கோவைக்கருகில் நமது கிராம விவசாயிகளின் நிலங்களையும் அரசு நிலங்களையும் ஆக்கிரமித்து, ஓர் ஆசிரமத்தை அமைத்து (இது சம்பந்தமான வழக்குகள் - ரெவின்யூ துறை போட்ட வழக்குகள் கிடப்பில் போடப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.) தன்னிடம் உள்ள யோகா பயிற்சி, சில வகையான ஜால வித்தைகளை, பக்தி வேஷத்திற்குப் பலியாகி உள்ள அப்பாவி மக்கள் - அவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் கூட - அவர்களிடம் ஆதரவு பெற்று, நவீன அறிவியல் மின்னணுவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியும், விதவிதமான வகுப்புகளை நடத்திடும் ‘வித்தையில்’ ஈடுபட்டு, தனது ஆசிரமத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் சேர்த்து வைத்துள்ள அய்டெக். யோககுரு இந்த ஈஷா மய்யத்தில் இவர் மக்களை வசியப்படுத்த நல்ல “மார்க்கெட்டிங் டெக்னிக்குகளை’’ எல்லாம் கையாண்டே பிரபலமானார்.
சிவராத்திரி என்பார்; கடவுளன்பர் கூட்டம் என்று கார்ப்பரேட் செய்துவிட்டு உயர்தர விளம்பரங்களைச் செய்து அப்பாவி மக்களை பக்தி மூலம் ஈர்ப்பார்.
ஏதோ பொது மனிதர்போல, ‘இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?’ என்பதுபோல பொதுவான வாழ்வியல் தத்துவம் என்று துவங்கி, தங்களின் சனாதனத்திற்கு மெல்ல இழுத்திடும் தந்திரமான பேச்சுகளைப் பேசி, ஏமாந்த காலத்தில் புலி வேஷம் போட்டு ஆடுபவரைப் போல ஆடி, இப்போது பிரதமர் மோடியை அழைத்து அமர வைத்து, அதன் மூலம் அரசு இயந்திரமே தன் வயம் என்று மிரட்டாமல் மிரட்டிவரும் இவரைப் போலவே, தஞ்சை மாவட்ட பாபநாசத்தின் அக்கிரகாரத்திலிருந்து வீட்டை விட்டு ஓடிப்போன ரவி என்ற பார்ப்பனர், ‘வாழும் கலை’ சர்வதேச நிபுணராக பிரம்மஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆகிய இவர், பல கோடி சொத்து சேர்த்துவிட்டார்.
அவரும் ஈஷா சாமியாரைப் போலவே ‘வித்தைகளில்’ கைதேர்ந்தவர். அவருக்கு பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதம் பல கோடி. இன்னும் அந்தத் தொகை கட்டப்பட்டுவிட்டதா? என்பதே தெரியவில்லை. இப்படி இந்தச் சாமியார்கள் அரசியலில் - மத்தியில் காவி ஆட்சி ஏற்பட்டதிலிருந்து தனிக்காட்டு ராஜ்யமே நடத்தி வருகிறார்கள்!
அண்மையில் ஈஷா அய்டெக் சாமியார் ஓர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவே வெளிவந்து விட்டார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை - சட்டத்தை ரத்து செய்து, வடபுலத்தில் ஆர்.எஸ்.எஸ். சாமியார்கள் கையில் கோயில் வியாபாரம் செழித்தோங்குவது போலவே, இங்கும் நீதிக்கட்சியில் - பானகல் அரசரால் நிறைவேற்றப்பட்ட (1925இல்) (Hindu Religious Endowments Bill) இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் கணக்கு வழக்குப் பார்க்கப்படும் தணிக்கையும் நிருவாக கட்டுப்பாடும் இருப்பதை அறவே ரத்து செய்து, பார்ப்பனர்கள் பகல் கொள்ளை சுரண்டலுக்குரிய வகையில் ஏகபோகமாக (1925க்கு முந்திய நிலையைப் போல) ஏற்படுத்த திட்டமிட்டு, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரத்தின் மூலமும், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்ததின் மூலமும் முயற்சித்து வருகிறார்கள்!
