Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> ஜனவரி 16-31 2019 -> ”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”

”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”

 

நேர்காணலில் எழுத்தாளர் இமையம்

உங்களுடைய முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன. இன்றும் அது விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று?

நாவலின் கதையும், கதை சொல்லப்பட்ட விதமும் கதையின் சமூகப் பொருத்தமும் இதை சாத்தியமாக்கிற்று. கோவேறு கழுதைகள் நாவல் விவரிக்கும் உலகம், வாழ்க்கை, அதைப் படிக்கிற ஒவ்வொரு வாசகனோடும் ஏதோ ஒரு விதத்தில் அது உறவு கொள்கிறது. அந்த உறவு தான் 25 ஆண்டுகள் கடந்தபிறகும் இன்றும் நாவலை உயிரோடு வைத்திருக்கிறது. இன்னும் பல காலம் வைத்திருக்கும்.

இலக்கியப் படைப்புகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ஒவ்வொரு எழுத்தாளரும், விமர்சகரும், வாசகரும் தங்களுக்கேற்றவாறு வெவ்வேறு விதமான விளக்கங்களைக் கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் கூறுகிற விளக்கம் அவரவர்க்கு உரியதே. அதில்கூட காலத்திற்கேற்ப வரையறைகள் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இலக்கியத்திற்கு இதுதான் எக்காலத்திற்குமான வரையறை, இலக்கண மென்று ஒருபோதும் வரையறுக்க முடியாது. காலத்திற்கேற்ப அது மாறிக் கொண்டேயிருக்கும். இலக்கியத்திற்கு வரையறை சொல்வது என்பதைவிட இலக்கியம் ஏன் எழுதப்பட வேண்டும், ஏன் படிக்கப்பட வேண்டும்? இலக்கியத்திற்கும் மனிதர் வாழ்க்கைக்குமான உறவென்ன என்று கேட்பது தான் சரியாக இருக்கும்.

சரி, இலக்கியங்கள் ஏன் எழுதப்பட வேண்டும்?

ஒவ்வொரு சமூகமும், மொழியின் வழியாகத் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மொழியின் வழியாகத் தான் ஒவ்வொரு பொருளையும் புரிந்து கொள்கிறோம்; ஒவ்வொரு செயலையும் அடையாளப்படுத்துகிறோம். ஒரு சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், மரபு என்பது மொழியின் வழியாகத் (இலக்கியத்தின் வழியாக) தான் சேமிக்கப்பட்டுவருகிறது.

முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், மரபு ஆகியவை அடுத்த தலைமுறையினருக்கு மொழியின் வழியாக கையளிக்கப்படுகிறது. அவ்வாறு கையளிக்கப்படுகிற பண்பாடு, கலாச்சாரம், மரபு (சரியாக இருக்கலாம், தவறாக இருக்கலாம்) போன்றவைதான் அச்சமூகத்தின் வாழ்வியல் நெறியாக, ஒழுக்கப் பண்பாக, சமூக அறநெறியாக, கல்வியாக இருக்கிறது. ஆகவே, இலக்கியம் என்பதை கல்வியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கான அறநெறியாக, ஒழுக்கப் பண்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று எழுதப்படுகிற இலக்கியங்கள் தான் நாளைய தலைமுறைக்கான கல்வி என்பதால் இலக்கியம் கட்டாயம் எழுதப்படவேண்டும்.

உங்கள் படைப்புகளின் வழியாக சித்தரித்துக் காட்ட விரும்பும் உலகம் எத்தகையது?

நான் வாழ்கிற காலத்தை, நான் வாழ்கிற சமூகத்தை, நான் வாழ்கிற இடத்தை எவ்விதமான உள்நோக்கங்களின்றி சமரசங்களின்றி, பாவனைகளின்றி, சார்புகளின்றி உள்ளது உள்ளபடியே சித்தரித்துக் காட்ட விரும்புகிறேன். என் எழுத்துகள் மனிதர்களைப் பற்றியவை; அவர்களுடைய பெருமைகள், சிறுமைகள், கண்ணீர், காயங்கள் பற்றியவை. மாயாஜாலங்கள் பற்றியவையல்ல; இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்பவையல்ல; அடுத்த பிறப்புக்கான பூர்வஜென்ம பலங்களை எழுதுபவையல்ல.

