Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> டிசம்பர் 01-15 2019 -> நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!

நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!

பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் அ.இராஜசேகரன்

அவர்களுடன் நேர்காணல்

ஆசிரியரின் பள்ளிப் பருவம் தொட்டு இன்றுவரை தோழமையில் இருக்கும் பத்மஸ்ரீ டாக்டர் அ.இராஜசேகரன் அவர்கள் மருத்துவத் துறையில் பல விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, பி.சி.ராய் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என இவர் மருத்துவத் துறையில் பெறாத விருதுகளே இல்லை எனலாம். அவரை ஆசிரியரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு நேர்காணல் செய்கையில் பல பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதோ அவை:

ஆசிரியருடன் உங்களின் முதல் சந்திப்பு?

ஆசிரியர் கி.வீரமணி எனக்கு பள்ளிப் பருவத்திலேயே அறிமுகமானவர். கடலூர் எஸ்.பி.ஜி. பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். நான் சாதாரணமான மாணவர். அவர் அப்போதே எல்லோருக்கும் அறிமுகமானவர். அந்த மாணவப் பருவத்திலிருந்து எனக்கும் அவருக்குமான நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஓர் இணையான வயதோடு சேர்ந்து பயணமாகிறோம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் அறிவியல் பாடம் எடுத்துப் படிக்கும்போது, அவரும் அறிவியல் பாடத்தை எடுத்தார். பின் அதில் படம் வரைவதற்கு விருப்பமின்றி, அதை விட்டு பொருளாதாரத்தை (ஹானர்ஸ்) படித்தார். அதில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகவும் வந்து ‘கோல்டு மெடல்’ பெற்றார்.

நான் மருத்துவம் படிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்கையில் அவர் பிராட்வேயில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதிலும் சிறப்புறத் தேர்ச்சி பெற்றார். அப்போதும் எங்களுக்குள் நட்பு தொடர்ந்தது. என்னை பெரியாரிடமும் அறிமுகப்படுத்தினார். என் குடும்பத்தில் அனைவரிடமும் அவருக்கு நல்ல பழக்கமுண்டு. எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவரைப் பார்க்கின்றனர். மக்கள் பணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம். நானும் பெரியார் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். அப்போது அவரிடம் அதிகம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆசிரியரிடம் உங்கள் நட்பில் மறக்க முடியாத நிகழ்வு எது?

நான் விடுதியில் தங்கிப் படித்தேன். அவர் கடலூரிலிருந்து இரயில் பயணம் செய்து வந்து படித்தார். அப்போதிருந்த நண்பர்களை இன்னும் மறக்காமல் தொடர்பில் வைத்திருக்கிறார். என்னுடைய

அப்பா இறந்தபோது என்னோடு இருந்து எல்லா வகையிலும் உதவினார். என் குடும்பத்தில் பதினோரு பேர். அவர்கள் அத்தனைப் பேருக்கும் இவர் நல்ல பழக்கம் கொண்டவர். தந்தையின் இறப்பின்போது என்னோடு இருந்து ஆறுதல் கூறி என்னைத் தேற்றி ஆற்றுப்படுத்தியவர்.

ஆசிரியருடன் தொடர்பில் உள்ள நீங்கள் அவரிடம் உள்ள சிறப்பியல்பு பற்றி கூறுங்கள்?

ஆசிரியர் கி.வீரமணி மற்றவர்களை மதிப்பவர். எல்லோரையும் அனுசரித்துப் போகும் குணம் கொண்டவர். எல்லோரையும் உற்சாகப்படுத்தி அவர்களை வேகம் பெறச் செய்வார். பெரியார் திடல் மேலும் மேலும் உயர்ந்து வருவதற்கு அவருடைய விடா முயற்சியே முக்கியக் காரணம். எல்லோரிடமும் நல்ல தொடர்பு கொண்டவர். அவரைப் பற்றிக் கூற வேண்டிய முக்கியமான செய்தி அவர் உண்மையானவர். நேரில் ஒன்றும் மறைவில் ஒன்றுமாய் பேசும் தன்மையில்லாதவர். எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். பெரிய அரசியல் பதவியில்லாத நிலையிலும் பல அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக இயங்குகின்ற ஆற்றல் கொண்டவர்.