தயானந்த சரஸ்வதி என்ற புதுப்பெயர் (குடவாசல் அருகே உள்ள மஞ்சுக்குடி நடராஜ அய்யர்) சூட்டிக் கொண்டு வலம் வந்தவர் வழக்குத் தொடுத்தார்.
சு.சாமிகளும் மற்ற தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் குழுவும் இணைந்து ‘இந்துக் கோயில்களை மீட்போம்’ என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டை ரத்து செய்ய பிரச்சினை - பெருமுயற்சிகளும் செய்து வருகிறார்கள். இதில் இந்த ஈஷா, தான் பெரிய புத்திசாலி என்று கருதி, ஒரு பெரிய கேள்வியாக நினைத்து ஒன்றை எழுப்பியுள்ளார்.
“மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டு இந்துக் கோயில்களை நிர்வகிக்க தமிழ்நாடு அரசு முயல்வது சரிதானா?’’
அட, அதி மேதாவியே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26வது கூறுகளை (Articles) படித்துப் பார்த்துப் பேசுங்கள் என்பதே நமது பதில்!
கோயில் பெருச்சாளிகள் சுரண்டித் தின்று பலகாலம் கொழுத்ததைத் தடுக்கவே இந்துஅறநிலையச் சட்டம்.
இது ஒரு தணிக்கைத் (Audit) துறைதான். அர்ச்சனை செய்வது, கும்பாபிஷேகம் நடத்துவதுகூட அதன் ஒரிஜினல் வேலை அல்ல.
தி.மு.க. ஆட்சி அறிஞர் அண்ணா தலைமையில் ஏற்பட்ட 1967இல் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது தில்லை நடராசர் கோயிலுக்குப் போய் பிறகு மாலை அண்ணாமலை நகரில் பேசும்போது, அமைச்சர் என்கிற முறையில் எனது கடமை; அளந்து போடும் 8 மரக்காலும் சரியாக இருக்கிறதா? 6 மரக்கால்தான் இருக்கிறதா? என்று தணிக்கை பார்ப்பதுதான் எனது பொறுப்பே தவிர, பக்தி, பூஜையில் ஈடுபடுவதல்ல என்று தெள்ளத்தெளிவாக இதன் தத்துவத்தை விளக்கினார்.
இச்சட்டம் வந்ததால் எவ்வளவு கோயில் சுரண்டல் தடுக்கப்பட்டது, முன்பு எப்படி இருந்தது என்பதை ‘கோவைகிழார்’ என்னும் பெயரில் ‘கோயிற் பூனைகள்’ என்னும் நூலை கோவை சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதியுள்ளாரே! படித்துப் பார்க்கட்டும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிருவாகம் அரசிடம் இருப்பதும், சமூக சீர்திருத்தம் செய்வதும் மதத்தின் விஷயங்களில் தலையிடுவதில்லை என்றும் தெளிவுபடுத்தப் பட்டிருப்பதோடு,
மத சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது அல்ல என்பதையும் அக்கூறுகளில் (Articles) நன்கு விளக்கப்பட்டுள்ளது.
Articles 26 ஆவது கூறு கூறுவதென்ன?
“The broad principle is that a state made law can regulate the adminstrration of property of religious endowments.”
மத உரிமை என்பது பற்றிய பிரிவில்,
“Subject to public order, morality and health” என்ற நிபந்தனைகள் _ விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்று உள்ளது.
எனவே, திசைதிருப்பல்கள் உங்களுக்கு கைகொடுக்காது. உங்களது கார்ப்பரேட் சுரண்டல்களைத் துவக்க சட்டமோ, நீதிமன்றமோ, மக்கள் மன்றமோ ஒரு போதும் இடந்தராது; தரக் கூடாது.
- கி.வீரமணி,
ஆசிரியர்.