 “பிராமணர்’’ அல்லாதோரால் எழுதப்படுகிற எல்லா இலக்கியங்களுக்கும், ஜாதி அடையாளமோ அல்லது நிலவியல் அடையாளமோ குத்தப்படுகிறது. இந்த அடையாளங்களைத் தருபவர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.

திராவிட, மார்க்சிய இயக்கங்களின் இலக்கியங்களை பிரச்சார இலக்கியங்கள், அரசியல் இலக்கியங்கள் என்று வகைப் படுவத்துவதை சரியென்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக இல்லை. திராவிட, மார்க்சிய, நவீன, தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலை என்று வகைப்படுத்துவதில், அடையாளப் படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்க்கை என்பது எந்த அடையாளத்துக்குள்ளும் அடங்காதபோது, அது குறித்து எழுதப்படும் இலக்கியங்களுக்கு மட்டும் அடையாளம் அவசியமா? கொங்கு இலக்கியம், கரிசல், நாஞ்சில், நடு நாட்டு இலக்கியம் என்பதெல்லாம் ஜாதியை முன்னிறுத்தும் அடையாளங்களே! திராவிட, மார்க்சிய இலக்கியங்கள் என்பவை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அடையாளப் படுத்தப்படுபவை. அரசியல் இலக்கியம், ஜாதிய இலக்கியம் என்று பாகுபடுத்துவது நேர்மையற்ற செயல். மார்க்சிய, திராவிட இயக்க இலக்கியங்கள் தமிழ்ச் சமூக வாழ்க்கையில் குறிப்பிட்ட கால வாழ்வை முழுமையாகப் பதிவு செய்தவை.

கொள்கை இமையம்

எழுத்தாளர் இமையம்! தன் கருத்துகளை ஆணித்தரமாக முன் வைப்பவர். மாறாத, வழுவாத, மறைத்துக் கொள்ளாத திராவிட இயக்கப் பற்றாளர். நவீன இலக்கியவாதிகள் என்போர் திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்த அவதூறுகளை எழுப்பிய காலத்தில், வலுவாக எதிர்நின்றது இமையத்தின் குரல்.

1994இல் வெளிவந்த ‘கோவேறு கழுதைகள்’ அன்றுமுதல் இன்றுவரை தமிழின் முதன்மை நாவல்களுள் ஒன்றாக அடையாளப் படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஆறுமுகம் (1999), செடல் (2006), எங்கதெ (2015), செல்லாத பணம் (2018), ஆகிய நாவல்களையும், மண்பாரம் (2002), வீடியோ மாரியம்மன் (2008), கொலைச்சேவல் (2013), சாவு சோறு (2014), நறுமணம் (2016) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், பெத்தவன் (2013) என்ற நெடுங்கதையையும் எழுதியுள்ள இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் முதன்மைப் பட்டியலில் இடம் பெறுபவை.

அக்னி அஷ்ர விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள இவருக்கு அண்மையில் கனடா நாட்டின் தமிழ் இலக்கியத் தோட்டம் “இயல் விருது’’ வழங்கவிருக்-கும் செய்தி வெளிவந்துள்ளது. இயல் விருது பெற இருக்கும் இமையம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

கேள்வி: இலக்கியத்தில் ஜாதி இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. பறையர்கள் எழுதினால் அது தலித் இலக்கியம். பிள்ளைமார் எழுதினால் அது நாஞ்சில் நாட்டு இலக்கியம். கவுண்டர்கள் எழுதினால் அது கொங்கு இலக்கியம். நாயக்கர்கள் எழுதினால் கரிசல் காட்டு இலக்கியம். இப்படி ஒவ்வொரு ஜாதிக்கும் ஓர் இலக்கிய முத்திரை குத்தப்படுகிறது, அல்லது நிலவியல் முத்திரை குத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில், தஞ்சாவூரில், கும்பகோணத்தில், சென்னையில், அமெரிக்காவில், இங்கிலாந்தில் வாழ்கிற தமிழ் “பிராமணர்கள்’’ எழுதுகிற இலக்கியங்களுக்கு பிராமண இலக்கியம் என்று பெயரில்லை. அவர்கள் எழுதுவது சுத்த -தூய தமிழ் இலக்கியங்கள். “பிராமணர்கள்’’ எழுதுகிற இலக்கியத்திற்கு ஜாதி அடையாளமோ, நிலவியல் அடையாளமோ கிடையாது. ஆனால், “பிராமணர்’’ அல்லாதோரால் எழுதப்படுகிற எல்லா இலக்கியங்களுக்கும், ஜாதி அடையாளமோ அல்லது நிலவியல் அடையாளமோ குத்தப்படுகிறது. இந்த அடையாளங்களைத் தருபவர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். பிராமணர் அல்லாத எழுத்தாளர்கள் என்னை எப்படியாவது ஜாதி அடையாளத்திற்குள்ளோ, நிலவியல் அடையாளத்திற்குள்ளோ அங்கீகரியுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இது பெரிய அவமானம். ஓர் இழிவு. அமெரிக்காவில் வாழ்கிற ஒரு பிராமணர் எழுதுகிற இலக்கியம் தமிழ் இலக்கியமாக இருக்கும்பொழுது, கடலூர் மாவட்டத்தில் வாழ்கிற என்னுடைய இலக்கியம் எப்படி தமிழ் இலக்கியமாக இல்லாமல், ஜாதி இலக்கியமாக, நிலவியல் இலக்கியமாக இருக்க முடியும்?

