சிகரம்
முன்னம் சுரவாதத்திலும் அனல் வாதத்திலும் வென்று, புனல் வாதத்திலும் கலந்துகொள்ள திருஞானசம்பந்தர் வைகைக் கரையினை அடைந்தார். அவர் பின்பு, அரசனும் மாதேவியாரும் சேர்ந்து வந்தனர். சமணர்களும் ஒரு கூட்டமாக வேறு ஒரு பக்கத்தில் தனித்து வந்தனர்.
சமணர்கள் இட்ட ஏடு ஆற்றோடு செல்லல்:
புகழினால் மிக்க பண்புடைய வைகையாறு, கார்காலம் வந்தபோது காமுறும் மகளிரது உள்ளம், தமது கணவன்பால் விரைந்து செல்லுமாறுபோல், விரைந்து கடலை நோக்கி அலைகளினால் ஆரவாரித்துக்கொண்டு சென்றது. திருஞானசம்பந்தரும் பிறரும் ஆற்றில் நீர் வேகமாகச் செல்லும் இடத்தின் பக்கத்தை அடைந்த உடனே அரசன், “இருதிறத்தீராகிய நீங்கள் இசைத்தபடி நீவிர் குறித்த ஏடுகளை ஆற்றில் இடுங்கள்’’ என்று கூறினான்.
“முதலில் தோற்றவர் பின்னும் தோல்வி அடையார்’’ என்று நெற்பதர்போல உள்ளீடில்லாத அமணர்கள் மனத்துட்கொண்டு ஏட்டினை முதலில் ஆற்றில்விடத் துணிந்தவராய் ஆரூகத நூலுள் கூறுகின்ற பொருளின் தொகுதியினை, “அத்தி நாத்தி’’ என்று ஏட்டில் எழுதி, ஆற்றில் விரைந்து ஓடும் நீரினைக் கண்டும் அவா மேலீட்டினாலே இட்டார்கள். அப்பொழுதே அதனை ஆற்று நீர் விரைந்து அடித்துக்கொண்டு கடலைநோக்கிச் சென்றது. சமணர்கள் ஆறுகொண்டோடும் ஏட்டினைப் பின்தொடர்ந்து எதிரே அணைபவர்போல ஆற்றின் கரையின்மேல் ஓடிச் சென்றனர். அழியும் பொருளை மேற்கொண்ட அவ்வேடு எட்டாது கீழ்நோக்கி நூறுவிற்கிடை அளவுக்கு முன்னே போய்விட்டது; அதனைக் கண்ணால் காணுதற்கும் கூடாதவராயினர்¢ அவ்வாறு அவ்வேடு சமணர்களை நட்டாற்றில் கைவிட்டு அகன்றுபோயிற்று. தூரத்தே சென்றவர்களும் பலவாறு சிதறுண்டவர்களும் திகைப்படைந்த வர்களுமாகிய அமணர்கள் அரசனது ஆணைக்கு அஞ்சித் திரும்பி வந்தனர். வேறொரு செயலும் இல்லாதவர்களாகிய அந்தச் சமணர்கள் வெருக்கொண்டு நடுநடுங்கித் தங்களுக்கு அழிவுக்காலம் வந்துவிட்டதென்று துணிந்து அரசன் முன்பு வந்தனர். அவர்கள் தங்கள் உள்ளத்தில் எழுந்த அச்சம் வெளிப்பட்டுவர அதனை மறைப்பவர்போல, “திருஞானசம்பந்தர் ஏட்டினை இட்டால் அதன்பின்னர் வரும் முடிவினைக் காணுங்கள்’’ என்று சொன்னார்கள்.
திருஞானசம்பந்தர் விட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்தல்
அமணர்களெல்லோரும் மதிமயங்கிக் கூற, பாண்டியனும் அவர்களை விட்டு, சிவஞான ஒளிபொருந்திய திருஞானசம்பந்தரது திருக்குறிப்பினை நோக்க,
“வாழ்க அந்தணர்; வானவர்; ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயதெல் லாம்; அரன் நாமமே
சூழ்க; வையக முந்துயர் தீர்கவே’’
என்று தொடங்கிப் பன்னிரண்டு திருப்பாடல்களைக் கொண்ட திருப்பாசுரத்தை அருளிச் செய்து ஏட்டில் எழுதுவித்து, என்றும் அழியாத மெய்ப்பொருளினையுடைய அத்திருவேட்டினை வைகையாற்றில் தமது திருக்கரத்தினாலே இட்டருளினார். உலகத்தின் கண் வாழ்வார்கட்கெல்லாம் சைவ சமயப் பொருளே மெய்ப்பொருள் என்று அறியுமாறு, திருஞானசம்பந்தர் தமது திருக்கையினாலே இட்ட அவ்வேடு, பிறவியாகிய ஆற்றிலே மாதவர்களின் மனம் எதிர்த்துச் செல்லுமாறுபோல் வைகையாற்று நீரை எதிர்த்துக் கிழித்துக்கொண்டு மேனோக்கிச் சென்றது; “எமது பெருமானாகிய சிவனே முழுமுதற் பொருள் ஆவான்’’ என்று எழுதும் அந்த ஏட்டிலே இறைவன் திருவருளாலே, “வேந்தனும் ஓங்குக’’ என்று அரசனை ஓங்கும்படி பாடியருளியமையாலே, அநபாய சோழனது செங்கோலினைப்போலப் பாண்டியனுடைய கூன் அப்பொழுதே நிமிர்ந்தது.
