்பேன்.
நான் அதை வாசிக்கும்போது கிராமப் பெண்கள்
வந்து என்னைச் சூழ்வர்’’

‘இந்த சுவையான பாடலிலிருந்து சில ஜாதியினரிடையே குரங்குத் தோலைக் கொண்டு பறைகள் செய்யப்பட்டு வரும் வழக்கத்தை நாம் அறிகிறோம். ஸந்தால் ஜாதியினரும் குரங்குத் தோலை உபயோகித்து ‘டும்டா’ என்ற தம்பட்டத்தை அமைக்கின்றனர். குரங்குகளைப் பிடிக்க அவர்கள் அவை வாழும் காடுகளுக்குச் செல்கின்றனர். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து ‘ஹநுமான் மந்திரத்தை’ ஓதுகின்றனர். அதனால் மயக்கமடைவதாகக் கருதப்படும் குரங்குகளைப் பிடித்துக் கொன்று தோலை உரித்துப் பறை செய்கின்றனர். இதனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனக் குழுக்களாக வாழும் மக்கள் கூட்டம் பறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளன என்பதையும் பல்வேறு விலங்குகளின் தோலையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அறியலாம்.

தோற்கருவிகளுக்குப் பிண்டமாகிய உடல்பகுதியைக் கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, குரவம் ஆகிய மரவகைகளைக் கொண்டு செய்வது சிறந்தது என்று பஞ்சமரபு நூல் குறிப்பிடுகிறது. இன்றும் முழவுக் கருவிகளுக்கு இவ்வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘இம்மரங்கள் வடுப்படாமல், பொத்துப்படாமல், சாவாமல், மூவாமல், இளமையின்றி நடுவயதினவாய் உயர்ந்த சமதளமான நிலத்துளவான மரங்களே முழவுகள் செய்யத் தகுந்தவை’ என்ற குறிப்பு பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளைப் பற்றிய நுண்ணறிவைப் புலப்படுத்துகிறது.

வட ஆற்காடு மாவட்டத்தில் பலகை, சட்டி, டோல் எனும் மூன்று வகையான பறை பயன்படுத்தப்படுகிறது. ‘பலகை’யைத் தோளில் மாட்டியவாறும் ‘சட்டி’யை இடுப்பில் கட்டியவாறும், ‘டோல்’ கழுத்தில் மாட்டியபடியும் ஈச்சங்குச்சிகளால் அதன் கண்ணில் அடிக்கின்றனர். இவை திருமணம், திருவிழா, மஞ்சள் நீராட்டுவிழா, சீர்வரிசை கொண்டு செல்லுதல், கரகாட்டம், புலியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள், இறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் பொழுது பயன்படுத்தப் படுகின்றன. அந்தந்த நிகழ்ச்சிகளுக்கேற்ப பறையின் ஒலிப்பு முறை, அந்த ஒலிப்புக்கேற்ப வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பல்லாண்டுகளாக 21 வகையான தாள முறைகள் கையாண்டு வந்ததில் தற்காலத்தில் 7 வகையான ஒலிப்பு முறைகள் மட்டுமே பெரும்பான்மையாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஓரம், நடுவம், பக்கம், தலை, பாதம் ஆகியன பறையின் ஒலிப்பு இடங்களாகும். பறை முழக்கத்தில் பயன்படுத்தப்படும் தாள முறைகளில் மூன்றலகுத்தாளம், நான்கலகுத்தாளம், அய்ந்தலகுத்தாளம், ஏழலகுத்தாளம் ஆகிய நான்கு அளவுத் தாளமுறைகளும் மிக முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 32 தாள முறைகள் அறிந்த கலைஞர்களும் உள்ளனர்.

(தொடரும்...)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit பறை-5 in FaceBook Submit பறை-5 in Google Bookmarks Submit பறை-5 in Twitter Submit பறை-5 in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.