அரசியல் இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா?

முடியாது. எழுதுவது என்பதே அரசியல் செயல்பாடு தான். நாம் யார் சார்பாக நின்று எழுதுகிறோம் என்பது தான் எழுதப்படுகிற இலக்கியத்திற்கு வலிமை சேர்க்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதும், ஆவிகள் உலகத்தை எழுதுவதும் உண்மைக்குப் புறம்பானவை. உண்மையை எழுதுகிறவனே நிஜமான எழுத்தாளன்.

நூற்றாண்டைக் கடந்துவிட்ட திராவிட இயக்கங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

திராவிட இயக்கங்களின் செயல்பாட்டாளர் களென்று எல்லோரையும்,  என் பார்வையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோரை சொல்ல முடியாது. இன்று சிறு சிறு குழந்தைகள் கூட திராவிட இயக்கங்களின் தேவைகளை உணர்ந்திருக்கிறார்கள். திராவிட இயக்கங்களின் உழைப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்வரும் காலங்களிலும் திராவிட இயக்கங்களின் பாதை என்பது ஒளிரும்; மிளிரும்.

திராவிட இயக்கங்களின் எழுத்து இப்போது தேக்க நிலை அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?

நானே திராவிட இயக்க எழுத்தாளன் தான். என்னை விட நவீன இலக்கியத்தில் பெரிய எழுத்தாளர் இருக்கிறார்கள் என்று நிரூபித்தால், திராவிட இயக்க இலக்கியம் தேக்க நிலை அடைந்துவிட்டதாகக் கருத முடியும். என்னுடைய நாவலே 25 ஆண்டுகளாக தொடர்ந்து படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பேசப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிற நிலையில் திராவிட இயக்க இலக்கியங்கள் தேக்க நிலை அடைந்துவிட்டதாக எப்படி கூற முடியும்?

இன்றைக்கும் திராவிட இயக்கங்களின் தேவை இருக்கிறதா?

நிச்சயமாக தமிழகத்தில், இந்தியாவில் ஜாதி சார்ந்த இழிவுகள் இருக்கும்வரை, மதம் சார்ந்த கற்பிதங்கள் இருக்கும்வரை, அறிவியல் தன்மைக்கு எதிராக கதைகளின் வழியாக, புராணங்களின் வழியாக, இதிகாசங்களின் வழியாக, கட்டுக்கதைகளின் வழியாக மூடநம்பிக்கைகள் பரப்பப்படும் வரை, பெண்ணடிமைத் தனம் இருக்கும்வரை, சமூகநீதி தேவைப்படும் வரை, திராவிட இயக்கங்களின் தேவை இருந்துகொண்டே இருக்கும்.’’ என்றார் இமையம். தொடர் பயணம், புத்தகக் கண் காட்சி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் என பரபரப்புகளுக்கு மத்தியில் ‘உண்மை’ பொங்கல் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். சுருங்கக் சொல்லி விரித்துரைக்கும் அவர் பாணியிலேயே பதில்கள் அழுத்தமாகவும் நேர்மையாகவும் வந்தன. 

சந்திப்பு : சமா இளவரசன்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”  in FaceBook Submit ”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”  in Google Bookmarks Submit ”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”  in Twitter Submit ”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”  in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.