டாக்டர் அ.இராஜசேகரன், தந்தை பெரியார், ஈ.வெ.ரா.மணியம்மையார், தில்லைநாயகி (17.09.1972)

தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் தந்தை பெரியாருக்குமான அனுபவம்?

ஒருமுறை என் வீட்டுக்கு விருந்துக்கு அவரை அழைத்திருந்தோம். வந்த அவர் வீட்டில் செய்த உணவுகளைச் சாப்பிட்டு விட்டு உடனே அவை நன்றாக இருக்கின்றன என பாராட்டினார். அவருடைய பெரிய குணமே மற்றவர்கள் எது கொடுத்தாலும் உடனே சாப்பிட்டுவிட்டு பாராட்டிவிடுவார். பெரியாரிடம் நல்ல குணங்கள் பல உண்டு. அவருடைய நேர்மை, பொதுத்தொண்டு முதலியவை சிறப்பானவை. தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் மக்களால் இன்றும் பாராட்டப்படுவதற்கு அவையே காரணங்கள். அவ்வளவு பெரிய மனிதர் 1972இல் எங்கள் குடும்பத்தின் 3ஆவது குடும்ப மலரைப் பார்த்துவிட்டு, அதைப் பற்றி 25 பக்கத்திற்கு வாழ்த்துச் செய்தி எழுதினார்.  என் வீட்டில் அனைவரும் போற்றும் பெரிய மனிதர் அய்யா அவர்கள்.

நீங்கள் மருத்துவர்; ஆசிரியர் மக்கள் பணி செய்து வருகிறார். அவருடைய பணியைப் பற்றி கூறுங்கள்?

நான் மருத்துவத் துறையில் சாதனையாளர் எனில், ஆசிரியர் மக்கள் தொண்டில் சிறப்புச் செய்து வருகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை ஊக்கப்படுத்தி அவர்களை மேலே எழச் செய்வதில் ஆசிரியரின் பணி போற்றக்கூடிய ஒன்று. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த யாராவது அய்-ஏஎஸ், அய்பிஎஸ் ஆனால், அவர்களை பெரிய அளவில் கொண்டாடுவார். எந்தவிதமான அரசு ஆய்வு ரிப்போர்ட் வந்தாலும் அதை உடனே படித்து, அதிலுள்ள சாதக, பாதகங்களை எடுத்து அறிக்கை எழுதும் அவரது பணி மக்கள் வியந்து போற்றக்கூடியதாகும்.

தந்தை பெரியாருடன் ஆசிரியர் மற்றும்

டாக்டர் அ.இராஜசேகரன்

உங்களின் வளர்ச்சியில் திராவிட இயக்கப் பின்னணி பற்றி கூறுங்களேன்?

குறிஞ்சிப்பாடியில் இரண்டு மூன்று குடும்பங்கள்தான் தந்தை பெரியாரின் சிந்தனைகள் கொண்ட குடும்பம். எங்கள் குடும்பம் அந்தக் காலத்திலேயே தமிழ் நெறிப்படி திருமணம் செய்தது, அய்யா அவர்களின் வழியைப் பின்பற்றியதால்தான்.

ஆசிரியரின் உடல்நலத்திற்கு மருத்துவரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

ஆசிரியர் உடல்நலத்தில் தொய்வு ஏற்படும்போது உடனே அதனை உரிய மருத்துவர்களைக் கொண்டு சரி செய்வார். அவரிடம் மருத்துவ உலகில் உள்ள பெரிய மருத்துவர்களின் சிறப்பு பட்டியல் வைத்திருப்பார். அவர்களிடம் நல்ல தொடர்பிலும் இருப்பார். சில அறுவை சிகிச்சையின்போது நானும், டாக்டர் காமேஷ்வரனும் அவருடன் மதுரைக்குச் சென்று வந்துள்ளோம்.

 நட்பின் தழுவலில் மகிழும் ஆசிரியர்

பெரியாருக்கும் ஆசிரியருக்குமான தொடர்பு பற்றி?