திரு ஏடகம் சென்று ஏட்டை அமைச்சர் எடுத்துவருதல்
திருஞானசம்பந்தர் இட்ட ஏடு வைகையாற்றின் நீரில் எதிர்த்து செல்லும்போது, தேவர்களெல்லாம் வாழ்ந்து மொழியினலே துதித்துப் பூமழை பொழிந்தார்கள்; பாண்டியன் அற்புதங்கொண்டு நின்றான்; அமணர்களெல்லாம் அஞ்சிப் பதைப்புடன் தலைகுனிந்து நின்றார்கள். ஆற்று நீரிலே எதிர்த்து மேனோக்கிச் செல்கின்ற ஏட்டினைத் தொடர்ந்து போய் எடுப்பதற்காகக் குலச்சிறையார் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு அவ்வேட்டின் பின் காற்றினும் கடிது சென்றார். திருஞானசம்பந்தர் அவ்வேடு மேற்செல்லாமல் ஓரிடத்தில் தங்கி நிற்கும் பொருட்டு ‘வன்னியுமத்தமும்’ என்று தொடங்கும் திருவேடகத் திருப்பதிகத்தைப் பாடியுருளினார். திரு. ஏடகம் என்னும் திருத்தலத்துக் திருக்கோயிலின் பக்கத்தில் இருக்கின்ற வைகையாற்றின் நடுவில் ஏடு நின்றது. குலச்சிறையார் நடு ஆற்றிற்குச் சென்று ஏட்டினைக் கையில் எடுத்து மகிழ்ச்சி பொங்கச் சிரமேல் தாங்கிக் கொண்டு கரையில் ஏறித் திருவேடகப் பெருமானை வணங்கித் துதித்து ஞானவமுதுண்ட திருஞானசம்பந்தர் பால் வந்தடைந்து அவருடைய திருவடிகளை வணங்கிப் போற்றினார் என்கிறது இந்துமதம்.
பனை ஓலையில் யார் எதை எழுதி ஆற்றில் விட்டாலும் அது நீரில் அடித்துக்கொண்டுதான் செல்லும். அதுதான் அறிவியல். ஆனால், சமணர்கள் எழுதி இட்ட ஏடு ஆற்றோடு அடித்துக்கொண்டு சென்றது. திருஞானசம்பந்தர் இட்ட ஏடு நீரை எதிர்த்துச் சென்றது என்பது அப்பட்டமான மோசடியல்லவா?
ஞானசம்பந்தர் எழுதிய எழுத்துக்களுக்கு மட்டும் சக்தி வந்து எதிர்நீச்சல் போட்டது என்பது அறிவியலுக்கு உகந்த செய்தியா?- இதுபோன்ற கருத்துக்கள் முட்டாள்தனமான அறிவுக்குப் பொருந்தாத கருத்துகள் அல்லவா? இப்படிப்பட்ட கருத்துக்களைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
ஆண்பனைகள் பெண்பனை ஆகுமா?
திருஞானசம்பந்தர் திருவோத்தூர் இறைவனைக் காலங்கள்தோறும் சென்று வணங்கித் துதித்து அங்கே விரும்பி இருக்கும் நாளில் சிவனடியார் ஒருவர் திருஞானசம்பந்தர் திருமுன்பு வந்து அழுது வணங்கி நின்று, “சிவபெருமானுக்காக அடியேன் பயிரிட்டு வளர்த்த பனைமரங்களெல்லாம் மிக உயர்வாக வளர்ந்தும் ஆண்பனைகளாகிக் காய்க்காமல் போயின; அதனைக் கண்ட சமணர்கள், ‘இங்கு நீர் வைத்து உண்டாக்கும் ஆண்பனைகள் காய்ப்பதற்கு உபாயம் உண்டோ?’ என்று மிகவும் எள்ளி நகைத்து இழிவுபடப் பேசுகின்றார்கள்; தேவரீர் அவ்விழிவைப் போக்கப் பனைகள் காய்க்கும்படி அருள்புரிய வேண்டும்’’ என்று விண்ணப்பஞ் செய்தார்.
திருஞானசம்பந்தர், சிவனடியாரின் அடிமைத் திறத்தை நோக்கி, அவர்மேல் இரக்கங்கொண்டு எழுந்து விரைந்து திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நின்று, திருவருளை இரந்து துதித்து, ‘பூத்தேர்ந்தாயன’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் திருக்கடைக்காப்பிலே ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை யோத்தூர்’ என்று அருளிச் செய்தார். அதனால் அந்த ஆண்பனைகள் எல்லாம் நிறைந்த குலைகளையுடையனவாகிக் குரும்பை பொருந்தும் பெண்பனைகளாயின. அதனைக் கண்டவர்களெல்லாம் அதிசயங் கொண்டார்கள். திருஞானசம்பந்தர் இறைவன் திருவருள்பெற்று ஆண்பனைகள் காய்த்துப் பழுக்கும் தன்மை அடைய அன்பர் கருத்தை நேரே முடித்துக் கொடுத்தருளி அப்பதியில் வீற்றிருந்தருளினார். அதனைக் கண்ட சமணர்கள், திருஞானசம்பந்தருடைய செய்கையைக் கண்டு திகைத்து அந்நாட்டினை விட்டு ஓடினார்கள் என்கிறது இந்து மதம்.
ஆண்பனை பூ மட்டுமே பூக்கும்; காய்க்காது என்பதே தாவர இயல் உண்மை. ஆனால், திருஞானசம்பந்தர் பக்தியுடன் பாட்டுப் பாடியதும் ஆண் பனையில் பனங்காய்கள் காய்த்துக் தொங்கின என்று இந்து மதம் கூறுகிறது.
சமணத்தை இழிவுபடுத்தி சைவத்தை உயர்த்த பார்ப்பனர்கள் சூழ்ச்சியாகக் கூறும் மோசடி செய்தியல்லவா இது?
அறிவியல் உண்மைக்குப் புறம்பாக, ஆண் பனை காய்த்தது என்று முட்டாள்தனமாகக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்...)