பெரியாருக்கு இருக்கும் சிறுநீரக பிரச்சினையில் அவருடன் முழுநேரமும் ஆசிரியர் இணைந்து பணியாற்றினார். அந்த நேரத்தில் அவருக்கு முழு பக்கபலமாகச் செயல்பட்டவர் ஆசிரியர் மட்டுமே! சில நேரங்களில் வலி தாங்க முடியாமல் பெரியார் கத்தவும் செய்வார். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பொதுக்கூட்டம் எனில், அங்கு சரியாகச் சென்று கூட்டத்தில் கலந்து கொள்ளும் குணம் கொண்டவர். இதற்கு முழுத் துணையாய் இருந்தவர் ஆசிரியர். ஆசிரியர் மேல் தந்தை பெரியாருக்கு நல்ல புரிதலும், நம்பிக்கையும் இருந்தது.

தந்தை பெரியாரின் சமூக சிந்தனைகள் போதிய அளவு பரவியுள்ளனவா?

மக்களைச் சிந்திக்கச் செய்தவர் பெரியார். மக்களிடம் மண்டிக்கிடந்த மூடத்தனங்களை  மாற்றி அமைத்தவர். நாளடைவில் அவருடைய கருத்துகள் மக்களிடம் இன்னும் பெருமளவில் சென்று சேரும். வெளிஉலகில் பெரியாரின் ஆளுமையை மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.  இப்போதைய ஆட்சியில் நடைபெறும் அவலங்களை நோக்கும்போது, பெரியார் இன்னும் அதிகம் முன்பைவிட தேவைப்படுகிறார் என்பது உறுதியாகிறது.

ஆசிரியர் ‘மனிதநேய வாழ்நாள் சாதனை விருது’ பெற்றது பற்றி உங்களின் உணர்வு?

அமெரிக்க மனிதநேய சங்கம் தந்தது போல  இன்னும் ‘100’ விருதுகள் அவருக்குச் சேரவேண்டும். அவருக்கு விருது வாங்குவதில் பெரிய ஈடுபாடு இல்லை. மக்களுக்குத் தொண்டு செய்வதையே அவருடைய பணியாக செய்கிறார். விருது கொடுக்க சிலர் முன்வந்தபோதும் அதனை அவர் தவிர்த்துமிருக்கிறார். விருதுகள் அவருக்குப் பொருட்டல்ல.

உங்கள் குடும்பத்தில் யாராவது நேரிடையாக திராவிட இயக்கத்தில் ஈடுபடுகின்றனரா?

இல்லை. எங்களுக்கு திராவிட இயக்கத்தோடு நேரடியான தொடர்பில்லை. ஆசிரியர் எங்களின் குடும்ப நண்பர். மேலும் என் குடும்பத்தில் ஒருவர். அவருடைய ‘வாழ்வியல் சிந்தனை’ தொடரை என் தம்பி ராஜ்மோகன் தொடர்ந்து படித்து என்னிடம் எடுத்துக் கூறுவார். நானும் அந்தப் பகுதியை விரும்பிப் படிப்பேன். அதைப் பற்றியும் ஆசிரியரோடு பேசுவேன்.

ஆசிரியருக்கான பிறந்த நாள் வாழ்த்தாக நீங்கள் கூற நினைப்பது?

ஆசிரியர் செய்துவரும் தொண்டறப் பணி பாராட்டிப் போற்றத்தக்கது. ஆசிரியருக்கும் எனக்குமான தொடர்பு தினமும் நடக்கும். மக்கள் நலனுக்காக ஈடுபடவேண்டிய நிலையில் எங்கள் தொடர்பு இருக்கும். எங்கள் குடும்பத்தில் ஒரு நண்பர் ஆசிரியர். அவருடைய துணைவியார் மோகனா  அம்மையாரும் எங்களிடம் குடும்ப முறையில் நட்புக் கொண்டவர். அவர்களிருவரும் இன்னும் நீண்ட நாள்கள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

இடஒதுக்கீடு விஷயத்தில் அம்மையார் ஜெயலலிதாவுடன் சேர்ந்து அவருக்கு வழிகாட்டியாக 69% இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்தார். அதனை 9ஆவது அட்டவணையில் இணைத்து யாரும் எதுவும் செய்ய முடியாதபடி புத்திகூர்மையோடு செயல்படுத்தச் செய்த பெருமை கொண்டவர் ஆசிரியர். டெல்லியில் பெரியார் மய்யம் அமைக்க ஆசிரியரோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். அவருடைய தொண்டு இன்னும் சிறக்க வேண்டும்; அதற்கு அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்! in FaceBook Submit நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்! in Google Bookmarks Submit நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்! in Twitter Submit நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்! in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.